Published:Updated:

வார்னர் வெளுத்தாலும், ஃபின்ச் பின்னியெடுத்தாலும்... அடில் எப்படி ஆட்டத்தை மாற்றினார்?! #EngVsAus

#EngVsAus
#EngVsAus

அகர் எப்படி அடிபட்டு பின் பட்லரின் விக்கெட்டை தூக்கினாரோ அப்படியே இங்கே அடில் ரஷித் அடிபட்ட பின்னர் ஒரே ஓவரில் மேக்ஸ்வெல்லையும் ஸ்மித்தையும் வெளியேற்றினார்.

புத்தியல்பு கிரிக்கெட்டின் மையமாக மாறியிருக்கிறது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்கள் முடிந்த கையோடு சூட்டோடு சூடாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளும் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸிக்கு எதிராக நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய, தங்கள் கையில் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்திடம் கோட்டைவிட்டிருக்கிறது ஆஸ்திரேலியா.

ஜேசன் ராய் இந்தத் தொடரிலிருந்து விலகிய நிலையில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு பட்லரும் பேர்ஸ்ட்டோவும் ஓப்பனர்களாக இறங்கினர். இந்த சீசன் முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் ஒருவித தயக்கத்தோடு சிரமப்பட்டு ஆடிவந்த பட்லர் தனக்கே உரிய களமான ஒயிட் பால் கிரிக்கெட்டின் இந்தப் போட்டியில் அவ்வளவு இலகுவாக ஆஸி பௌலர்களை எதிர்கொண்டார். ஸ்டார்க், அகர், கம்மின்ஸ் என பவர்ப்ளேயில் எல்லாருடைய ஓவர்களையுமே வெளுத்தெடுத்தார். மறுபக்கம் பேர்ஸ்ட்டோ வழக்கம்போல பேட்டை வீசாமல் கொஞ்சம் தடுமாறிக்கொண்டேதான் இருந்தார். 4 வது ஓவரில் பேர்ஸ்ட்டோவுக்கு கம்மின்ஸ் ஷார்ட் பிட்ச்சாக வீச எட்ஜ்ஜாகி தேர்டு மேன் ஃபீல்டரை ஏமாற்றி பவுண்டரியானது. அடுத்த பந்தில் மீண்டும் அதே மாதிரி மீண்டும் ஷார்ட் பிட்ச்சாக போட இந்த முறை தேர்டு மேனிடம் கேட்ச்சை கொடுத்து நடையை கட்டினார் பேர்ஸ்ட்டோ. மாலன் ஒன் டவுன் பேட்ஸ்மேன். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த பட்லர் பேர்ஸ்ட்டோவின் விக்கெட்டுக்குப் பிறகு கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.

யூசுப் யுஹானா என்கிற முகமது யூசுப்... இவன் அடித்து ஆடியது கிரிக்கெட் மட்டுமல்ல! அண்டர் ஆர்ம்ஸ் - 17

இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் அகரின் பந்துவீச்சில் 16 ரன்களை வெளுத்தெடுத்திருந்தார். மீண்டும் எட்டாவது ஓவரில் அகர் பந்துவீச வர இந்த ஓவரை டார்கெட் செய்ய முடிவெடுத்தார் பட்லர். அந்த ஓவரிலேயே அவர் 29 பந்தில் 44 ரன்னில் இருந்த நிலையில் சரியான லெந்த்தில் வழக்கத்தை விட ஸ்லோவாக ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை சிக்சராக்க முயன்று டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனார். இதன் பிறகு இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தன. டாம் பேன்டன், மார்கன், அலி என முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவருமே ஸ்பின்னுக்கு இரையாகினர்.

#EngVsAus
#EngVsAus

ஒரு ஓவரோடு முடித்திருக்க வேண்டிய மேக்ஸ்வெல், மார்கனையும், மொயின் அலியையும் வீழ்த்தி ஒரே ஸ்பெல்லில் மூன்று ஓவர்கள் வீசி 14 ரன் மட்டுமே கொடுத்தார். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மாலன் மட்டும் கொஞ்சம் நின்று நிதானமாக ஆடினார். கடைசியில் அதிரடி காட்ட வேண்டிய சூழ்நிலையில் ஸாம்பாவின் பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்துவிட்டு அடுத்த ஓவரில் ரிச்சர்ட்சனிடம் விக்கெட்டைக் கொடுத்தார். 43 பந்துகளில் மாலன் அடித்த 66 ரன்கள்தான் இங்கிலாந்து போட்டியளிக்கக்கூடிய 162 ரன்களை எடுக்க காரணமாயிருந்தது.

இங்கிலாந்து பேட்டிங் லைன் அப்பின் முழுத்திறனையும் வெளிப்படுத்தவிடாமல் ஆவரேஜான ஸ்கோரில் அவர்களை கட்டுப்படுத்தியது ஆஸிக்கு முதல் வெற்றி. ஆஸியின் ஓப்பனர்களாக வழக்கம்போல ஃபின்ச்சும் வார்னரும் களமிறங்கினர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எந்த ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு பம்மினார்களோ அதே ஷார்ட் பிட்ச் பந்துகளை இந்தக் கூட்டணி துவம்சம் செய்தது. ஆர்ச்சர், ரஷீத், ஜோர்டன் என எந்த பௌலர்களையும் விட்டு வைக்கவில்லை. அடில் ரஷீத் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களெல்லாம் போனது. ஒரு கட்டத்தில் இவர்களே ஆட்டத்தை ஒரு 15 ஓவர்களுக்குள் முடித்துவிடுவார்கள் என நினைத்த போதுதான் முதல் விக்கெட் விழுந்தது. ஆர்ச்சர் வீசிய 11-வது ஓவரில் மிட் ஆஃபை க்ளியர் செய்ய முடியாமல் கேட்ச்சாகி வெளியேறினார் ஃபின்ச். அப்போது அணியின் ஸ்கோர் 98-1.

#EngVsAus
#EngVsAus

இன்னும் 9 ஓவர்களில் 66 ரன் தேவை. ரொம்பவே சுலபமான டார்கெட். அதுவும் ஸ்மித், மேக்ஸ்வெல் என வெறித்தன பேட்டிங் லைன் அப்போடு இந்த டார்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால், இங்கேதான் இங்கிலாந்து அணி ஆட்டத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வரத்தொடங்கியது. அகர் எப்படி அடிபட்டு பின் பட்லரின் விக்கெட்டை தூக்கினாரோ அப்படியே இங்கே அடில் ரஷித் அடிபட்ட பின்னர் ஒரே ஓவரில் மேக்ஸ்வெல்லையும் ஸ்மித்தையும் வெளியேற்றினார். இதுதான் நேற்றைய ஆட்டத்தின் கேம் சேஞ்சிங் மொமன்ட்.

கடைசி 5 ஓவர்களில் 36 ரன்கள்தான் தேவைப்பட்டது. களத்தில் ஸ்டாய்னிஸ் இருந்தார். ஆனால், ஜோர்டன், டாம் கரன், ஆர்ச்சர், மார்க்வுட் என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சரியான லென்த்தில் வீச ஸ்டாய்னிஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 15 ரன்கள் தேவைப்பட்ட கடைசி ஓவரில் ஒரு சிக்சர் மட்டும் பெரிதாக அடித்தார், அவ்வளவுதான். இங்கிலாந்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#EngVsAus
#EngVsAus

ஒன் சைட் மேட்ச்சாக சென்றுவிடுமோ எனத் தோன்றிய இந்த ஆட்டம் சரியான சர்ப்ரைஸ் த்ரில்லராக முடிந்தது. இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா எப்போதுமே ஒரு வெறித்தன ரைவல்ரியாக இருக்கும். இந்த ஆட்டமும் அப்படியே இருந்தது. இன்னும் இரண்டு டி20 போட்டிகளும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் மிச்சம் இருக்கிறது. இதே ஸ்பிரிட்டோடு இரண்டு அணிகளும் விளையாடினால் நிச்சயம் அனல் தெறிக்கும்!

அடுத்த கட்டுரைக்கு