Published:Updated:

`4 ஆண்டுகள் ஐபிஎல்; 2023 உலகக் கோப்பை ரோடு மேப்!’- தோனி குறித்து இங்கிலாந்து ஸ்பின்னரின் லாஜிக்

தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட முடியும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் கூறியிருக்கிறார்.

Published:Updated:

`4 ஆண்டுகள் ஐபிஎல்; 2023 உலகக் கோப்பை ரோடு மேப்!’- தோனி குறித்து இங்கிலாந்து ஸ்பின்னரின் லாஜிக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட முடியும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் கூறியிருக்கிறார்.

தோனி

கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி, சர்வதேசப் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் வெளியான பிசிசிஐயின் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலிலும் தோனி பெயர் மிஸ்ஸிங். இதனால், அவர் ஓய்வை விரைவில் அறிவிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்தவர்கள், பிசிசிஐ ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினர்.

தோனி
தோனி

ஆனால், இவை எதையும் கண்டுகொள்ளாமல் ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்து பயிற்சியைத் தொடங்கினார் தோனி. ஏறக்குறைய ஒருவார காலம் பயிற்சி போய்க்கொண்டிருந்த நிலையில், மார்ச் 2வது வாரத்தில் இந்தியாவில் கொரோனா பிரச்னை எழுந்தது. ஊரடங்கு குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். கொரோனா ஊரடங்கால் 2020 ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தோனி, ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் இடம்பிடிக்கலாம் எனப் பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் வகையிலேயே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதையொட்டியே கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், தோனி ஏதாவது ஒருவகை கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் சூழலில் அவரால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர்.

மாண்டி பனேசர்
மாண்டி பனேசர்

இதுதொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பனேசர், ``நான் தோனியாக இருந்தால், நிச்சயம் ஓய்வுபெற மாட்டேன். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன். தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2023ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பங்கெடுப்பது குறித்து சிந்திப்பேன். விளையாட்டைப் பொறுத்தவரை சில விஷயங்கள் திடீரென மாறும். இதனாலேயே அவர் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என்று நான் சொல்கிறேன்’’ எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், ஐபிஎல் தொடர் தோனியை இழந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ள பனேசர், ``சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் இருப்பது அந்தத் தொடரை ரசிகர்கள் தொடர்ந்து பார்ப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

தோனி
தோனி

அவர் மேலும் கூறுகையில், ``ஓய்வுபெறுவதா வேண்டாமா என்பது குறித்து அவர் முடிவு செய்ய வேண்டும். அதேநேரம், ஓய்வுபெற்றுவிட்டால் கிரிக்கெட் உலகில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் அவர் சிந்திக்க வேண்டும். வேறு எங்கும் தோனி விளையாடுவதைப் பார்க்க முடியாது என்பதால், ரசிகர்கள் ஐபிஎல் மீது கூடுதலாகக் கவனம் செலுத்துவார்கள். இது ஐபிஎல் தொடரின் முக்கிய அம்சமாக மாறும். தோனியை ஐபிஎல் இழந்துவிடக் கூடாது’’ என்றும் பனேசர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தோனி சி.எஸ்.கேவுக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் தோனியை சி.எஸ்.கே தக்கவைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் #DhoniRetires என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டானது. அதேபோல், தோனி டி20 உலகக் கோப்பையில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் உலவிக் கொண்டிருக்கிறது.