Published:Updated:

ENG v IND: சொதப்பிய கோலியும், மிடில் ஆர்டரும்... ராகுல் - பண்ட் கூட்டணி முன்னிலை பெற வைக்குமா?

இலகுவாக உடைக்கப்படுவது இந்திய மிடில் ஆர்டரா, கோலி ரசிகர்களின் இதயங்களா எனப் பந்தயம் வைத்தால், அதில் இரண்டுமே வெல்லும் என மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது இந்திய அணி.

வெளிச்சமின்மை மற்றும் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு, அவ்வப்போது, ஓரிரு பந்துகளோடு ஒத்திகை பார்க்கப்பட்ட இரண்டாவது நாள் ஆட்டம் இறுதியாகக் கைவிடப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 58 ரன்கள் பின்தங்கி இருக்க, கே எல் ராகுலும், பண்டும் களத்தில் உள்ளனர்.

வலுவான அஸ்திவாரம்

இந்திய டி20 ஓப்பனர்கள், டெஸ்ட் ஓப்பனிங்கிலும் சோடை போகாமல் சிறப்பாகவே தொடர்ந்தனர். எந்தப் பந்தைத் தொட வேண்டும், எதைவிட வேண்டும் என்னும் பாகுபாடறிந்து, ஒவ்வொரு பந்தையும் சர்வ ஜாக்கிரதையோடு எதிர்கொண்டனர். 97 ரன்களைச் சேர்த்தபோது, இக்கூட்டணி உடைந்தாலும், 2000-வது ஆண்டுக்குப்பின், இங்கிலாந்தில் இந்திய ஓப்பனர்கள் இருவரின் இரண்டாவது சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக இதுதான் அமைந்தது. 2007-ம் ஆண்டு, இதே டிரெண்ட் பிரிட்ஜில் வைத்து அடிக்கப்பட்ட வாசிம் ஜாஃபர் - தினேஷ் கார்த்திக்கின் 147 ரன்கள் இன்னிங்ஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

ENG v IND
ENG v IND

புல் ஷாட் பரிதாபம்

எது உனக்கு அள்ளிக் கொடுக்கிறதோ அதுவே உன்னைத் தள்ளியும் விடும் என புது உபதேசமெல்லாம் செய்ய வைத்தது ரோஹித்தின் புல் ஷாட்! ரன்களை அவருக்கு பல சமயங்களில் கொட்டிக் கொடுத்துள்ள அதே புல் ஷாட் தூண்டிலிட்டுத்தான் ராபின்சன் உதவியோடு இங்கிலாந்து அவரைத் தூக்கியது. சிறப்பாகத் தொடங்குவதும் பின் மோசமாக 30-களில் முடிப்பதுவும் ரோஹித்துக்கே கைவந்த கலை. அதையே மற்றுமொரு முறை செய்து சென்றுள்ளார் ரோஹித்.

புஜாரா திணறல்

இந்த ஆண்டில் கடைசியாக ஆடிய ஏழு இன்னிங்ஸ்களில், இரண்டு அரைசதங்கள் வந்திருந்தாலும், அதனைத் தவிர்த்துப் பார்த்தால் ஒருமுறை கூட புஜாரா 25 ரன்களைத் தாண்டவில்லை. அதுவும், இங்கிலாந்து கண்டிஷனில் திணறும் அவரது வழக்கமும், இப்போட்டியிலும் மாற்றப்படவில்லை. ராபின்சன் ஓவரில் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றதனால் ரிவ்யூவின் வாயிலாகத் தப்பித்த புஜாரா விக்கெட்டின் ஆயுட்காலம், அதற்குப் பின் ஏழே பந்துகள்தான். ராபின்சன் விட்டதை ஆண்டர்சன் பிடித்து விட, பரிதாபமாக முடிவுக்கு வந்தது புஜாராவின் இன்னிங்ஸ்.

ENG v IND
ENG v IND

ஆண்டர்சன் என்னும் ஆகச்சிறந்தவன்

உணவு இடைவேளைக்கு முன் ஸ்விங் ஆனதை விட, சற்றே அதிகமாக அதற்குப்பின் பந்து ஸ்விங் ஆனது. அதைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தியது ஆண்டர்சன்தான். அதுவும் புஜாராவை முடித்த கையோடு, அடுத்த பந்திலேயே கோலியை ஆட்டமிழக்கச் செய்தார் ஆண்டர்சன். 2018-ல், கோலிக்கு வீசிய 270 பந்துகளில், ஒருமுறை கூட அவரது விக்கெட்டை எடுக்க முடியாத ஆண்டர்சனுக்கு, இம்முறை அதனை நிகழ்த்த ஒரு பந்தே போதுமானதாக இருந்தது.

ENG v IND
ENG v IND

கோலி ஏமாற்றம்

'இன்னொரு நாள், இன்னொரு கோலியின் சதம்' என சகாப்தமாகக் கொண்டாடப்பட்ட கோலியின் பேட் இன்று பெரிய ஸ்கோர் எடுத்தால்தான் ஆச்சர்யம் என்ற நிலைக்கு நகர்த்தப்பட்டிருக்கிறது. கோல்டன் டக்காகி வெளியேறிய கோலி, இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை டக் அவுட்டாகி இருக்கிறார். நான்கு முறையுமே இங்கிலாந்துக்கு எதிராகவே அது நிகழ்ந்தது என்பதுதான் கூடுதல் சோகமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஹானே ரன் அவுட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்றுக் கொள்ளவே முடியாத பெருங்குற்றம், ரன் அவுட். அதனை இப்போட்டியில் இருமுறை முயன்று, இரண்டாவது முறை வெற்றியும் பெற்றார் ரஹானே. இரண்டு அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகள், அவரது தோளில் சுமத்தியிருந்த பொறுப்பைக் கூட உதறித் தள்ளி, தேவையே இல்லாத ஒரு ரன் அவுட்டுக்கு ஆளாகியிருந்தார். 97/1 என்பதிலிருந்து 112/4 என ஸ்கோர் மாற, மின்னல் வேகத்தில் வந்து சென்ற மூவரும், ஒற்றை இலக்கத்தோடே வெளியேறி இருந்தனர்.

ENG v IND
ENG v IND

ராகுலின் அரைசதம்

இரண்டு ஆண்டுகள் பழக்கம் விட்டதைப் போல் துளியும் தெரியவில்லை ராகுலின் நேர்த்தியான ஆட்டத்தில்! முழுத் தகுதிக்குரியதாக இருந்தது அவரது அரை சதம். தொடக்கத்தில், ஸ்விங்குக்கு செட்டில் ஆகத் திணறினாலும், அதன்பின் சிறப்பாகத் தொடர்ந்திருந்தார்.

57 ரன்களோடு கே எல் ராகுலும், ஏழு ரன்களோடு பண்டும் களத்தில் நிற்க, இந்தியா, 58 ரன்கள் பின்தங்கி உள்ளது.

பலமுறை வெளிச்சமின்மை, மழை என இயற்கையின் சதியால் போட்டி கைவிடப்பட்டது. ஒருகட்டத்தில், மூன்று நாள்களிலேயே போட்டி முடிந்து விடுமோ என்றெல்லாம் தோன்றிய எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்று போய் நாளை வாருங்கள் என அனுப்பி வைத்துள்ளது மழை.

ENG v IND
ENG v IND
கே எல் ராகுல் - பண்ட், கூட்டணி, அணியை முன்னிலை பெற வைக்குமா, அல்லது இன்றைப் போலவே விரைவான விக்கெட்டுகளால் இங்கிலாந்து தாக்குமா? கேள்விகள் ஆயிரம், பதில், நொடிக்கு நொடி நிலைமை மாறும் மூவிங் டேயான மூன்றாவது நாளிடம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு