பெயர் : ஜேசன் ஜொனாதன் ராய்
பிறந்த தேதி: 21.07.1990
ஊர்: டர்பன் ,தென்ப்பிரிக்கா
ரோல்:பேட்ஸ்மேன்
பேட்டிங் ஸ்டைல்: வலது கை பேட்ஸ்மேன்
பௌலிங் ஸ்டைல்: வலது கை மீடியம் ஃபாஸ்ட்
அறிமுகம்: 07.11.2014
செல்லப்பெயர்: ராய், ஜேசி
பிளேயிங் ஸ்டைல்!

2015 உலகக் கோப்பையில் இருந்து இப்போது வரை அணியில் நிலையாக ஆடிக் கொண்டிருக்கும் ஒரே வீரர். பேர்ஸ்டோ உடனான இவரின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணியை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றது. ஃபாஸ்ட் பௌலிங், ஸ்பின் என்று கணக்கெல்லாம் அவருக்கு இல்லை. வருகிற பந்தை பவுண்டரி லைனிற்கு வெளியே அனுப்புவது மட்டும்தான் அவர் வேலை. இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக அவர் அடித்த சதமும், இன்று இந்தியாவுக்கு எதிராக அடித்த அரைசதமும் அதற்கு சான்று.
கண்ணை மூடிக் கொண்டு சுழற்றாமல் நின்று நிதானமாக வெளுத்து வாங்குவார். ஆனால், நிறைய போட்டிகளில் பந்தை தூக்கி அடிக்கும்போது எட்ஜாகி கீப்பரிடம் கொடுத்து விடுவார். அதை மட்டும் திருத்திக் கொள்ளும் பட்சத்தில் ராய் இங்கிலாந்தின் மிரட்டல்.
உள்ளூர் போட்டிகளில் எப்படி?!
தன் பத்தாவது வயதிலேயே சொந்த ஊரான தென்னாபிரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு வந்தார். அதன் பின் சர்ரே (surrey) அணியில் அண்டர் 11-ல் தொடங்கி அண்டர் 16 வரை ஆடினார். Second XI championship தொடரில் சிறப்பாக ஆடினார். பின் மிடில்செக்ஸ் அணிக்காக டி20 போட்டியில் தன் 17 வயதில் ஆடத்தொடங்கினார். 2008ல் தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் சப்ஸ்டிட்யூட் பீல்டராக இருந்தார். 2010ம் ஆண்டு அவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

Friends provident T20 தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட அதிக ரன்கள் குவித்தார். 2011-ல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்ட `இங்கிலாந்து பெர்ஃபாமன்ஸ் ப்ரோகிராம்’ அணியில் இவர் சேர்க்கப்பட்டார். பின்னர் பல்வேறு முதல் தர போட்டிகளுக்குப் பின் இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் செப்டம்பர் 2014 ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். இதுவரை 75 ஒருநாள் போட்டிகளிலும், 32 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
பெஸ்ட் இன்னிங்ஸ்!
180 vs Australia, 2018
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடரின் முதல் போட்டி. முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா. பிட்ச்சின் தன்மை தெரியாததால் இங்கிலாந்து பெளலர்கள் ஏகப்பட்ட பவுன்சர்கள் வீசினர். பின்ச், மார்ஷ், ஸ்டோய்னிஸ் என ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 304 ரன்கள் எடுத்தனர். முதல் போட்டியிலேயே 305 ரன்கள் இலக்கு. அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில். கொஞ்சம் கலக்கத்துடன் இருந்த இங்கிலாந்து அணியை தூக்கி நிறுத்தினார் ஜேசன் ராய்.
பேர்ஸ்டோ, ஹேல்ஸ் ஆட்டமிழந்தபோதிலும் பதறாமல் ஆடினார். 151 நிமிடங்கள் களத்தில் நின்று 151 பந்துகளில் 180 ரன்கள் அடித்தார். கிட்டத்தட்ட போட்டியின் பாதி ரன்களை ஒற்றை ஆளாக எடுத்தார். 16 பவுண்டரிகள், 5 சிக்சர்களோடு மேட்ச்சை முடித்து கொடுத்தார்.
பெரும்பாலும் அவரின் ஷாட்கள் லெக் சைடிலேயேதான் இருந்தது. பௌலர்கள் எத்தனை வேரியேஷன்கள் காட்டி மிரட்டினாலும் இவர் அசராமல் நின்று அணியை அபார வெற்றி பெற வைத்தார்.

123 vs West indies, 2019
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி எதிர்கொண்ட முதல் ஒருநாள் போட்டி. வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வென்று விடலாம் என்ற தப்புக்கணக்கில் பௌலிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு, அதிரடி ஷாக் கொடுத்தார் கிறிஸ் கெயில். இவரும் ஷாய் ஹோப்பும் வெளுத்து வாங்க, 50 ஓவர்களில் 360 ரன்கள். பவுலிங்கிற்கு சாதகமான பிட்ச் இங்கிலாந்திற்கு கிலியை ஏற்படுத்தியது.
ஆனால், இப்போட்டியிலும் மீண்டும் நங்கூரம் போல் இங்கிலாந்தின் இன்னிங்க்சை தூக்கி நிறுத்தினார் ஜேசன் ராய். இம்முறை ரூட்டும் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தர பெரிய இந்தக் கூட்டணி நாலாப்பக்கமும் வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சிதறடித்தது. 85 பந்துகளில் 123 ரன்கள் என நீட்டாக வந்து டீசன்ட்டாக வெஸ்ட்இண்டீசை சம்பவம் செய்தார் ராய்.
Trivia
Obstructing the field, ஃபீல்டரை ஃபீல்ட்டிங் செய்ய விடாமல் தடுத்ததற்காக, முதன்முறையாக டி20 போட்டியில் அவுட் கொடுக்கப்பட்ட வீரர் ஜேசன் ராய்.
பொழுதுபோக்கு விளையாட்டு : கோல்ஃப்.
களத்தில் இருக்கும் போது ஆக்ரோஷமாகவே இருப்பார் ராய். ஒருமுறை 2016 டி20 உலகக் கோப்பையில், இலங்கைக்கு எதிரான போட்டியின் முக்கிய கட்டத்தில் எல்.பி.டபுள்யூ கொடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்து பேட்டை ஆக்ரோஷமாக தூக்கி வீசினார். இதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
"டாப் ஆர்டரில் ராயின் பேட்டிங், மிகவும் சிறப்பானதாக உள்ளது. விதவிதமான ஷாட்கள் அடிக்க அவர் பயிற்சி எடுத்திருப்பதை அவரின் பேட்டிங் காட்டுகிறது. ராய், அவ்வப்போது ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்டை எனக்கு நினைவுபடுத்துகிறார்"இங்கிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் ராப் கீ