Published:Updated:

வீழ்த்தவே முடியாத அணி அல்ல இங்கிலாந்து - இலங்கையை மீட்டெடுத்த மலிங்கா மேஜிக்! #ENGvSL

#ENGvSL

மங்கிப்போயிருந்த அரையிறுதி வாய்ப்பு நான்கு விக்கெட் எடுத்த மலிங்கா புண்ணியத்தில் இலங்கைக்கு இப்போது பிரகாசமாயிருக்கிறது #ENGvSL

Published:Updated:

வீழ்த்தவே முடியாத அணி அல்ல இங்கிலாந்து - இலங்கையை மீட்டெடுத்த மலிங்கா மேஜிக்! #ENGvSL

மங்கிப்போயிருந்த அரையிறுதி வாய்ப்பு நான்கு விக்கெட் எடுத்த மலிங்கா புண்ணியத்தில் இலங்கைக்கு இப்போது பிரகாசமாயிருக்கிறது #ENGvSL

#ENGvSL

மெட்ராஸ் படத்தில் ஒரு வசனம் வரும். 'எல்லாரும் அவரைப் பாத்து சிரிக்கிறீங்க. அவர் ஒருகாலத்துல எப்படி இருந்தவர் தெரியுமா?' என ஜானியைப் பார்த்து சொல்வார் அன்பு. ஜானி இடத்தில் இப்போது இருப்பது இலங்கை. அந்த அணியின் கடந்தகால பெருமைகளை லிஸ்ட் போட்டால் யூடியூப் கமென்ட் செக்‌ஷன் போல நீண்டுகொண்டே போகும். ஆனால், நிகழ்காலம்தான் பாவம் சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணியுடனான மோதலில் எல்லாம் வழிக்குவந்துவிடும் என அந்த அணி நிறையவே நம்பியது. 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்' யோசிக்கப்போறோம் என அந்த அணியின் கேப்டன் கூட பேட்டிகொடுத்தார். காரணம் இங்கிலாந்து அணியுடனான ட்ராக் ரெக்கார்ட் அப்படி. இரு அணிகளும் மோதிய கடைசி ஐந்து உலகக்கோப்பை ஆட்டங்களில் நான்கில் இலங்கைக்கே ஜெயம். அந்த நம்பிக்கையோடுதான் நேற்றும் களமிறங்கியது.

#ENGvSL
#ENGvSL

ஜேசன் ராய் இன்னும் காயத்திலிருந்து விடுபடாததால் இங்கிலாந்து கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே டீமோடு களமிறங்கியது. அவுட் ஆஃப் தி டப்பா யோசித்து திரிமன்னே, மிலிண்டா இருவரையும் உட்காரவைத்துவிட்டு அவிஷிகா பெர்னாண்டோவையும் ஜீவன் மென்டிஸையும் உள்ளே கொண்டுவந்தது இலங்கை அணி. பேட்ஸ்மேன்களுக்கு வஞ்சமில்லாமல் வாரி வழங்கும் பிட்ச் என்பதால் டாஸ் ஜெயித்த இலங்கையும் பேட்டிங் தேர்வு செய்தது.

பொறுப்பாக வழிநடத்த வேண்டிய கேப்டன் கருணரத்னே இங்கிலாந்தின் வருங்காலமான ஆர்ச்சரிடம் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 'பங்காளீஈஈஈ... இந்தா நானும் வந்துட்டேன்' என அடுத்த ஓவரிலேயே குஷால் பெரேராவும் பின்னால் ஓடினார். ஸ்கோர் 3/2. ஆனாலும் சங்கடப்படாமல் அணியில் தன்னை எடுத்த நன்றிக்கடனுக்காக ஆர்ச்சரின் அடுத்த ஓவரில் 14 ரன்கள் விளாசினார் பெர்னாண்டோ. அவ்வளவுதான்! அதற்குப் பிறகு நேர்த்திக்கடன் போல நடுவே படுத்து உருண்டது ரன்ரேட்

#ENGvSL
#ENGvSL

போதாக்குறைக்கு கொஞ்சம் அதிரடி காட்டிய பெர்னாண்டோவும் 13வது ஓவரில் நடையைக் கட்ட, கன்டென்ட் இல்லாமல் இழுக்கும் மெகா சீரியல்போல ஆனது முதல் இன்னிங்ஸ். 25 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. ஸ்பின்னர்கள் மொயினும் ரஷித்தும் பேட்ஸ்மேன்களை ரொம்பவே சோதித்தார்கள். 30-வது ஓவரில் ஸ்வீப் அடிக்க ஆசைப்பட்டு ரஷித்துக்கு விக்கெட்டை கிப்ட்டாகக் கொடுத்தார் குஷால் மென்டிஸ். 'ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ' என அடுத்தபந்திலேயே ஜீவன் மென்டிஸும் கிளம்பினார். நிலைமை ரொம்பவே மோசமானது.

அதன்பின்னும் விடாமல் சோதித்தார்கள் மொயினும் ரஷித்தும். ரன் வரவேமாட்டேன் என மல்லுகட்டி ஸ்டேடியத்திற்கு வெளியே நின்றது. 31வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை. அதன்பின் கொஞ்சம் சுதாரித்தார்கள் பேட்ஸ்மேன்கள். 50க்கும் கீழ் ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்த மேத்யூஸ் கொஞ்சம் வேகமாக ரன்கள் சேகரிக்கத் தொடங்கினார். மறுபக்கம் விக்கெட்கள் சடசடவென போனாலும் மேத்யூஸ் மட்டும் சோலோவாக கடைசிவரை நின்று 85 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 232.

#ENGvSL
#ENGvSL

இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டர் டெப்த் மரியானா ட்ரெஞ்ச் போல போய்க்கொண்டே இருக்கும். அதனால் இந்த டார்கெட் ஈஸிதான் என களமிறங்கினார்கள் பேர்ஸ்டோவும் வின்ஸும். இரண்டாவது பந்திலேயே அதில் ஆற்று மணல் அள்ளிப்போட்டார் மலிங்கா. பேர்ஸ்டோ எல்பிடபிள்யூ! 'என் பார்ட்னரையா அவுட்டாக்குற? ஹேய்ய்ய்ய்' என நாக்குப்பூச்சி தெறிக்க இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து மலிங்கா ஓவரில் பறக்கவிட்டார் வின்ஸ். அதற்கடுத்த பந்திலேயே 'உன் கோட்டா முடிஞ்சது' என அவரையும் பார்சல் கட்டினார் மலிங்கா.

இந்தத் தொடக்க அதிர்ச்சிகளை எதிர்பார்த்திராத இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வழக்கத்திற்கு மாறாக கட்டை போடத் தொடங்கினார்கள். 10 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 38/2. இந்த 4 ஆண்டுகளில் இங்கிலாந்தின் குறைந்தபட்ச 10 ஓவர்கள் ஸ்கோர் இது. அதற்கடுத்தும் ரன்ரேட்டில் பெரிய மாற்றமில்லை. நடுவே உடானாவின் ஒரே ஒரு ஓவரில் மட்டும் 10 ரன்கள். மற்றபடி ரன்ரேட் 3.சொச்சத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு அதிரடி கேப்டன் மோர்கனை செம கேட்ச் பிடித்து பெவிலியனுக்குத் திருப்பிவிட்டார் உடானா.

#ENGvSL
#ENGvSL

பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் இப்போது க்ரீஸில்! இருவருக்கும் எக்கச்சக்க அனுபவம் என்பதால் மிக நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தார்கள். 30வது ஓவர் வரை இந்த நிதானம் நீடித்தது. நடுவே ஒரே ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்கள். மற்றபடி எந்த ஓவரிலும் 5 ரன்களைத் தாண்டவே இல்லை. 78 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரூட். இந்த ஜோடியைப் பிரிக்கவும் மலிங்காதான் வரவேண்டியது இருந்தது. மேட்ச் இலங்கைக்கும் சாதகமானது.

பட்லர் பிரஷரில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால் நிலைமையை சமாளிப்பார் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால், டாஸ் பாலாக காலை குறிவைத்து இறங்கும் டிபிக்கல் மலிங்கா டெலிவரியில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் பட்லர். உலகக்கோப்பையில் மலிங்காவின் 50வது விக்கெட் இது. அடுத்துவந்த மொயின் அலியும் அதிரடியாக ஆட ஆசைப்பட்டு அவுட்டாக பொறுப்பு மொத்தமும் ஸ்டோக்ஸ் தலையில் விழுந்தது.

#ENGvSL
#ENGvSL

வோக்ஸ், ரஷித், ஆர்ச்சர் என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும் கடைசி விக்கெட்டிற்கு வுட்டோடு ஜோடி சேர்ந்து ஒரு காட்டு காட்டினார் ஸ்டோக்ஸ். உடானா ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸ், பிரதீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி என வெளுக்க தோல்விபயம் தெரிந்தது இலங்கை வீரர்கள் முகத்தில். ஆனாலும் கடைசி பால் சிங்கிள் தட்டவேண்டிய கட்டாயத்தில் மார்க் வுட் தொட்டுவிட்ட பந்து கீப்பர் கையில் தஞ்சமடைய, இலங்கை மூன்று வாரங்களாகஏங்கிக்கொண்டிருந்த வெற்றி ஒருவழியாக கிடைத்தேவிட்டது.

மங்கிப்போயிருந்த அரையிறுதி வாய்ப்பு நான்கு விக்கெட் எடுத்த மலிங்கா புண்ணியத்தில் இலங்கைக்கு இப்போது பிரகாசமாயிருக்கிறது. தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுமே இலங்கையைப் போல திடீரென வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுக்கும் அணிகள். எஞ்சிய ஒரு ஆட்டம் இந்தியாவோடு! எனவே அடுத்த மூன்று ஆட்டங்களும் அந்த அணிக்கு மிக முக்கியம்.

#ENGvSL
#ENGvSL

அதேசமயம் 'இந்த அணியில எந்தக் குறையுமே இல்லையே' என மற்ற அணிகள் கவலைபட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து இல்லை நேற்று களத்தில். அதன் எஞ்சிய மூன்று ஆட்டங்களும் இந்தியா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து என டேபிள் டாப்பர்களோடு! சத்திய சோதனை இங்கிலாந்திற்கு இனிதான் காத்திருக்கிறது.