“இது அவர்களின் கோப்பை, அவர்களுக்கு எப்படி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தெரியும்’’
ஒரு பக்கா கமர்ஷியல் படத்தின் கதை என்னவாக இருக்கும்? ஒரு ஹீரோ, அவருக்கு அடி மேல் அடி விழுந்து அடிமட்டத்திற்கு செல்வார். பின்பு படிப்படியாக முன்னேறி இறுதியில் சாதிப்பார். அப்படி ஒரு கதை தான் இதுவும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற கதை. ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை டெம்ப்ளேட்டுகளும் இவர்களின் கதையில் இருக்கிறது. வாங்க கதைக்குள் போவோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசீன் 1:

மார்ச் 9 2015: இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலானப் போட்டி. இதில் எந்த அணி வெற்றிப்பெருகிறதோ அந்த அணி காலிறுதிக்குச் செல்லும் என்ற நிலை. இரண்டு அணிகளுக்கும் கட்டாய வெற்றி தேவை என்கிறபோதும் இங்கிலாந்து அணிக்கு அதில் கெளரவப் பிரச்னையும் சேர்ந்து இருந்தது (வங்கதேசம் அப்போது கத்துக்குட்டிதான்). யாரும் எதிர்ப்பார்க்காதபடி இங்கிலாந்தை வங்கதேசம் வீழ்த்துகிறது. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையிலிருந்தே வெளியேறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சீன் 2
அந்த தோல்வியினால் சமூக வலைத்தளங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் என எல்லாத் தளத்திலும் உலகமே இங்கிலாந்து அணியை வசைப்பாடுகிறது. எப்போதும் ஒரு வீரர் சொதப்பும்போது அந்த வீரருக்கு முடிவுரை எழுதும் பேனாக்கள் அன்று இங்கிலாந்து அணிக்கே முடிவுரை எழுதத் தொடங்கியது. மலேசியா அணியெல்லாம் “உங்கக் கூட எப்போ நாங்க கிரிக்கெட் விளையாடலாம்” என கேலிக் கிண்டல் செய்தது.
இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட் விழுவதை டிரஸ்ஸிங் ரூமிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் கேப்டன் மோர்கன். ’’அணியில் பெரிய மாற்றம் தேவை” என அவர் மனம் சொல்கிறது. இங்கிலாந்து அணியின் எழுச்சிக்கு விதைப்போட்டது அந்தத் தோல்விதான்.
சீன் 3
அடுத்த உலகக் கோப்பைக்கான ஸ்கெட்ச்
ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் செலக்ஷன் கமிட்டியில் மோர்கனையே கேப்டனாக நீடிக்கச் செய்கிறார். பயிற்சியாளர் மாற்றப்படுகிறார். கேப்டன் மோர்கன், பயிற்சியாளர் ட்ரேவர் பெய்ல்ஸ் இருவரும் இங்கிலாந்து அணிக்கு புதுப்பொலிவைத் தர முடிவெடுக்கின்றனர். 2015 உலகக் கோப்பையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதுபோல் அணுகினார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஆதலால் அடுத்த நான்கு ஆண்டுகளில் முழு கவனமும் 50 ஓவர் போட்டிகளின் மீதே வைத்தனர். ‘இட்ஸ் கம்மிங் ஹோம்’ என்பதை நிஜமாக்க முடிவுசெய்தனர்.

ஆட்டமுறையை மாற்ற வேண்டும் என முடிவெடுத்து அவர்களின் நோக்கத்துக்குச் சரியாக வரும் வீரர்களைத் தேடித்தேடி அணிக்குள் கொண்டுவந்தனர். ராய், பட்லர், ஸ்டோக்ஸ் என அதிரடி வீரர்களின் மீது முதலீட்டைச் செய்தனர். ஆண்டர்சன், பிராட், பெல் போன்ற முன்னணி வீரர்களை ஒருநாள் போட்டிகளிருந்து நிராகரித்தனர். தங்களது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றி புதிய ‘அக்ரெசிவ்’ அணியாக உருவெடுக்கத்தொடங்கினர். எந்த போட்டியாக இருந்தாலும் முதல் வரிசை வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் 80-க்கும் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள்.
2011-2015 காலகட்டத்தில் 10 முறை 300+ ஸ்கோர் அடித்த இங்கிலாந்து அணி, அதன் பிறகு உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை 34 முறை 300+ ஸ்கோரைக் கடந்ததே அவர்களின் மாற்றத்திற்குச் சான்று. அந்த அணுகுமுறை அவர்களுக்கு நல்ல ரிசல்ட்டையும் கொடுத்தது. 2011 -15 காலக்கட்டத்தில் 0.96 என்றிருந்த வெற்றி விகிதம் 2015-க்கு பிறகு 2.30 ஆக உயர்ந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என எல்லா அணிகளையும் வீழ்த்தி நம்பர் 1 அணியாக மாறியது. உலகிலேயே சிறந்த பேட்டிங் கொண்ட அணி இங்கிலாந்து எனச் சொல்லும் அளவுக்கு மாற்றம் முன்னேற்றம் அடைந்தது இங்கிலாந்து. இவையெல்லாம் சினிமாவைப் போல் ஒரே பாட்டில் நடக்கவில்லை. நான்கு முழு வருடங்கள் இந்த மாற்றத்திற்காக உழைப்பையும் நேரத்தையும் ஒரு கூட்டமே செலவழித்தது.
சீன் 4
ஒரு குறை
உலகக் கோப்பைக்கு எல்லாம் கைக்கூடி இருந்தாலும், இங்கிலாந்துக்கு இன்னும் ஒரு சிக்கல் இருந்தது. அவர்களின் ‘அக்ரசிவ்’ பேட்டிங் அணுகுமுறை பல ரிஸ்க்குகள் நிறைந்திருந்தது. அதை அவர்களும் உணர்ந்திருந்தனர். தொடர்ந்து 300 ரன்கள் அடித்தாலும் ஏதோ ஒரு போட்டி சரியாக அமையாமல் போகலாம். அப்போது அணியை காப்பாற்ற பெளலிங்கில் மேட்ச் வின்னராக இருக்க ஒருவர் இருக்கிறாரா? பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 300-350 ரன்கள் அடித்தாலும் அதைத் தக்க வைக்க பெளலிங் அட்டாக் இருக்கிறதா என்கிற கேள்விகள் அவர்களுக்குள் எழாமல் இல்லை..
PRE CLIMAX
ஒரு ட்விஸ்ட்
ஏப்ரல் மாதம் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து. மே 23 வரை அந்த அணியில் மாற்றம் கொண்டு வரலாம் என ஐ.சி.சி அனுமதி கொடுக்க உலகக் கோப்பைக்கு முன் பாகிஸ்தான் அணியுடன் ஒரு தொடரை விளையாட முடிவு செய்தது இங்கிலாந்து. அந்த தொடருக்கான அணியில் ஒரு புது பெளலர் இடம்பெறுகிறார். ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை தேர்வு செய்திருந்தது இங்கிலாந்து போர்ட்.

பாகிஸ்தானுக்கு அந்த தொடர் உலகக் கோப்பைக்கான பயிற்சியாக இருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியின் முழு கவனமும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் செயல்பாடு மீதே இருந்தது. வெற்றி தோல்வி அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களின் அந்த மிகப்பெரிய சோதனை முயற்சியில் வெற்றியும் கண்டனர். ஆம்! அவர்கள் தேடிக்கொண்டிருந்த அந்த பெளலரும் கிடைத்துவிட்டார். பாகிஸ்தான் அணி அந்தத் தொடர் முழுக்க எல்லா போட்டிகளிலும் 300-க்கும் அதிகமான ஸ்கோர் அடிக்க இவர் எக்கனாமி 6-க்கும் குறைவாக வைத்திருந்தார். அதனால் அவரை நிராகரிக்க முடியவில்லை. இங்கிலாந்தின் அந்த ஒரு விக்னஸையும் அடைத்தார் ஆர்ச்சர்.
க்ளைமாக்ஸ்
2019 உலகக் கோப்பை
2015 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய அணி இந்த உலகக் கோப்பையில் நம்பர் 1 அணியாக கால் எடுத்து வைத்தது. அன்று அணிக்கு முடிவுரை எழுதிய அந்த பேனாக்கள் இன்று ‘ஃபேவரிட்ஸ்’ எனச் சொன்னார்கள். அவர்களின் ஆருடத்தை நிஜமாக்கினர் மோர்கன். ஃபைனலில் நியூசிலாந்தை 7 பவுண்டரிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தின் 44 ஆண்டுகால கனவு நினைவானது. FINALLY! IT CAME HOME!

இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்லப் பல காரணங்கள் இருந்தும் மிக முக்கியமானக் காரணம் அவர்களின் FLEXIBILITY. ஓப்பனர்களுக்கு பேக்அப் ஏற்கனவே மிடில் ஆர்டரில் இருக்கும் பேட்ஸ்மேனைக் கொண்டே நிரப்பலாம். உதாரணத்துக்கு பட்லர் அணிக்கு ஃபினிஷர் என்றாலும் அவரால் ஓப்பனிங்கும் செய்ய முடியும். பேச்சுக்கு ஓப்பனிங் ஆடுவார் என்றில்லாமல் அதற்குத் தேவையான போட்டிகளில் ஏற்கனவே அவரைக் களமிறக்கி அதற்கும் தயார்ப்படுத்தியிருந்தனர். மற்ற அணிகள் உலகக் கோப்பையின் ப்ளேயிங் லெவனை சோதித்துப் பார்த்த சமயத்தில் இங்கிலாந்து அவர்களின் பேக்அப் வீரர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்தது.
இத்தொடருக்கு முன்பு வரை ஆதில் ரஷீத், மோயின் அலியின் ஸ்பின் அட்டாக் தான் அவர்கள் பெளலிங்கின் பலமாக இருந்தது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர்களால் எந்த மாயாஜாலமும் நிகழ்த்த முடியவில்லை. ஆனால் அதன் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை. ப்ளங்கட்டை அணியில் இறக்கி அதில் வெற்றிக்கண்டனர். 7 போட்டிகளில் 11 விக்கெட் எடுத்தார் அவர். அவர் எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியத் தலைகள்.
பேட்டிங்தான் அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என நினைத்திருந்தபோது பெளலர்கள் அதைத் தேடித்தந்தனர். கடைசியாக அணியில் இடம்பெற்ற ஆர்ச்சரின் தேர்வே அணியில் பல மாற்றங்களை உண்டு செய்தது. ``ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்ற பெளலர்களையும் சிறப்பாகப் பந்துவீசும் பிரஷரை கொடுக்கிறார்” என அணியின் பயிற்சியாளர் பேலிஸ் கூறினார். ஆர்ச்சரின் தேர்வு நிச்சயமாக மற்ற பெளலர்களுக்கும் உளவியல் ரீதியாக மாற்றத்தை உண்டு செய்தது. ‘நேத்து வந்த பொடியன் இப்படி பந்துவீசுறானே’ என்கிற நினைப்பு வராமல் இருந்திருக்காது. அதுவே மற்ற பெளலர்களையும் சிறப்பாகப் பந்துவீச ஊக்கமளித்திருக்கும். ஆர்ச்சர், வோக்ஸ் நியூ பாலில் மிரட்ட ப்ளங்கட், வுட் மிடில் ஓவர்களில் அசத்தினர்.

அவர்களின் இந்த வெற்றிக்கு மற்றுமொரு முக்கியக் காரணம் இங்கிலாந்து வீரர்களின் ஃபிட்னஸ். இங்கிலாந்து அணி பவுண்டரிகளிலும் சிக்ஸர்களிலும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஓடி ஓடி ரன்கள் அடிப்பதிலும் கொடுத்தனர். 2015 உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து அணி 17 பந்துகளில் ஒரு டபுள் ரன் ஓடுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். அதுபோக வெறும் 49 % டாட் பால்கள் ஆடிய அணியும் இதுதான். இதிலும் இங்கிலாந்துதான் டாப். சிங்கிள்கள் டபுள்களால் எப்படி பிரஷரை உண்டாக்குவது என எதிரணிக்கு கற்றுக்கொடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் சரியாக விளையாடவிலை என ஒருவரைக் கூட சொல்ல முடியாது. இங்கிலாந்து வெற்றிப்பெற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் மேட்ச் வின்னர்களாக இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரூட் க்ளாசாக ஆடி வெற்றியைத் தேடித் தந்தார் என்றால் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்து வெற்றியைத் தேடித்தந்தார். ஆர்ச்சர் 20 விக்கெட், ரூட் 556 ரன்கள், ஸ்டோக்ஸ் ஐந்து அரைசதம் மற்றும் 7 விக்கெட் என பேட்ஸ்மேன், பெளலர் ஆல்ரவுண்டர் என ஆல் ஏரியாவிலும் ஜொலித்தார்கள்.

இதனால் தான் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் தோல்வியுற்று இக்கட்டான நிலையில் இருந்தபோதும் “இது எங்கள் கோப்பை, அதை எப்படி ஜெயிக்க வேண்டும் என எங்களுக்குத் தெரியும்” என நம்பிக்கையோடு ஸ்டோக்ஸால் சொல்ல முடிந்தது.
POST-CREDIT
பன்ச்லைன்

மோர்கன் ஃபைனலுக்கு முன்பு “எங்கள் வெற்றியை டிவி-யில் பார்க்கும் அடுத்த தலைமுறை சிறுவர்களுக்கு பெருமைப்படக்கூடிய தருணமாக இருக்கும்” என பேட்டிக்கொடுத்தார். நிச்சயமாக. இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி அடுத்த தலைமுறைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன் கதையாக இருக்கும். இங்கிலாந்து அணியைப் பற்றி மட்டுமல்ல, அந்த அணியில் விளையாடிய ஒவ்வொரு வீரர்களின் கதையும் ஒரு தலைமுறையையே கிரிக்கெட் விளையாடத் தூண்டும். 44 ஆண்டுகால கனவு தன் சொந்த மண்ணில் நிறைவேற்றிய ஒரு மாஸ் கதை அவர்களின் இரவுகளை கொள்ளைக்கொள்ளும். கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ‘மாஸ்’ கதை அடுத்த தலைமுறைக்கு தயாராகிவிட்டது ! இங்கிலாந்தின் வேட்டைத் தொடரும்!