ஸ்மித், வார்னர் இருவரும் உலகக் கோப்பை தொடரின்போதே இங்கிலாந்து ரசிகர்களின் கூச்சலுக்கு பழக்கப்பட்டுவிட்டனர். ஆனால் பேங்கிராஃப்ட், அவர்களின் கூச்சல்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதுதான் அவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். ஆஷஸில் சாதித்தால் உலகுக்கே தெரியும். ஆகையால், இந்த மூவரும் இந்தட் தொடரில் சாதித்து, இழந்த மதிப்பை மீட்டெடுக்கப் போராடுவார்கள். கிரிக்கெட்டின் மற்றொரு ஆகச்சிறந்த திருவிழா, கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரைவல்ரியான ஆஸ்திரேலியா – இங்கிலாந்துக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்பதால், பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆஷஸ் இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் பைலேட்ரல் சீரீஸ் மட்டுமே. ஆனால், எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் ரசித்துப் பார்க்கும் தொடர் அது. காரணம், கிரிக்கெட்டின் அத்தனை அம்சங்களையும் அந்தத் தொடரில் பார்க்கலாம்.

இந்த டி20 யுகத்திலும் ஒரு டெஸ்ட் தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அது ஆஷஸ் தொடருக்காக மட்டுமே. ஆஷஸில் வெற்றிபெறவேண்டியது இரு அணிகளுக்கும் கெளரவப் பிரச்னை. அப்படி சிறப்புமிக்க ஆஷஸ் தொடர், மற்றொரு சரித்திர நிகழ்வுக்கும் ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது. ஐசிசி அறிவித்துள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தொடக்கம், இந்த ஆஷஸ் தொடர்!
ஒவ்வொரு ஆஷஸ் தொடருக்கு முன்பும் ஏதோ ஒரு புதிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி இந்த முறை மிகவும் எதிர்பார்க்கப்படுவது ஸ்மித், வார்னர், பேங்கிராஃப்ட் ஆகிய மூவரின் கம்பேக்தான். சான்ட் பேப்பர் சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டின் நீண்ட ஃபார்மெட்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதே மிகக்கடினம். அதுவும் ஆஷஸ் போன்ற தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றால்...
ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் அசுர ஃபார்மில் இருந்தபோது, இந்த சர்ச்சையில் சிக்கினார். ஒரு வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருந்தபோதிலும் ஐசிசி தரவரிசையில் நான்காவது இடத்தில் நீடிக்கிறார். ஆனால், இந்த உலகக் கோப்பையில் ஓரிரு போட்டிகள் தவிர்த்து, தன் தரத்துக்கு ஏற்ற ஆட்டத்தை ஸ்மித் வெளிப்படுத்தவில்லை. அல்லது அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. பல போட்டிகளில், பேட்டிங் ஆர்டரில் குழப்பம் நீடித்தது. 10 போட்டிகளில் 379 ரன்கள் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில், அவரின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் மீண்டும் தன் உச்சத்தை அடையவும் இந்த ஆஷஸ் தொடர் அவருக்கு உதவலாம்.

ஆனால் வார்னரோ, `இவர் ஒரு வருஷம் ஆடலையா என்ன?’ என்கிற ரீதியில்தான், அவரின் உலகக் கோப்பை செயல்பாடு இருந்தது. 10 போட்டிகளில் 647 ரன்கள் வெளுத்திருந்தார். இந்தத் தொடரில் வார்னரின் சதம், அந்த டிரேடு மார்க் ஜம்ப்பை ஒரு முறையல்ல பல முறை எதிர்பார்க்கலாம். பேங்கிராஃப்ட் கவுன்டி போட்டிகளில் டர்ஹம் அணியின் கேப்டனாகப் பொறுப்பெடுத்து, அதில் சிறப்பாகச் செயல்பட்டார். 17 போட்டிகளில் 726 ரன்கள் எடுத்து, ஆஷஸ் தொடரில் இடம்பெற்றிருக்கிறார்.
ஸ்மித், வார்னர் மற்றும் பேங்கிராஃப்ட் ஆகியோர், வோக்ஸ், ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர் ஆகியோரின் மிரட்டல் பெளலிங்கை மட்டும் எதிர்கொள்ளவேண்டியதாக இருக்காது. அவர்களின் அட்டாக்கையும் தாண்டி, மிகமுக்கியமாக அவர்கள் சமாளிக்க வேண்டிய ஒரு விஷயம், இங்கிலாந்து ரசிகர்களின் கூச்சல்! ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஒவ்வொரு ஷாட்டும் அமைதியை உடைத்து கூச்சலை உண்டாக்கும். கைதட்டல்கள் கிடைப்பது சந்தேகமே. அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், அவர்களின் ஆட்டத்தைக் கட்டமைத்து, பேட்டால் பதில் சொல்ல வேண்டியது அவசியம்.

ஸ்மித், வார்னர் இருவரும் உலகக் கோப்பை தொடரின்போதே இங்கிலாந்து ரசிகர்களின் கூச்சலுக்குப் பழக்கப்பட்டுவிட்டனர். ஆனால் பேங்கிராஃப்ட், அவர்களின் கூச்சல்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதுதான் அவர் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். ஆஷஸில் சாதித்தால் உலகுக்கே தெரியும். ஆகையால், இந்த மூவரும் இந்தத் தொடரில் சாதித்து, இழந்த மதிப்பை மீட்டெடுக்கப் போராடுவார்கள்.
“2001 முதல், இங்கிலாந்தில் விளையாடப்படும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா பாணி சரியாக எடுபடவில்லை. ஆதலால், பல புதிய முயற்சிகள் இதில் இருக்கும்” என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப, முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மிகமுக்கிய பெளலரான மிட்செல் ஸ்டார்க் ஆட மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. எந்த மாற்றம் செய்தாலும் பரவாயில்லை, ஆஸ்திரேலியர்களுக்கே உரிய அந்த தனித்துவமான போராட்டக் குணத்தையும் ஸ்லெட்ஜிங்கையும் மாற்றாமல் இருக்க வேண்டும்.

`ஸ்லெட்ஜிங்… ஆஷஸ் தொடரை வர்த்தகமாக்குவது இதுதான். இன்னும் சொல்லப்போனால், ஆஷஸ் தொடரின் முக்கிய அங்கமே ஸ்லெட்ஜிங்தான். ஆஷஸைப் பற்றி நினைவுகூர்ந்தால், வீரர்களின் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் மட்டுமல்ல, களத்தில் வெடித்த வார்த்தைப் போரும் நினைவுக்கு வரும். இப்போதுள்ள ஆஸ்திரேலியா அணி அதைக் குறைத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. உலகக் கோப்பையில் அது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ஆஷஸில் அப்படிச் செயல்படாமல், எப்போதும் போல் ஆக்ரோஷமாகச் செயல்பட வேண்டும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புவர்.
அப்படியே இங்கிலாந்து அணிக்குச் சென்றால், அங்கும் பல புதிய மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர். வேர்ல்டு கப் ஹீரோ ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெற்றிருக்கிறார். வெள்ளப்பந்தில் தன்னுடைய பவுன்சர்களால் மிரட்டிக் கொண்டிருந்தவர், சிவப்புப் பந்தில் வார்னர் ஸ்மித்துக்கு எந்த மாதிரியான தாக்கம் ஏற்படுத்தப்போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பு. காயம் காரணமாக முதல் போட்டியில் அணியில் இடம்பெறாவிட்டாலும், அடுத்து வரும் போட்டிகளில் அவர் DEBUT ஆகலாம்.

``ஆஷஸ் ஆடுவதே என் கனவு” என்று சொன்ன ஆர்ச்சர் டெஸ்டிலும் தடம் பதிக்க காத்துக்கொண்டிருக்கிறார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் வருகை எதிர்பார்க்கப்பட்டாலும் இன்னும் பிராட், ஆண்டர்சன் செயலிழக்கவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்னமும் `ஆன்டர்சன் கிங் ஆஃப் ஸ்விங்’ என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் தாக்கம் இந்த ஆஷஸ் தொடரிலும் பெரிதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
முக்கியமாக, ஜேசன் ராய் எப்படிச் செயல்படப்போகிறார் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமாகி, இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்திருந்தார். இருந்தும், இந்த ஆஷஸ் தொடர்தான் அவருக்கு மிகப்பெரிய தேர்வாக இருக்கும். ரூட் ஒன் டவுனில் இறங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இதுவும் டாப் ஆர்டரை பலப்படுத்த உதவும். இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், சிடில் ஆகியோரின் வேகத்தைச் சமாளிப்பது அவ்வளவு எளிது அல்ல.
ஸ்டார்க்கின் யார்க்கர்கள், கம்மின்ஸின் பெளன்சர்களை ரூட் எதிர்கொள்வது, ஆண்டர்சனின் ஸ்விங்கை ஸ்மித் எதிர்கொள்வது என எப்போதும்போல் இந்த ஆஷஸ் தொடரும் பல பெஸ்ட் ‘யூ ப்யூட்டி’ தருணங்களை நமக்குத் தரும்.

2001-க்குப் பிறகு, இங்கிலாந்தின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வென்றதில்லை. ஆனால் , மற்றொரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம் ஒன்று உள்ளது. கடந்த இரண்டு உலகக் கோப்பையை வென்ற அணிகள், அதற்குப் பிறகு நடந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தன. 2011-ல் இந்தியா, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டியில்கூட ஜெயிக்காமல் நாடு திரும்பியது. ஆஸ்திரேலியாவிடமும் பலத்த அடிவாங்கியது. 2015-ல் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை இழந்தது.
உலகக் கோப்பையில் அரையிறுதியில் வீழ்த்தியதற்குப் பழிதீர்க்கும் விதமாக, இந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா பயன்படுத்தலாம். அதேசமயம், உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த ஆஷஸ் தொடரையும் வென்று 2019-ம் ஆண்டை மேலும் மறக்கமுடியாத ஆண்டாக மாற்ற முற்படும். ஆறு வாரங்கள், 5 டெஸ்ட் போட்டிகள்... பல மறக்க முடியாத மாயத் தருணங்களை மீண்டும் நமக்காக கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறது, ஆஷஸ். கிரிக்கெட்டின் பழைமையான ரைவல்ரிக்கு நாமும் தயாராவோம்!