Published:Updated:

Ashes: 68 ஆல் அவுட், நூற்றாண்டு காணாத அவமானம்... ஆஷஸை இழந்த இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா ( ICC )

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் மோதவே இல்லை. ஜோ ரூட்டுடன் மட்டுமே மோதிக் கொண்டிருக்கிறது.

Ashes: 68 ஆல் அவுட், நூற்றாண்டு காணாத அவமானம்... ஆஷஸை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் மோதவே இல்லை. ஜோ ரூட்டுடன் மட்டுமே மோதிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
ஆஸ்திரேலியா ( ICC )

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இரண்டரை நாள் கூட நீடிக்காத இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி மிக மோசமாக தோற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 267 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமான இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்த ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
போலந்த்
போலந்த்
ICC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெறுமென தலைப்பு சுவாரஸ்யத்திற்காக மட்டுமில்லை. உண்மையிலேயே, இங்கிலாந்து அணிக்கு இது அவமானகரமான தோல்விதான். இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 185 ரன்களை எடுத்திருந்தது. பதிலுக்கு ஆஸ்திரேலியா 267 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தது. இங்கிலாந்தை விட 82 ரன்கள் முன்னிலை. இந்த 82 ரன்களைக் கூட கடக்க முடியாமல் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருக்கிறது. இரண்டு நாள் மற்றும் ஒரு அரை செஷன் அளவுக்கே போட்டி நடந்துள்ளது. அதற்குள் இங்கிலாந்து காலியாகி விட்டது. ஒரே ஒரு முறை மட்டுமே பேட் செய்து 267 ரன்களை மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த நூறாண்டில் எந்த ஒரு அணியும் இவ்வளவு குறைவான ஸ்கோரை எடுத்து இன்னிங்ஸ் வெற்றியை பெற்றதே இல்லை.

இதை ஆஸ்திரேலியாவின் நூற்றாண்டு சாதனை எனச் சொல்வதை விட இங்கிலாந்தின் நூற்றாண்டு கண்டிராத அவமானகரமான தோல்வி என அழைப்பதே சரியாக இருக்கும்.

இரண்டாம் நாளான நேற்றைய முடிவில் இங்கிலாந்து அணி 31-4 என்ற நிலையில் இருந்தது. க்ரீஸில் ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் இருந்தனர். இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வெறும் 51 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டிருந்தது. அதனால் இன்னிங்ஸ் தோல்வியை பற்றியெல்லாம் யாரும் பெரிதாக யோசிக்கவே இல்லை. ஜோ ரூட் நின்று எப்படியாவது உருட்டி முதல் போட்டியை போன்று ஆஸ்திரேலியாவிற்கு ஒரு சொற்பமான டார்கெட்டையாவது செட் செய்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் தலைகீழாக மாறியது. வெறும் 15.4 ஓவர்களில் 37 ரன்களுக்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அறிமுக வீரரான போலந்த் இந்த 6 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக இந்த இன்னிங்ஸில் 4 ஓவர்களை மட்டுமே வீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.
ஜோ ரூட்
ஜோ ரூட்
Jon Super

32 வயதாகும் போலந்த் முதல்தர போட்டிகளில் அனுபவமிக்கவராக இருந்தாலும் சர்வதேச அரங்கில் இதுதான் அவரின் முதல் டெஸ்ட். ஒரு அறிமுக வீரரால் வெறும் நான்கே ஓவர்களை வீசி இங்கிலாந்தை மொத்தமாக வாரி சுருட்ட முடிகிறது. அந்த அளவுக்குத்தான் இங்கிலாந்து அணியின் பேட்டிங் தரம் இருக்கிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் மோதவே இல்லை. ஜோ ரூட்டுடன் மட்டுமே மோதிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து அணி போட்டியை வெல்ல 20 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டிய சூழலில், ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலே போதும்.

ஜோ ரூட், அவர் மட்டும்தான் ஆஸ்திரேலியாவிற்குக் கொஞ்சம் சவாலளித்திருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

Stokes
Stokes
England Cricket

0, 23, 7, 4, 4, 7 இந்தத் தொடரில் முடிந்திருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஓப்பனர்கள் கூட்டணியாக அடித்த ரன்கள் இவை. 6 இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸில் கூட நம்பிக்கையளிக்கும் வகையில் ஒரு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்துக்கு அமையவில்லை. ரோரி பர்ன்ஸ் சொதப்புகிறார் என சக் க்ராலியை அழைத்து வந்தால் அவரும் சொதப்புகிறார். ஏறக்குறைய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் கூட்டணியாக நம்பர் 3 இல் இறங்கும் டேவிட் மலானும் நம்பர் 4 இல் இறங்கும் ஜோ ரூட்டுமே ஆடுகிறார்கள் எனக் கூறலாம். அவ்வளவு சீக்கிரமாக அவர் க்ரீஸிற்குள் வந்துவிடுகிறார்கள். இந்த ஆண்டில் மட்டுமில்லை, இந்தத் தொடரிலும் அதிக ரன் அடித்தவராக ஜோ ரூட்டே இருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் சப்போர்ட்டாக மலான் ஆடி வருகிறார். இவர்களைத் தாண்டி சொல்லிக்கொள்ளும் வகையில் யாருமே ஆடுவதில்லை. கடந்த ஆஷஸில் ஹெட்டிங்லியின் ஸ்டோக்ஸ் ஆடிய இன்னிங்ஸ் அவருக்கே மறந்து போயிருக்கும் போல. அந்த ஸ்டோக்ஸ்தான் இப்போது இங்கிலாந்து அணிக்கு தேவை. ஆனால், அப்படி ஆடுவதற்கான அறிகுறியைக் கூட ஸ்டோக்ஸ் காட்டவில்லை.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உச்சக்கட்ட பொறுமையுடன் அணியைக் காப்பாற்ற இதுவரை இல்லாத வகையில் டிஃபன்ஸ் ஆடிய பட்லர், அடுத்த போட்டியிலேயே அணி தள்ளாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்லாக் ஸ்வீப் ஆடி விக்கெட்டை விடுகிறார். இப்படி ரூட்டையும் மலானையும் தவிர அத்தனை பேரும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருந்தனர். அவர்களோடு சேர்ந்து ரூட்டும் மலானுமே சொதப்பினால் என்ன நடக்கும்? இங்கிலாந்து 68க்கு ஆல் அவுட் ஆகி அவமானகரமான தோல்வியை சந்திக்கும். அதுதான் இங்கே மூன்றாவது போட்டியில் நிகழ்ந்துள்ளது. மலான் டக் அவுட். ரூட் 28 ரன்களில் அவுட். இங்கிலாந்து அணி 27.4 ஓவர்களிலேயே ஆல் அவுட்.

சிறப்பான பௌலர்களைக் கொண்டிருந்தாலும், ஒரு சரியான பௌலிங் லைன் அப்பை கட்டமைப்பதிலும் அவர்களை முறையாக வழி நடத்துவதிலும் ஜோ ரூட்டே கடுமையாக தடுமாறிக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டியும் இங்கிலாந்து பௌலர்கள் கொஞ்சம் நன்றாகவே செயல்பட்டு வருகின்றனர். அவர்களும் முழுமையாகச் சொதப்பினால், ஆஸ்திரேலியா இங்கிலாந்தை ஒரு புழுவை நசுக்குவது போல நசுக்கிவிடும்.

Australia
Australia
ICC

'Too many holes in the Ship' என அடைக்க முடியாத அளவுக்கு கப்பலில் ஓட்டை விழுந்துள்ளது. சென்னை அணி 2020 ஐ.பி.எல் சீசனில் கடுமையாக சொதப்பிய போது கேப்டன் தோனி பேசிய வார்த்தைகள் இது. கிட்டத்தட்ட இங்கிலாந்தும் ஜோ ரூட்டும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். "எங்கே பிரச்னை இருக்கிறதென எங்களுக்குத் தெரியும். அதை சரி செய்து அடுத்த இரண்டு போட்டிகளில் கடுமையாக முயன்று வெற்றியை நோக்கி நகர்வோம்" என ஜோ ரூட் பேசியுள்ளார். ஓட்டைகள் அடைபடுமா?

ஸ்டார்க்கின் வெறித்தனமான யார்க்கரோடு முதல் பந்திலிருந்தே இந்த ஆஷஸை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்திரேலியா, மிகச்சிறப்பான முறையில் இந்தத் தொடரை வென்றுள்ளது. வாழ்த்துக்கள் ஆஸி!