Published:Updated:

கேன் வில்லியம்சன் இல்லாத நியூசிலாந்து... இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளாக செய்யாத சாதனையை செய்யுமா?

england cricket
england cricket ( Rui Vieira )

ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் இல்லாத நிலையில், அது நியூசிலாந்துக்கு ஒரு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. எல்லாம் சரியாக நகர்ந்து, நியூசிலாந்து இப்போட்டியில் வென்றால் 22 ஆண்டுகளுக்குப்பிற இங்கிலாந்து மண்ணில் வெற்றி வாகை சூடும்.

தளபதியில்லாத படைபோல, வில்லியம்சன் இல்லாத நியூசிலாந்தும், அனுபவம் குறைந்த வீரர்களுடன் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்று சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.

முடிவை எட்டாது முடிவடைந்த, இங்கிலாந்து - நியூசிலாந்துக்கு இடையேயான, முதல் டெஸ்ட், இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்னும், ஒரு பெரிய மேடைக்காகத் தயாராகி வரும் இங்கிலாந்தில், முக்கிய நிகழ்ச்சிக்கு நடுவே வந்து செல்லும் விளம்பர இடைவேளையில் கேட்கப்படும் கேள்வி போல, இன்னுமொரு சுவாரஸ்ய மோதல் தொடங்கி இருக்கிறது.

மழையும் மைதானமும்!

முடிவு எட்டப்பட வேண்டிய முதல் போட்டி, இழுபறி இன்றி, நியூசிலாந்தின் பக்கம் சென்று முடிவடைந்திருக்க வேண்டிய போட்டி. ஆனால், ஒருநாள் முழுவதும் கொட்டித் தீர்த்த மழை, எல்லாவற்றையும் கெடுத்ததோடு, போட்டி எப்படிப் போகிறதென, அவ்வப்போது எட்டி வேறு பார்த்தது. இதனாலேயே, அடுத்த போட்டி நடக்கும் நாட்களுடைய வானிலை நிலவரங்களை நியூசிலாந்து ரசிகர்கள் உற்று நோக்க ஆரம்பித்து விட்டனர். அதன்படி, இந்த இரண்டாவது டெஸ்ட்டில் முதல் மற்றும் கடைசி நாட்களில் மட்டும் மழை அவ்வப்போது குறுக்கிடும் எனச் சொல்லி இருப்பது, ரசிகர்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானம், வேகப்பந்து வீச்சுக்கு, சற்று அதிகமாக ஆதரவளிக்கும் என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருக்கிறது.

ஆண்டர்சன்
ஆண்டர்சன்

22 ஆண்டு சா(சோ)தனை முறியடிக்கப்படுமா?

நியூசிலாந்து, கடைசியாக, 1999-ல் தான், இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. தற்சமயம், 0-0 என சமனில் இருக்கும் தொடரை, இந்த இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியினை வெல்வதன் மூலமாக, 1/0 என மாற்றி, கைப்பற்றும் வாய்ப்பு நியூசிலாந்துக்கு கிடைத்துள்ளது. ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் இல்லாத நிலையில், அது நியூசிலாந்துக்கு ஒரு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. எல்லாம் சரியாக நகர்ந்து, நியூசிலாந்து இப்போட்டியில் வென்றால் 22 ஆண்டுகளுக்குப்பிற இங்கிலாந்து மண்ணில் வெற்றி வாகை சூடும்.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிச்சுற்று நடைபெற உள்ள இந்தியாவுடனான போட்டியை சந்திக்க தேவையான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்கும். அந்த வகையிலும், இந்தப் போட்டி, இங்கிலாந்தை விட, நியூசிலாந்துக்கு அதி முக்கியமானது.

ராபின்சன் வெளியே!

ராபின்சனின் சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்கான நடவடிக்கையாக, அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், சர்வதேசப் போட்டிகளில் விளையாட தற்காலிகமாக தடை விதித்துள்ளது. லார்ட்ஸில் நடந்த, அறிமுகப் போட்டியிலேயே, ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ராபின்சனின் இடத்தை, இரண்டாவது போட்டியில் யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக ஓலி ஸ்டோனை அணியுடன் இணைந்திருக்கிறார்கள்.

கேன் வில்லியம்சன் இல்லாத நியூசிலாந்து... இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளாக செய்யாத சாதனையை செய்யுமா?

சுழலும், வேகமும்?!

முதல் போட்டியை, பிரதான சுழற்பந்து வீச்சாளர்களே இல்லாமல், ரூட்டின் சுழல் சாட்டையை மட்டுமே நம்பிக் களமிறங்கியது இங்கிலாந்து. அதேப்போல் இரண்டாவது போட்டியிலும் ஸ்பின்னரை இணைக்காமல் வேகப்பந்து வீச்சாளரான ஓலி ஸ்டோனையே ப்ளேயிங் லெவனுக்குள் இணைத்திருக்கிறது.

ஆண்டர்சன் & பிராட்!

போன போட்டியில், இங்கிலாந்தின் முக்கிய பௌலிங் ஆளுமைகளான, ஆன்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட், இருவரும் இணைந்து, மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும், வழக்கம் போல, வேரியேஷன்களில் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இங்கிலாந்து, சுழற்சி முறையில் வீரர்களைப் பயன்படுத்தும் கொள்கையில், தீவிரம் காட்டி வருவதால், இரண்டாவது போட்டியில், ஆன்டர்சன் அல்லது பிராடுக்குப் பதிலாக, வேறு ஒருவர் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆண்டர்சன், பிராட் என இருவரையுமே இரண்டாவது போட்டியிலும் தக்கவைத்திருக்கிறது இங்கிலாந்து.

கேன் வில்லியம்சன் இல்லாத நியூசிலாந்து... இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளாக செய்யாத சாதனையை செய்யுமா?
Rui Vieira

வில்லியம்சனின் காயம்!

நியூசிலாந்து மைதானங்களில், சதங்களை விளாசும் கேன் வில்லியம்சன், ஓவர்சீஸ் போட்டிகளில், தொடர்ந்து திணறியே வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, மொத்தம் 14 ரன்கள் மட்டுமே அவரிடமிருந்து வந்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியிலாவது, அவர் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை மனதில் வைத்து, காயம் பெரிதாகி விடக் கூடாதென்ற நோக்கத்தோடு, இந்த முடிவை நியூசிலாந்து எடுத்துள்ளது.

கேன் வில்லியம்சனுக்கு பதிலாக கேப்டனாக, டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஒன் டவுனில், வில்லியம்சனுக்கு பதிலாக, முதல் போட்டியிலேயே வாய்ப்புக்காகக் காத்திருந்த, வில் யங் இறக்கப்பட இருக்கிறார். அதே நேரத்தில், பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் இல்லாதது, அவர்களுக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பேட்டிங் ஏமாற்றங்கள்!

முதல் போட்டியில், ஒன் மேன் ஷோவாக, கான்வே, பர்ன்ஸ் என இரு அணிகளிலும், ஒருவர் மட்டுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து, சிப்லி மீட்டெடுத்தார். ரூட்டே தனது முழுத் திறமையை பயன்படுத்தி விளையாடத் தவற, இருபக்கமும், வேறு எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படியாக ஆடவில்லை. குறிப்பாக, இங்கிலாந்தின் பேட்டிங் பலவீனம், இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக வெளிப்பட்டது. தொட்டால் நொறுங்கி விழும் கண்ணாடிக் கோட்டை போலத்தான் இருந்தது, அவர்கள் பேட்டிங் லைன் அப். டிஃபண்டிங் மோடில், டிராவாக்கும் நோக்கோடு, போட்டியை அணுகினர். நியூசிலாந்து காயம், ரொட்டேஷன் என வில்லியம்சன், வாட்லிங், டிம் சவுத்தி, ஜேமிசன் என முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டது.

இணையும் போல்ட்!

சென்ற போட்டியில், இறுதி நாளில், போல்ட்டை, நியூசிலாந்து ரொம்பவே தவறவிட்டது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில், மிட்சல் சான்ட்னருக்கு பதிலாக, போல்ட், அணியுடன் இணைகிறார். புதுப் பந்தில் பயமேற்றும் அவர், இரு பக்கமும் ஸ்விங் செய்தும் பேட்ஸ்மேனுக்கு அச்சமேற்படுத்துவார். கடந்த 2015-ல், லார்ட்ஸில், 9/164 என்னும் அற்புதமான ஒரு பௌலிங் ஸ்பெல்லை, போல்ட் வீசி இருந்தார்.

இன்றளவும், டெஸ்ட்டில் அவரது சிறந்த பௌலிங் பர்ஃபாமென்ஸ் இதுதான். மேலும், இங்கிலாந்தில், தான் பங்கேற்ற, ஒன்பது டெஸ்ட் போட்டிகளில், 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவர், அணியின் வேகப்பந்து வீச்சை உயர் தளங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடியவர்.

கேன் வில்லியம்சன் இல்லாத நியூசிலாந்து... இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளாக செய்யாத சாதனையை செய்யுமா?
Rui Vieira

22 வருடக் கனவை நியூசிலாந்து சுமந்து அலைகிறதென்றால், மறுபுறம் கடந்த நான்கு வருடங்களில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில், ஒருமுறை கூட, நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை என்னும் உண்மையும் இங்கிலாந்தைத் துரத்துகிறது. நியூசிலாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி, அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை நோக்கி, கம்பீரமாக வீரநடை போடுமா, இல்லையெனில், சொந்த மண்ணில், இழந்த பெருமையை, இங்கிலாந்து மீட்டெடுக்குமா? எட்ஜ்பாஸ்டனிடமே பதிலுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு