Published:Updated:

Ashes: முதல் பந்திலிருந்தே வீழத்தொடங்கிய இங்கிலாந்து - காபாவில் மீண்டும் கோட்டை கட்டும் ஆஸ்திரேலியா!

ஜோ ரூட் - கம்மின்ஸ் ( Cricket Australia )

2002-ல் இதே காபாவில் நாசீர் ஹுசைன் செய்ததை போன்றே ஜோ ரூட்டும் டாஸில் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால்...

Ashes: முதல் பந்திலிருந்தே வீழத்தொடங்கிய இங்கிலாந்து - காபாவில் மீண்டும் கோட்டை கட்டும் ஆஸ்திரேலியா!

2002-ல் இதே காபாவில் நாசீர் ஹுசைன் செய்ததை போன்றே ஜோ ரூட்டும் டாஸில் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால்...

Published:Updated:
ஜோ ரூட் - கம்மின்ஸ் ( Cricket Australia )

2021 ஆம் ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கும் முன் மழை குறுக்கிட்டதால் இன்றைய நாள் ஆட்டம் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட்டே டாஸை வென்று பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். இதுவே ஒரு தவறான முடிவாக விமர்சிக்கப்பட்டது. போட்டி நடைபெறும் பிரிஸ்பேனில் நேற்று நல்ல மழைப்பொழிவு இருந்திருக்கிறது. பிட்ச்சும் புற்கள் நிறைந்தே காணப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இந்தச் சூழல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் டாஸை வெல்லும் அணி பந்துவீசக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், Joe Root had other ideas! முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் ப்ராட் இருவருக்குமே இந்த டெஸ்ட்டில் ஓய்வளித்திருப்பதால் முதலில் பேட் செய்து ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தால் இரண்டாம் கட்ட பௌலர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் மீதான அழுத்தமும் குறையும் என ஜோ ரூட் நினைத்திருக்கலாம். ஆனால், இந்த முடிவு எவ்வளவு தவறானது என்பதை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஜோ ரூட் உணர்ந்திருப்பார். அதை உணர்த்தியவர் மிட்செல் ஸ்டார்க்.

ரோரி பர்ன்ஸ்
ரோரி பர்ன்ஸ்
ICC

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் இருவரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். முதல் பந்தில் இடதுகை பேட்ஸ்மேனான ரோரி பர்ன்ஸ் ஸ்ட்ரைக்கை எடுத்தார். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். ஃபுல் லெந்தில் நல்ல வேகத்தில் லெக் ஸ்டம்ப் லைனில் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ஸ்டம்பை பறிகொடுத்து அவுட் ஆனார். ஓவர் தி விக்கெட்டில் வந்து ஸ்டார்க் வீசிய அந்த பந்து லெக் ஸ்டம்ப்பை மிஸ் செய்வது போல சென்று லேட் ஸ்விங் ஆகி உள்ளே திரும்பி லெக் ஸ்டம்ப்பைத் தகர்த்திருக்கும்.

இந்த ஸ்விங்... இந்த விக்கெட் ஜோ ரூட்டை ரொம்பவே கவலையடைய செய்திருக்கும். முதலில் பேட்டிங் எடுத்தது எவ்வளவு தவறானது என்பதை அங்கேயே ரூட் உணர்ந்திருப்பார்.

ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டுமே முதல் ஸ்பெல்லை வீசியிருந்தனர். ஸ்டார்க் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து கெத்து காட்ட, ஹேசல்வுட் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். டைட்டான லைனில் ஒரு குட் லெந்த்தை பிடித்துக் கொண்டு அதிலேயே ஆணி அடித்தாற் போல தொடர்ந்து ஹேசல்வுட் வீசிக்கொண்டே இருந்தார். இதில் பேட்ஸ்மேனை செட் செய்து விட்டு லைனிலும் லெந்திலும் நுணுக்கமான வேரியேஷனை காட்டி விக்கெட் வீழ்த்தினார். ஸ்விங்கும் இருந்ததால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரொம்பவே திணறினர். குட் லெந்தில் செட் செய்து மலானுக்குக் கொஞ்சம் லெந்த்தை மேலே ஏற்றி ஷார்ட்டாக வீசி எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்தார். கேப்டன் ஜோ ரூட்டிற்கு அதேமாதிரி குட் லெந்த்தில் செட் செய்துவிட்டு சர்ப்ரைஸாக கொஞ்சம் ஃபுல்லாக இறக்கவே அவர் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பிலிருந்த வார்னரிடம் கேட்ச் ஆனார்.

பர்ன்ஸ் 0, ரூட் 0, மலான் 6 என கண்ணை மூடி முழிப்பதற்குள் இங்கிலாந்தின் டாப் ஆர்டரை ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் காலி செய்திருந்தனர்.
ஹேசல்வுட்
ஹேசல்வுட்
ICC

ஓப்பனரான ஹசீப் ஹமீது ஒரு முனையில் நிற்க, பென் ஸ்டோக்ஸ் அவருடன் இணைந்தார். சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் ஆடும் முதல் போட்டி இது. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது பல முறை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றியிருக்கிறார். இந்த முறையும் அதை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. க்ரீஸிற்குள் வந்து முதல் பந்திலேயே ஹேசல்வுட்டுக்கு எதிராக இறங்கி வந்து ஆட முற்பட்டிருப்பார். லேட் ஸ்விங்கை சமாளிக்க, பெரும்பாலும் அவரது வழக்கமான Back foot யிலேயே பந்தை கடைசி நொடி வரை பார்த்து ஆடியிருந்தார். இல்லை அந்த முதல் பந்தை எதிர்கொண்டது போல இறங்கி வந்து ஆடினார். ஆனாலும், அவரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 21 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்து கம்மின்ஸ் கொஞ்சம் ஷார்ட்டாக வீசிய ஒரு பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற லபுஷேனிடம் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு ஆலி போப் ஹசீப் ஹமித்தோடு இணைந்தார். இந்த கூட்டணி கொஞ்சம் நின்றது. 13வது ஓவரிலிருந்து உணவு இடைவேளை வரை விக்கெட் விடாமல் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையான பந்துகளை லீவ் செய்வதில் ஹசீப் அதிக கவனம் செலுத்தினார். இன்னொரு பக்கம் போப் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிங்கிள் தட்ட வேண்டும் என நினைத்தார். இருவருக்குமே எந்த அவசரமும் இல்லை. போப் விருப்பப்பட்டபடி சிங்கிள் எடுத்தார். ஹசீப் ஆழ்ந்த பொறுமையோடு பந்துகளை லீவ் செய்தார். முதல் செஷன் முடிந்தது. இங்கிலாந்து அணி 59-4 எனத் தள்ளாட்டத்திலேயே இருந்தது.

இந்த உணவு இடைவேளையில் பலரும் 2002 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி பேசத் தொடங்கியிருந்தனர். அதாவது 2002 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தொடரின் முதல் போட்டி இதே பிரிஸ்பேனில் இதே காபாவிலே நடந்திருந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனான நாசீர் ஹுசைன் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருப்பார். பிட்ச்சில் புற்கள் தென்பட்டதால் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததை போன்ற ஸ்விங் முதல் 5-6 ஓவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. அதன்பிறகு, ஆட்டம் முழுவதும் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாறிவிடும்.

2002 Ashes
2002 Ashes
Anderson's Twitter handle
ஹைடன் 197 ரன்களையும் ரிக்கி பாண்டிங் 123 ரன்களையும் அடித்திருப்பர். இங்கிலாந்து அந்த போட்டியை மிக மோசமாக 384 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும்.

அந்தத் தோல்விக்கு நாசீர் ஹுசைனின் டாஸ் முடிவே மிக முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. ஃப்ளாட் பிட்ச்சில் எதிரணிக்கு முதல் பேட்டிங்கை கொடுத்து மொத்தமாக சொதப்பிவிட்டார் என விமர்சிக்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மோசமான டாஸ் முடிவுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இப்போதைய இங்கிலாந்து வீரர்கள் பலரும் நாசீர் ஹுசைனை ஜாலியாக இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு கலாய்ப்பதும் உண்டு.

அதே காபாவில் நாசீர் ஹுசைனை போன்றே ஜோ ரூட்டும் டாஸில் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உணவு இடைவேளை முடிந்தது. ஹசீப்பும் போப்பும் மீண்டும் பேட்டிங் ஆட வந்தனர். முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இவ்வளவு நேரம் பொறுமையாகக் கைகள் கட்டப்பட்டதை போன்று ஆடிக்கொண்டிருந்த ஹசீப், கம்மின்ஸ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஒரு பந்துக்கு பேட்டைவிட்டு எட்ஜ் ஆகி அவுட் ஆனார். 75 பந்துகளை சந்தித்திருந்த ஹசீப் 25 ரன்களில் வெளியேறினார். 60-5 என தட்டுத்தடுமாறி கொண்டிருந்த இங்கிலாந்து அணி 100 ரன்களை கடக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

இந்நிலையில்தான் ஜாஸ் பட்லர் உள்ளே வந்து கொஞ்சம் அதிரடி காட்டினார். தயக்கமே இல்லாமல் ஒருநாள் போட்டியில் ஆடுவதை போல ஆடினார். 5 பவுண்டரிகளை அடித்திருந்தார். அவுட் ஃபீல்ட் மெதுவாக இருந்ததால் ஒன்றிரண்டு ஷாட்கள் சரியாக க்ளியர் ஆகவில்லை. பட்லர் பெரிதாக தடுமாறவே இல்லை. அதிரடி காட்ட வேண்டும் என்பதற்காக சுற்றவில்லை. பெரும்பாலான ஷாட்களை ஆஃப் சைடில் சரியான டைமிங்கோடு க்ரவுண்டடாகவே ஆடியிருந்தார். பாயின்ட் இருந்தால் கவரில், கவர் இருந்தால் பாயின்ட்டில் என ஃபீல்ட் கேப்பை பயன்படுத்தி ஆடி ரன் கணக்கை உயர்த்தினார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 100ஐ கடந்தது. எல்லா பந்துகளுக்கும் பேட்டை விட முயன்றால் எதாவது ஒரு பந்தில் மிஸ் ஆகி எட்ஜ் ஆகவே செய்யும். ஸ்டார்க்கின் ஓவரில் அந்த ஒரு பந்தை பட்லர் எதிர்கொண்டார். 39 ரன்களில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

கம்மின்ஸ்
கம்மின்ஸ்
Cricket Australia

ரொம்ப நேரமாக க்ரீஸில் நின்ற போப்பும் 5 வது பௌலரான க்ரிஸ் க்ரீனை அட்டாக் செய்ய முயன்று ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனார். 79 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து போப் கேட்ச் ஆனார். இதன்பிறகு, மீதமிருந்த பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே அவுட்டாகி வெளியேறிவிட்டனர். க்றிஸ் வோக்ஸ் மட்டும் ஒரு சில பவுண்டரிகளை அடித்திருந்தார். 50.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. கடைசி 3 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸே வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக தனது முதல் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக முதல் நாளே கம்மின்ஸுக்கு பல பாசிட்டிவ்வான விஷயங்கள் நடந்திருந்தன. டாஸை தோற்றிருந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இங்கிலாந்தை மொத்தமாக வாரி சுருட்டியாயிற்று. தனிப்பட்ட முறையில் 5 விக்கெட்டுகளையும் எடுத்துவிட்டார். கேப்டனாகவும் நன்றாகவே அணியை வழிநடத்தியிருந்தார். அனுபவசாலியான ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக இருப்பதால் அவரின் தாக்கம் அதிகம் இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலும் பேட் கம்மின்ஸே முடிவுகளை எடுத்ததாக தெரிகிறது. பந்து நன்கு ஸ்விங் ஆவது தெரிந்தவுடன் ஸ்டார்க்கை இரண்டே ஓவர்களில் முதல் ஸ்பெல்லை முடிக்க வைத்து ஹேசல்வுட்டுடன் கம்மின்ஸ் இணைந்து வீசியிருப்பார். இது கொஞ்சம் தவறான முடிவு போல தோன்றினாலும், ஸ்டார்க்கை இரண்டு மூன்று ஓவர்களாக துண்டு துண்டாக ஸ்பெல்களை வீச வைத்து ஃப்ரெஷ்ஷாகவே வைத்திருந்தார்.

"உங்கள் அணியின் மெயின் பௌலர்கள் அத்தனை பேருக்கும் முதல் செஷனிலேயே வாய்ப்பளியுங்கள். அந்தச் செயல் நீங்கள் எங்களுக்கு தேவை, உங்களிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் என்கிற செய்தியை அந்த வீரர்களுக்கு கடத்தும். அது இந்தத் தொடர் முழுவதும் பாசிட்டிவ்வான விஷயங்கள் நிகழ காரணமாக இருக்கும்."
மைக் ஹஸ்ஸி

என மைக் ஹஸ்ஸி கமெண்ட்ரியில் பேசியிருந்தார். இதை பிரதபலிக்கும் வகையில் முதல் செஷனிலேயே கம்மின்ஸ் 5 பௌலர்களையும் பயன்படுத்தியிருந்தார். ஃபீல்ட் செட்டப்பிலும் தொடர்ச்சியாக அக்ரஸிவ்வாகவே இருந்தார். நாதன் லயன் வீசும்போது மட்டுமே ஸ்மித்திடம் சில ஆலோசனைகளை கம்மின்ஸ் கேட்டதாக மைதானத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் ரிப்போர்ட் செய்திருந்தனர். ஆக, முதல் நாளிலேயே கேப்டனாகவும் பௌலராகவும் கம்மின்ஸ் பாஸாகியிருக்கிறார்.

The Ashes started with a Starc Special!
The Ashes started with a Starc Special!

இங்கிலாந்தின் நிலைமைதான் படுமோசமாக இருக்கிறது.

"நாசீர் ஹுசைனின் கொடுங்கனவு ஒன்று நிஜத்தில் அரங்கேறியதை போலவே அந்த டாஸ் முடிவு இருந்தது. ஆனால் அந்தத் தோல்விக்கு டாஸ் மட்டுமே காரணமாக அமையவில்லை. இங்கிலாந்தின் Execution லும் பிரச்சனையிருந்தது" என Out of My Comfort Zone என்ற புத்தகத்தில் அந்த 2002 ஆஷஸ் பற்றி ஸ்டீவ் வாஹ் கூறியிருப்பார். அதேதான் இங்கேயும். ஜோ ரூட் டாஸில் தோற்றதும் சொதப்பலுக்கு ஒரு காரணம்தானே தவிர அதுமட்டுமே காரணம் இல்லை. இங்கிலாந்து மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.