Published:Updated:

`அவர்களின் ஆதரவு என்னை கவர்ந்தது; அந்த ஒருவரைத் தவிர!’- நியூசிலாந்தில் நிறவெறியால் கலங்கிய ஆர்ச்சர்

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

'பே ஓவல்' மைதானத்திற்கு வந்த பார்வையாளர்களின் ஆதரவு என்னை வெகுவாகக் கவர்ந்தது, அந்த ஒருவரைத் தவிர.

சக மனிதனை நிறத்தால் பாகுபாடுசெய்யும் கொடுஞ்செயல் ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே இருந்துவருகிறது. பல்வேறு துறைகளில் இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடந்துவந்தாலும் விளையாட்டிலும் இவ்வகைப் பாகுபாடுகள் எட்டிப்பார்த்தன. ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் கால்பந்தாட்டத்தில், இரு அணிகளின் வீரர்களுக்கிடையே அல்லது ரசிகர்கள் வீரர்களின் மீது இத்தகைய பாகுபாடுகளைக் குறிக்கும் செயல்களைச் செய்து எதிரணி வீரரின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வர். இத்தகைய செயல்கள் கால்பந்தாட்டத்தில் இன்றும் அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும், தற்போது இது ஜென்டில்மேன் கேமான கிரிக்கெட்டில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 353 என்ற நல்ல ஸ்கோரை எட்டிய அந்த அணி, பெளலிங்கில் முழுமையாக சொதப்பியது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை 615 என்னும் இமாலய ரன் கணக்கை அடிக்கவிட்டனர். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்களும் சொதப்பினர்.

262 ரன்கள் பின்னிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன ஒரு கட்டத்தில், 138-8 என்ற பரிதாபநிலையில் தத்தளித்துவந்த அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தவிர்க்க, ஜோப்ரா ஆர்ச்சர் ஒன்பதாது விக்கெட் கூட்டணியில் சாம் கர்ரனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். எனினும் 30 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தபோது, இங்கிலாந்தின் ஸ்கோர் 197. இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசம் என்னும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து அணி.

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

இங்கிலாந்து அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடும் டெஸ்ட் போட்டியில், முதல் முறையாக விளையாடும் 24 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் போட்டி குறித்த ட்வீட் ஒன்றில், “இந்த வாரம் முழுவதும் போட்டியைக் காண 'பே ஓவல்' மைதானத்திற்கு வந்த பார்வையாளர்களின் ஆதரவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. கடைசி நாளில் அந்த ஒரு நபரை தவிர. அவர் என் இனத்தை அவமதிக்கும் வாசகங்களைத் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததால், எனது அணியைக் காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அவை என்னை வெகுவாக தொந்தரவுசெய்தன” என்று கூறினார் அவர்.

`மூன்றாவது நாளில் 47 நிமிடங்கள்; 968 பந்துகள்!' - கொல்கத்தாவில் வரிசைகட்டிய சாதனைகள் #INDvBAN

ஆர்ச்சரின் இந்த ட்வீட், கிரிக்கெட் வட்டாரங்களிடையே மிகுந்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இதுகுறித்துஅணியின் இயக்குநர் ஆஷ்லே கைல்ஸ், “வேகமாக வளர்ந்துவரும் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இது போன்றவை மிகுந்த கவனச்சிதறல்களை ஏற்படுத்தும். எனினும், எங்களது முழு ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு” என்றார் அவர். இந்நிகழ்வு குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளது. “ஜோப்ரா ஆர்ச்சருக்கு நடந்துள்ள இத்தகைய நிகழ்வு எங்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. எங்கள் நாட்டின் ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது துரதிருஷ்டமானது. இங்கிலாந்து வீரர்கள், என்றும் எங்களுக்கு விளையாட்டில் மட்டும் எதிரிகளே தவிர, இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அந்த ட்வீட்டில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்து வாரியத்தின் உதவியுடன் இச்செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிக்க மைதானத்தின் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வருகின்றன. அந்த நபர் பிடிபட்டால், வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் மைதானத்திற்கு வருவது தடை செய்யப்படும். கடந்த செப்டம்பர் மாத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில், மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிற இனப்பாகுபாடு தாக்குதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு