Published:Updated:

ENG v NZ: டிராவுக்கு ஆடிய இங்கிலாந்து, சர்ச்சையில் ராபின்சன்... லார்ட்ஸ் டெஸ்ட்டில் என்ன நடந்தது?

ENG v NZ
ENG v NZ ( twitter.com/ICC )

எட்டு மாதங்களுக்குப்பின் களைகட்டியுள்ள, இங்கிலாந்து கிரிக்கெட் சீசனின் முதல் தொடரின் முதல் போட்டி, கான்வே இரட்டை சதம், பர்ன்ஸ் சதம், ராபின்சன் சர்ச்சை எனப் பல மசாலாக்கள் சேர்க்கப்பட்டும், மழையால் நீர்த்துப் போய் உப்புசப்பின்றி டிராவில் முடிந்துள்ளது.

நியூசிலாந்தின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டமாகவும், இங்கிலாந்தின் ஆஷஸ் தொடருக்கான அட்வான்ஸ் ஆடிஷனாகவும் பார்க்கப்பட்ட லார்ட்ஸில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்குமிடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்து தொடரை 0-0 என சமனில் வைத்துள்ளது.

டாஸை வென்ற வில்லியம்சன், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்ததற்கு, பொருள் விளக்குவதைப் போலத்தான் இருந்தது பிட்ச். ஃபிளாட் ட்ராக்காக பேட்டிங்கிற்கே கைகொடுத்தது லார்ட்ஸ் மைதானம். புதுமுகவீரர் கான்வே போட்டியின் முதல்பந்து முதல், இறுதிப்பந்து வரையிலும் ஓப்பனர் லாதமுடன் தொடங்கி, கடைசிவீரர் வாக்னர் வரையிலும் முதல் இன்னிங்ஸில் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார். முதல் நாளில் ஒன்று, இரண்டாம் நாளில் இன்னுமொன்றென அவரடித்த இரட்டை சதத்தால் 378 ரன்களை எட்டியது நியூசிலாந்து. லார்ட்ஸ் மைதானத்தில் 2016-ல் அடிக்கப்பட்ட மிஸ்பா உல் ஹக்கின் சதத்திற்குப்பின், நான்கு ஆண்டுகளாக சதம் அடித்த பேட்ஸ்மேனின் பெயர்களுக்காகக் காத்திருந்த ஹானர்ஸ் போர்டில், தனது பெயரைப் பதிவேற்றியதுடன், அறிமுகப்போட்டியில் இரட்டைச் சதமடித்த ஏழாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கான்வே.

டெவன் கான்வே
டெவன் கான்வே
twitter.com/ICC

களம் பௌலர்களுக்கு தொடக்கத்தில் அந்தளவு கைகொடுக்கவில்லை. பந்துகள் எதிர்பார்த்த அளவு ஸ்விங்காகவும் இல்லை. அப்படியிருப்பினும், கான்வே மற்றும் நிக்கோல்ஸ் தவிர்த்து நியூசிலாந்தின் எந்த டாப்சி ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சோபிக்கவில்லை. முக்கியமாக, கற்பனைக்கு அப்பாற்பட்ட ஃபார்மில் இருந்த கேன் வில்லியம்சன், வெறும் 13 ரன்களோடு நடையைக் கட்டினார்.

ஃபிளாட் பிட்சாகவே இருப்பினும், மிரட்டும் இரட்டையர்களான ஆண்டர்சன் மற்றும் பிராடின் கைகளே ஓங்குமென நினைத்தால், இங்கிலாந்தின் அறிமுக வீரரான ஓலி ராபின்சன்தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். லாதம், ராஸ் டெய்லர் உள்ளிட்ட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் அவர். இதேசமயத்தில், பல ஆண்டுகளுக்கு முன் அவர் முஸ்லீம்கள் குறித்து, ஆசியப் பெண்கள் குறித்து பதிவேற்றியிருந்த சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டும் சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான குரல் அம்புகளைப் பாயச்செய்திருந்தது.

மார்க் வுட்டும் அன்றைய நாளில் அசத்தலாகப் பந்துவீச, அவரது பந்துகளை மட்டுமே சற்று எச்சரிக்கையோடு எதிர்கொண்டார் கான்வே. பிராட், துல்லியமான லைன் அண்ட் லென்த்தில், ரவுண்ட் தி விக்கெட்டில் வீசிய இன்ஸ்விங்களும், பேட்ஸ்மேன்களுக்கு சவால்விடுக்க, முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து. இரண்டாவது நாளின் எஞ்சிய ஓவர்களை இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் சந்தித்தனர். கான்வே அசைத்துப் பார்த்திருந்த அவர்களது நம்பிக்கையின் ஆணிவேரை பிடுங்கி எறியும் முனைப்போடு, இரண்டு விக்கெட்டுகளை சொற்ப ஓவர்களிலேயே எடுத்துவிட்டது நியூசிலாந்து. 111/2 என இரண்டாம்நாள் ஆட்டம் முடிய, மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது மழை.

ENG v NZ
ENG v NZ
twitter.com/ICC

மீதமுள்ள இருநாட்களில் என்ன நடக்கும்?! மழை மறுபடி குறுக்கிடுமா?! மழைக்குப் பிந்தைய களம், பௌலர்களுக்குக் கருணை காட்டி நான்கு இன்னிங்ஸ்களையும் ஆடவைத்து போட்டியை முடிவைநோக்கி நகர்த்துமா, இல்லையெனில் போட்டி டிராவில் போய் முட்டிக்கொள்ளுமா என பல கேள்விகளோடே தொடங்கியது நான்காம் நாள் ஆட்டம்.

நாளின் முதல் பந்திலேயே ரூட்டின் விக்கெட்டோடு ரிப்பனை வெட்டி ஆரம்பித்தது நியூசிலாந்து. இங்கிலாந்தின் ஓப்பனர் பர்ன்ஸ் மட்டுமே 22 யார்டை எழுதி வாங்கியதைப்போல் அசராமல் நின்று சதமடித்து, தனது பெயரையும் ஹானர்ஸ் போர்டில் சேர்த்தார். ஆனால், மறுபுறமோ, ரூட்டின் 42 ரன்களே போதுமென விருந்துக்கு வந்ததைப்போல், பர்ன்ஸிடம் குசலம் விசாரித்துவிட்டு கிளம்பிக்கொண்டே இருந்தனர் பார்ட்னராய் துணைநிற்க வேண்டியவர்கள். பந்துவீச்சால், பக்கபலம் சேர்த்த ராபின்சன் மட்டுமே, வில்லோவாலும் வித்தைகளைக் காட்டினார். பர்ன்ஸுக்கும் அவருக்கும் இடையேயான 63 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான், 275 வரை இங்கிலாந்தின் ஸ்கோர் செல்லக் காரணமாக இருந்தது. நியூசிலாந்தும் 103 ரன்கள் முன்னிலை எடுத்தது.

சவுத்தி மற்றும் ஜாமிசனும் தங்களது ஸ்விங் பவுலிங்கோடு மிரட்ட, களம் கொஞ்சம் கைகொடுத்தது. சவுத்தி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குறிப்பாக, க்ராவ்லியின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கியிருந்தார். முதல் மூன்று பந்துகளை அவுட்ஸ்விங்களாக வீசி, நான்காவது பந்தை சற்றே தள்ளி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அனுப்ப, கவர் டிரைவுக்கு ஆசைப்பட்டு வெளியேறினார் க்ராவ்லி.

ஜாமிசனும் சவுத்திக்குத் துணைநின்றார். காயத்தால் போல்ட் ஆடமாட்டார் என்ற அறிவிப்பு, நியூசிலாந்தை பலவீனப்படுத்தலாம் என்ற கருத்தெழுந்தது. எனினும், ஆயுதக்கிடங்கில் ஈட்டிகளுக்கா பஞ்சம்?! முதல்முறை அயல்நாட்டுக்களத்தில் இறங்கியிருந்தாலும், ஜாமிசன் ஜாலம் காட்டினார். முக்கியமாக, சிப்லியை அவர் காலி செய்ததெல்லாம் இன்னிங்ஸின் மிகச்சிறந்த பந்துகளில் ஒன்று.

ENG v NZ
ENG v NZ
twitter.com/ICC

முன்னதாக, 103 ரன்கள் முன்னிலையோடும் நம்பிக்கையோடும் தொடங்கிய நியூசிலாந்து, அதிரடியாக ஆடாமல் 30 ஒவர்களில் வெறும் 62/2 என நான்காம் நாளை முடித்திருந்தது. மற்ற அணிகள் தைரியமாக தங்களது முன்கள் வீரர்களை அடித்து ஆடச் சொல்லி 5-வது நாளை பெரும்வாரியாக எதிரணியை ஆட வைக்கும். ஆனால் நியூசிலாந்து அந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பவே இல்லை. உள்நாட்டில் பேட்டிங்கில் தொடர்ந்து ஜொலிக்கும் கேன் வில்லியம்சன் அயல்நாட்டில் தொடர்ந்து சொதப்பி வருவது நியூசிலாந்து ரசிகர்களை பெரும் கவலையடைய செய்துள்ளது.

5வது நாள் ஆட்டம் டிராவுக்கே அதிக வாய்ப்பெனினும், 165 ரன்கள் முன்னிலை என்பதால், அடித்து ஆடி, ஒரு நல்ல இலக்கை, நியூசிலாந்து நிர்ணயித்தால், போட்டியின் சுவாரஸ்ய சுவை கொஞ்சம்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், நியூசிலாந்தின் பேட்டிங் லைன்அப் மறுபடியும் ஏமாற்றத்தையே தந்தது. ரன் எடுக்கும் வேகத்தை முடுக்கும் காரியத்தை யாருமே செய்யவில்லை. லாத்தம் மற்றும் ராஸ் டெய்லர் மட்டுமே சற்று ஆறுதல் அளித்தனர். கடைசி நாளில், 135 பந்துகளில் மேலும் 107 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், உணவு இடைவேளைக்கு சற்றுமுன் மழை குறுக்கிட்டது. திரும்பி வந்தபோது 169/6 என டிக்ளேர் செய்தது நியூசிலாந்து. இந்த இன்னிங்ஸிலும், ஓலி ராபின்சன் மட்டுமே மூன்று விக்கெட்டுகளை எடுத்திருக்க, ஆண்டர்சன் தவிர்த்து மற்ற பௌலர்கள் எல்லாம் ஒரு விக்கெட்டோடு ஆறுதல்பட்டுக் கொண்டனர்.

273 என்பது இலக்கு, 75 ஓவர்கள் கைவசம் என்ற நிலையில் இறங்கியது இங்கிலாந்து. பர்ன்ஸ் மற்றும் சிப்லி களமிறங்கினர். போன முறை ஓப்பனிங்கில் சோபிக்கத்தவறிய சிப்லி, புஜாராவினைப் போட்டியின்முன் பார்த்து வந்தாரோ என்னவோ, பந்துகளை உண்டே பசியாறிக் கொண்டிருந்தார். 'சுலபமான இலக்குதான்... முயன்றாவது பார்க்கலாம்' என்ற எண்ணமே இல்லாமல்தான் ஆடிக் கொண்டிருந்தது இங்கிலாந்து.

பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற வீரர்களை முதல் இன்னிங்ஸ் மிஸ் செய்ததோ இல்லையோ, இரண்டாவது இன்னிங்ஸ் ரொம்பவே தவறவிட்டது. ரூட் மட்டுமே வெல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடு ஆடியிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஒருவேளை, ஸ்டோக்ஸோ இல்லை பட்லரோ இருந்திருந்தால், கொஞ்சமேனும் அடித்து ஆடும் நம்பிக்கை முன்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு வந்திருக்கும். அப்படியில்லாததால், சிப்லி எங்கே தனது விக்கெட் வீழ்ச்சி நிலச்சரிவாய் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திவிடுமோ என நினைத்தார்போல! 'நமக்கேன் வம்பு' என்பதைப் போல், 200 பந்துகளுக்குமேல் சந்தித்து, அரைசதம் கடந்து ஆறுதல்பட்டுக் கொண்டார்.

ENG v NZ
ENG v NZ
twitter.com/ICC

ஒரு கட்டத்தில் எல்லாம், 20 ஓவர்களில் 137 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் என துரத்தக்கூடியதாகவே இலக்கு இருந்தது. இங்கிலாந்து இன்ஜின் சூடேறி வேகமாக ஓடவும், ஒரு இருக்கைநுனி போட்டியைக் காணவும் ரசிகர்களும் ஆவலாக இருந்தனர். ஆனால், அந்த இன்ஜின் இறுதிவரை ஓடவேயில்லை.

மறுபுறம் நியூசிலாந்து பௌலர்களும் 70 ஓவர்களை உயிரைக்கொடுத்து வீசியிருந்தனர். வில்லியம்சனும் பௌலிங் மாற்றங்களை, செய்து கொண்டேதான் இருந்தார். இரண்டு ஓவர்களைக்கூடதானே வீசிப்பார்த்தார். ஆனால், சிப்லி சிக்கவே இல்லை. தனது பௌலர்களுக்கு பயிற்சியாக இருக்கட்டுமென சில ஓவர்கள் வீசவைத்தார் வில்லியம்சன். கடைசியில், வேறுவழியின்றி, இரு கேப்டன்களும் கைகுலுக்கி, அடுத்த போட்டியில் "எட்ஜ்பாஸ்டனில் சந்திப்போம்!" எனச் சொல்லி விடைபெற, போட்டி டிராவானது.

முதல் டெஸ்ட், அதுவும் லார்ட்ஸில் : சிக்ஸர் அடித்து இரட்டை சதம் தொட்ட டெவன் கான்வே... யார் சாமி இது?

பௌலிங்கைப் பொறுத்தவரை, இருபக்க பௌலர்களுமே சிறப்பாகவே பந்துவீசி இருந்தனர். சவுத்தியும், ராபின்சனும் தலா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர். உண்மையில், அறிமுகவீரர்களாகப் பார்த்தால், கான்வேயின் இரட்டைசதத்துக்கு இணையான ஒரு தாக்கத்தை, ராபின்சனும் ஏற்படுத்தி இருந்தார். அதேபோல் மார்க் வுட், வாக்னர், ஜாமிசன் ஆகிய எல்லோருமே சிறப்பாகச் செயலாற்றியிருந்தனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை, கான்வேயின் இரட்டைசதம், பர்ன்ஸின் சதம், டிராவாக்கப் போராடிய சிப்லியின் கடைசிநிமிடப் போராட்டம் ஆகியவற்றைத் தவிர, பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை யாருமே ஆடவில்லை. ரூட்டும், ராபின்சன்னும் ஓரளவு ரன் சேர்த்திருந்தனர். வில்லியம்சனோ, மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்தார். அதேபோல், மிகுந்த எதிர்பார்ப்போடு களம்கண்ட பிரேஸி, அதற்கு நியாயம் கற்பிக்கவேயில்லை. இங்கிலாந்தின் இளைய வீரர்களின் பேட்டிங் எடுபடவில்லை என்பதோடு, நியூஸிலாந்து பேட்டிங்கின் பலவீனத்தையும் இப்போட்டி காட்டியுள்ளது.

Ollie Robinson
Ollie Robinson
twitter.com/ICC

0-0 என சமனில் உள்ள தொடரின் இரண்டாவது மற்றும் இறுதிப்போட்டி, வரும் 10-ம் தேதி, எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. 70 சதவிகிதம் பார்வையாளர்களோடு நடைபெற உள்ள அப்போட்டி, வீரர்களுக்கு புது உற்சாகத்தைக் கொண்டுவரலாம். ராபின்சன் மன்னிப்புக்கேட்டும், அந்தச் சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், விசாரணை முடியும் வரை அவர் விளையாட தடைவிதித்துள்ளது. அதேநேரம், இந்தியாவுடனான மோதலுக்குமுன், தன்னுடைய பிளேயிங் லெவனை இறுதிசெய்யும் நிலையில், நியூசிலாந்தும் உள்ளதால், அடுத்த போட்டியில், இருபக்கமும் மாற்றங்களைப் பார்க்கலாம். காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு