64 கட்டங்களாகப் பிரிக்கப்படாவிட்டாலும் 22 யார்டுகளுக்குள் ஆடப்படும் சதுரங்கம்தான் டெஸ்ட் போட்டிகள்.
ஃபாலோ ஆனின் நீட்சி பெரும்பாலும் இன்னிங்ஸ் தோல்வியே. 297 முறை போட்டிகள் ஃபாலோ ஆன் ஆகியுள்ள டெஸ்ட் வரலாற்றில் நான்குமுறை மட்டுமே அதனைச் சந்தித்த அணிகள் வென்றுள்ளன.
அதில் நேற்று நடந்து முடிந்த இங்கிலாந்து Vs நியூசிலாந்து போட்டியும் ஒன்று. நியூசிலாந்து அணி இந்தப் போட்டியை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது. 1993-ல் மேற்கிந்தியத்தீவுகள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்குப்பின் முதல்முறையாக இப்போட்டியில்தான் 1 ரன் வித்தியாசத்தில் ஒரு அணிக்கு வெற்றி கிட்டியுள்ளது.
ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கைகோர்த்த பின்னர் ரெட்பால் கிரிக்கெட்டில் தனி அரசாங்கம் நடத்துவது மட்டுமின்றி தங்களுக்கான தனி இலக்கணத்தையும் இங்கிலாந்து வகுத்துள்ளது,. முன்னதாக இக்கூட்டணி களம்கண்ட பதினோரு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருந்தது. அதிலும் ஓவர்சீஸ் வெற்றிகள் மற்ற அணிகளுக்கெல்லாம் பகல் கனவாயிருக்க இங்கிலாந்தோ அந்நிய மண்ணிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் நான்காவது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் என்னும் புதிய பரிமாணமோ சேஸ் மாஸ்டர்களாக அவர்களை உருவேற்றியுள்ளது.
முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து கையாண்ட விதமே சிறப்பானதே. அதிவேக ரன்குவிப்போடு கிட்டத்தட்ட ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற அதிவேகத்தில் Bazzball பயணிக்க நியூசிலாந்து பௌலர்களுக்கு சேதாரம் அதிகமே. போட்டியை டிக்ளேர் செய்த ஸ்டோக்ஸின் முடிவும்கூட அவர்களது அச்சமின்மைக்கான ஆதாரம்தான். இத்தகைய துணிச்சலான முடிவுகள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சிக்கு அடிக்கோடிடுகின்றன.
டிராவுக்காக ஆடாமல் வெற்றியை மட்டுமே மனதில்வைத்து ஆடும் எந்தவொரு அணியும் இதையேதான் செய்யும். இந்த ஆளுமைதான் நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் பயங்கொண்டு பணியச்செய்து ஃபாலோ ஆன் ஆகவைத்தது. சவுத்தியின் இன்னிங்ஸ் மட்டுமே ஆறுதலாக துடிப்பான ஆட்டத்தின் விலையினை நியூசிலாந்து ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்தது.

ஃபாலோஆன் ஆயுதத்தை ஸ்டோக்ஸ் பிரயோகிக்க முடிவெடுத்ததும் இன்னுமொரு துணிகரமான நகர்வுதான். 2001 கொல்கத்தா டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆகியும் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்குப்பின் சமீபகாலங்களில் எந்தவொரு கேப்டனும் அதனைப் பின்பற்ற தயங்குகின்றனர். பௌலர்கள் சோர்வடைவார்கள் என்பது ஒரு பக்கமென்றால் தனது பேட்ஸ்மேன்கள் நான்காவது இன்னிங்ஸை சந்திக்க வேண்டுமென்பதும் இன்னுமொரு காரணம். ஆனால் எதற்கும் துணிந்துதான் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். தனது பௌலர்களின் ரிதத்தோடே பயணித்து வெற்றியைத் தனதாக்க முயன்ற வியூகமது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஆண்டர்சன் - பிராட் இணையை நம்பிக்கட்டிய பந்தயம். அப்புள்ளியில்தான் நியூசிலாந்துக்கான வாய்ப்பு உயிர்பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் வெட்டப்பட்ட காய்களை மீண்டும் இறக்க அனுமதிக்கும். கிடைக்கும் அந்த இடைவெளியில் தனக்கான புள்ளிகளை சேகரித்துக் கொள்ள வேண்டும். நியூசிலாந்தின் மீண்டெழுதலும் அப்படிப்பட்டதாகவே இருந்தது. டாப் 7 பேட்ஸ்மேன்களில் வில் யங் தவிர யாருமே சோடை போகவில்லை. நின்று நிதானமாக களமாடினர். கூரான கோடாரி மட்டுமல்ல தொடர்ச்சியாக செயல்படும் முனை மழுங்கிய கத்திகூட நினைத்ததை முடிக்கும் - டெஸ்ட் ஃபார்மட்டில் அப்பொறுமை நினைத்ததை எய்த வைக்கும். முதல் இன்னிங்ஸில் 435 ரன்களை 87.1 ஓவர்களில் இங்கிலாந்து எட்டியிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்தோ 483 ரன்களை 162.3 ஓவர்களில் கிளாசிக்கல் டெஸ்ட் பேட்டிங் டெம்ப்ளேட்டில் சேர்ந்திருந்தது. வில்லியம்சனின் சதமோ வலுசேர்த்தது.
சுழல் பந்தை எதிர்கொள்ளுகையில் அது சுழலும் திசையிலேயே பேட்டை செலுத்துவது சேஃப் கேம். நியூசிலாந்தும் அதேபோல சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு அதன்போக்கிலேயே பிரயாணித்தது. இருப்பினும் இது முதல் இன்னிங்ஸினால் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்பியதே ஒழிய இலக்கு இங்கிலாந்தால் எட்டமுடியாத சிகரமாக இருக்குமென வில்லியம்சனேகூட நினைக்கவில்லை. அவரது பேட்டிகூட அதையே உறுதி செய்தது. ஆனால் ஐந்தாவது நாள் ஆட்டமோ 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை டெஸ்ட் கண்ணாடி அணிந்து பார்த்தது போன்ற மாயாஜாலங்களையும் நிகழ்த்தியது.
பொதுவாகவே டி20போல் சிறுகதையாக முடியாமல் விறுவிறுப்பான தருணங்களும், மௌன யுத்தங்களும், தூண்டிலிட்டுக் காத்திருந்து புலிவேட்டையாடும் சாமர்த்தியங்களும் டெஸ்டினை தொடர்கதையாக அடையாளம் காட்டும். ஏற்றஇறக்கங்களும், அபாய வளைவுகளும்தான் டெஸ்டினை உயிர்த்துடிப்போடு வைத்துள்ளன. அவை அத்தனையையுமே இறுதிநாளில் காணமுடிந்தது. 210 ரன்கள்தானே, 90 ஓவர்களும் 9 விக்கெட்டுகளும் கைவசமுள்ளதே என்ற அலட்சியம் சற்றே ஆட்கொள்ள அவர்களது அஞ்சுவது பேதைமை என்னும் புதுமொழியின் உட்பொருளும் முன்செலுத்தியது. நின்று நிதானமாக ஆடியிருந்தால் தாக்குப்பிடித்திருக்க வேண்டிய களத்தில் 80/5 என்ற ஸ்கோரோடு இங்கிலாந்து திணறியது.
ரன் அவுட்டுகள் டெஸ்டில் பெருங்குற்றம். அதிலும் குறைந்த ஸ்கோரை துரத்துகையில் ஹாரி ப்ரூக் போன்றொரின் விக்கெட்டுகள் விழுவது போட்டியின் போக்கையே மாற்றிவிடும். அதேபோலத்தான் டெஸ்ட்களின் அடிநாதமான வேரூன்றும் பார்ட்னர்ஷிப்களும். 25 ஓவர்களுக்குமேல் நீடித்து 120 ரன்களைத் தாண்டிய ரூட் - ஸ்டோக்ஸ் இணை பதிலடி கொடுத்தது. ஒரு ஸ்பெல் கொல்லும் ஒரு ஸ்பெல் வெல்லும், வாக்னர் போன்றோரின் பவுன்சர்களால் லோட் செய்யப்பட்ட ஸ்பெல்லோ சத்தமேயின்றி பகைமுடிக்கும். செட்டிலாகியிருந்த இந்த இரு பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றினார் வாக்னர். ஷார்ட் பாலினை புல் செய்ய முயன்று ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ், மிடில் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறிய ரூட் என அடுத்தடுத்த இருவிக்கெட்டுகளோடு பிராடும் வெளியேறியது நியூசிலாந்தின் பக்கம் காற்றைத்திருப்பின.

நியூசிலாந்து சலிக்காமல் ஒவ்வொன்றாக முயற்சித்தது. ஃபாஸ்ட் பௌலிங்கில் கீப்பரை முன்பாக நிற்கவைத்ததோடு, ஸ்லிப்கள், Gully, Fly slip என அணைகட்டி பந்தை எட்ஜ் வாங்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. பின் கீப்பரை பின்னால் நகர்த்தியதோடு லெக் சைடை லோட் செய்து ஷார்ட் பால்களை தலையையும் விலாவினையும் பதம் பார்க்க பௌலர்களை ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசவைத்தது. இங்கிலாந்தோ அட்டாக்கிங் மனநிலையிலிருந்து பின்வாங்கவே இல்லை. கேடயத்தால் தற்காத்துக் கொண்டு டிராவோடு சமரசமாவதைவிட வாளேந்தி வீழ்வதே மேல் என்பது இங்கிலாந்தின் நோக்கமாக இருந்தது. இருபுறமும் மாறிமாறி ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலையில் டெஸ்ட் கிரிக்கெட்தான் சறுகி விளையாடியது.
ஏழு ரன்களா ஒரு விக்கெட்டா என்ற இறுதிச்சுற்றில் பணயம் வைக்கப்பட்ட ஆண்டர்சன் வாக்னர் பந்தில் அடித்த அந்த பவுண்டரியின் மீதுகூட Bazzball-ன் சாயம்தான் பூசப்பட்டிருந்தது. சற்றே பிசகியிருந்தாலும் அங்கேயே போட்டி முடிவுற்றிருக்கும், அதற்கெல்லாம் கலங்காத மனப்பாங்குதான் புதிய இங்கிலாந்துக்குரியது. சற்றே வொய்டாக வீசப்பட்ட இறுதிப்பந்துக்கு முந்தைய பந்து வொய்டாகியிருந்தால் போட்டி டையாக்கும் வாய்ப்புக்கூட இருந்தது. அது தப்பிப்போயினும் Bazzball-ம் ஷார்ட் பால்களும் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சத்திற்கு ஏற்றின. காலத்திற்கும் பேசப்படப் போகும் ஒன்றாகவும் இதனை மாற்றின.

குறுங்கதையாக முற்றுப்பெறாமல், ஐந்து நாட்கள் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் டெஸ்டின் ஆயுள்ரேகையையும் நீட்டிக்க வல்லவை. அதிலும் மரபுவழியில் டிஃபென்சிவ் கிரிக்கெட் ஆடாமல் சாதகமோ பாதகமோ முடிவு வேண்டுமென ஆடப்படும் இந்த நவீனயுகப் போட்டிகள்தான் டெஸ்டை புதுக்காற்றை சுவாசிக்க வைக்கின்றன.