Published:Updated:

ENG vs IND: இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறும் இந்தியா; சஹாலின் வீரதீரங்கள் வீண்!

Topley ( ECB )

கடந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா என்ன செய்து கொடுத்தாரோ அதே விஷயத்தை இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு டாப்லி செய்து கொடுத்தார். பும்ரா வீழ்த்தியதை போன்றே மேட்ச் வின்னிங் 6 விக்கெட் ஹால்!

ENG vs IND: இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறும் இந்தியா; சஹாலின் வீரதீரங்கள் வீண்!

கடந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா என்ன செய்து கொடுத்தாரோ அதே விஷயத்தை இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு டாப்லி செய்து கொடுத்தார். பும்ரா வீழ்த்தியதை போன்றே மேட்ச் வின்னிங் 6 விக்கெட் ஹால்!

Published:Updated:
Topley ( ECB )

முதல் ஓடிஐ போட்டியை அப்படியே ரீவைண்ட் செய்ய வேண்டும். ஆனால், அந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு என்ன நிகழ்ந்ததோ அது அப்படியே இங்கே இந்தியாவிற்கு நிகழ வேண்டும். இப்படி ஒரு விநோத கட்டுப்பாடோடு ஒரு போட்டி நடந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான சாட்சியாகத்தான் அமைந்திருக்கிறது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டி.

முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
Chahal
Chahal
ICC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். கடந்த போட்டியின் தாக்கத்தில் முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மீண்டும் கோலி இடம்பெற்றிருந்தார்.

ரோஹித்தின் டாஸ் முடிவு, இந்திய அணிக்கு நல்ல விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 49 ஓவர்களில் 246 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். கடந்த போட்டியை போல பும்ராவிடம் சிக்காவிட்டாலும், இங்கிலாந்து தடுமாறவே செய்தது. இந்த முறை அந்தத் தடுமாற்றத்தைக் கொடுத்தவர் சஹால். பும்ராவும் ஷமியும் தங்களின் முதல் ஸ்பெல்லை வீசி சென்றனர். அதில் விக்கெட்டே இல்லை. இதனால் 10 ஓவர் முடிவதற்குள்ளாகவே ஹர்திக் பாண்டியா அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ராயின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியா விக்கெட் வேட்டையை தொடங்கி வைக்க அடுத்து சஹால் புகுந்து அசரடித்தார். 15-22 இந்த ஓவர்களுக்குள் பேர்ஸ்ட்டோ, ரூட், ஸ்டோக்ஸ் என மூன்று பெரிய தலைகளையும் காலி செய்தார்.
Chahal
Chahal
ICC

இந்த மூவரில் பேர்ஸ்ட்டோ போல்டு ஆகியிருந்தார். ரூட்டும் ஸ்டோக்ஸூம் lbw ஆகியிருந்தனர். மூவருமே ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் முயற்சியிலேயே தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். பட்டிமன்ற பேச்சாளர்கள், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கைக் கதை சொல்பவர்கள் இனி புதிதாக சஹாலை பற்றிய கதைகளையும் கூறலாம். அப்படி ஒரு கதையை கூறும்பட்சத்தில் சஹாலின் துணிச்சலும் ரிஸ்க் எடுக்கும் தன்மையுமே அந்தக் கதையின் மையக்கருத்தாக அமையும். ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் கைக்கொண்டிருக்கும் முக்கிய சூத்திரம் ஸ்வீப் வகையறா ஷாட்களை ஆடுவதுதான். நல்ல ஃபுல் லெந்தில் தூக்கி வீசப்படும் பந்துகளில் ஸ்வீப்களை எளிதாக ஆட முடியும். இங்கிலாந்து பேட்டர்களும் இந்த மாதிரியான டெலிவரிக்களில்தான் அதிகமாக ஸ்வீப்களை ஆடுகின்றனர். சஹாலின் ஃபுல் லெந்த் டெலிவரிக்களுக்கான பதிலடியாகவும் ஸ்வீப் ஷாட்தான் இருந்தது. ஆனாலும், சஹால் டிஃபன்ஸிவ்வாக யோசித்து தனது லெந்த்தை மாற்றிக்கொள்ளாமல், வழக்கம்போல அவரது பாணியிலேயே ஃப்ளைட்டட் டெலிவரிக்களாகவே வீசிக்கொண்டே இருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டோக்ஸ் எல்லாம் தொடர்ந்து பேட்டை திருப்பி ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிக்கொண்டே இருந்தார். அப்போதும் சஹால் ஓயவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாணியில் தாக்கினார். கடைசியில் மூவரும் அவரிடமே வீழ்ந்தனர். சஹாலின் துணிச்சல்தான் அவரின் பெரும்பலம் என்பதற்கான மற்றுமொரு சாட்சி இது. சஹால் வீழ்த்திய இன்னொரு முக்கிய பேட்டரான மொயீன் அலியுமே ஸ்லாக் ஸ்வீப்பில்தான் வீழ்ந்தார்.

முக்கியமான விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் இழந்தாலும் மொயீன் அலி, லிவிங்ஸ்டன், டாப்லி போன்றோரின் கணிசமான பங்களிப்பால் இங்கிலாந்து அணி ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோரை எட்டியது.

இந்திய அணிக்கு டார்கெட் 247. பந்துவீசி முடித்த போது ஆட்டம் இந்தியாவின் கையில் இருப்பதாகவே தோன்றியது. ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாமே மாறியது. இந்திய பேட்டர்களும் திணறினர். அதுவும் இங்கிலாந்து பேட்டர்களை விட கடுமையாகத் திணறினர். கடந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா என்ன செய்து கொடுத்தாரோ அதே விஷயத்தை இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு டாப்லி செய்து கொடுத்தார். பும்ரா வீழ்த்தியதை போன்றே மேட்ச் வின்னிங் 6 விக்கெட் ஹால்!

காலங்காலமாக தொடரும் இடதுகை பௌலர்களுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் திணறல் இங்கேயும் தொடர்ந்தது.

Topley
Topley
ECB
கடந்த போட்டியிலேயே டாப்லி 5 ஓவர்களை மட்டுமே வீசியிருப்பார். அதில் 3 ஓவர்கள் மெய்டனாகியிருக்கும். கடந்த போட்டியில் டாப்லிக்குக் கிடைக்காத விக்கெட்டுகள் இந்தப் போட்டியில் கிடைத்தன.

ரோஹித் மற்றும் தவான் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இடதுகை பௌலர்களான டாப்லியும் வில்லியும்தான் முதல் 10 ஓவர்களை வீசியிருந்தனர். அதில், முதல் 4 ஓவர்களில் ரோஹித்தும் சரி தவானும் சரி ஒரு ரன்னை கூட அடிக்கவில்லை. வந்திருந்த 5 ரன்களும் லெக் பைஸின் மூலமே வந்திருந்தது. ரன்கணக்கை தொடங்காமலேயே டாப்லியின் பந்தில் ரோஹித் lbw ஆகினார். கொஞ்ச நேரம் நின்ற போதும் தவானும் டாப்லியிடமே வீழ்ந்தார். லெக் சைடில் எகிறி சென்ற பந்தில் பேட்டை விட்டு எட்ஜ் ஆனார். தரமான ட்ரைவ்கள் மூலம் கோலி சில பவுண்டரிகளை அடித்த போதும் அவரும் வில்லியின் பந்தில் வழக்கம்போல அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீழ்ந்தார். பண்ட் வந்த வேகத்திலேயே கார்ஸின் ஃபுல் டாஸ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

31 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவெல்லாம் கொஞ்சம் நின்றாலும் அது இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கப் போதவே இல்லை.
Topley
Topley
ECB

இந்திய அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட். இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கங்குலி, சச்சின், தோனி, ரெய்னா என பல முன்னாள் சூப்பர் ஸ்டார்களும் நேற்று மைதானத்தில் ஆஜராகியிருந்தனர். எக்ஸ் வீரர்களையெல்லாம் பார்த்தவுடன் இந்தப் போட்டியை ICC நாக் அவுட் என்று இந்திய பேட்டர்கள் நினைத்துவிட்டார்கள் என ஒரு மீம் உலாவிக் கொண்டிருந்தது.

இந்தப் போட்டியை பார்க்கையில் நமக்கும் அந்த 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டி நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய அணி மீண்டு வர வேண்டும். இறுதிப்போட்டியை வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டும்!