Published:Updated:

ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் போட்டி... புதிய ஃபார்மேட், புதிய விதிகள்! எப்படியிருக்கும் `The Hundred'?

The Hundred
The Hundred

தமிழ்ப் படத்தில் சிவா மரு வைத்து மாறுவேடம் போடுவது டி20 யின் விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்து 'The Hundred' விதிமுறைகளாக வெளியிட்டுள்ளனர்.

''மொபைலை கண்டுபிடிச்சது வெள்ளக்காரனா இருந்தாலும், மிஸ்டு கால் கொடுக்குறத கண்டுபிடிச்சவன் இந்தியாக்காரன்தான்'' என விளையாட்டாக சொல்வது போல டி20-யை கண்டுபிடித்தது வேண்டுமானால் இங்கிலாந்துக்காரர்களாக இருக்கலாம். ஆனால், அந்த டி20 மூலம் கல்லா கட்டியது இந்தியாதான்.

ஐபிஎல்-க்கு மேலான தரத்தோடும் வியாபாரத்தோடும் ஒரு ப்ரீமியர் லீக் தொடரை தங்கள் நாட்டில் நடத்திவிட வேண்டும் என்பதே பிற கிரிக்கெட் போர்டுகளின் லட்சியம். இங்கிலாந்துக்கும் அதேதான் லட்சியம் என்றாலும் அவர்களுக்கு இது கௌரவம் சார்ந்த விஷயமும் கூட. 'Home of Cricket' என மார்தட்டிக் கொள்ளும் இங்கிலாந்தும் மற்ற நாடுகளை போல ஐபிஎல் தொடரை அப்படியே ஜெராக்ஸ் போட்டால் கௌரவக் குறைச்சல் ஆகிவிடுமே! அதற்காகவே ஐந்து ஆண்டுகளாக ரூம் போட்டு யோசித்து 'The Hundred' என்கிற புது ஃபார்மேட்டோடு வந்து நிற்கிறது.

காலத்துக்கு ஏற்ப கிரிக்கெட் பல மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முதலில் டெஸ்ட் கிரிக்கெட், அடுத்து 60 ஓவர் ஓடிஐ, பிறகு அதே கொஞ்சம் உருமாறி 50 ஓவர் ஓடிஐ அதன்பிறகு, டி20 என மாறிவிட்ட கிரிக்கெட் இப்போது டி10 வரை சென்றுவிட்டது. இந்த டி20-க்கும் டி10-க்கும் இடையில் 'The Hundred' என ஒரு ஃபார்மேட்டை உருவாக்கியிருக்கிறது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட்.

The hundred
The hundred

2003-ல் இங்கிலாந்தின் கவுன்ட்டி அணிகளே முதன்முதலாக டி20 போட்டிகளில் ஆடின. எதிர்காலம் உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவாக இது பார்க்கப்பட்டாலும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த டி20 கிரிக்கெட் லீகில் கவனம் செலுத்தவில்லை.

இந்தச் சமயத்தில்தான் 2007 டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல, அதைத்தொடர்ந்து ஐபிஎல் என்ற பெயரில் கால்பந்து ப்ரீமியர் லீக் பாணியை கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரிபுதிரி ஹிட் ஆனது ஐபிஎல்.

ஒரு படம் ஹிட் ஆனால் அதே பாணியில் ஒரு டஜன் படங்களை எடுத்து போடும் கோலிவுட் டைரக்டர்களை போல, ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் போர்டும் ஐபிஎல்-ஐ பின்பற்றி ஒரு ப்ரீமியர் லீகை ஆரம்பித்தன.

ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா என அத்தனை நாடுகளும் தங்களுக்கென ஒரு ப்ரீமியர் லீகை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கிரிக்கெட்டின் பிறப்பிடமாக, டி20 போட்டியின் கர்த்தாவாக இருந்த இங்கிலாந்து மட்டும் தங்களுக்கென ஒரு ப்ரீமியர் லீகை தொடங்காமலேயே இருந்தது. பல சமயங்களில் இது குறித்த விவாதங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டில் எழுந்த போதும் ஏனோ அடுத்தக்கட்டத்திற்கு நகராமல் தடைபட்டுக் கொண்டே இருந்தது. 2016-ல் ப்ரீமியர் லீகுக்கான செயல்பாடுகள் வேகமெடுத்தது. ஐபிஎல் பாணியிலான தொடர் என்றே முதலில் திட்டமிடப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் வணிக பிரிவை சார்ந்த சஞ்சய் '100' என்கிற புது ஐடியாவோடு வந்தார். ஏற்கனவே உலகமெங்கும் இருக்கும் டி20 ப்ரீமியர் லீக் போட்டியை அப்படியே நாமும் நடத்தினால் அதில் என்ன விசேஷம் இருக்கும், நாம் எப்படி தனித்து தெரிய முடியும் என்ற கேள்விகளோடு குழம்பிக் கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் சஞ்சய் பட்டேலின் ஐடியாவுக்கு டிக் அடித்தது. கிரிக்கெட் உறுப்பினர்கள் சிலர் இந்த ஃபார்மேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் இதற்கு சம்மதம் தெரிவிக்க அடுத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

சாரா டெய்லர்
சாரா டெய்லர்
வெளிநாட்டு வீரர்கள் அத்தனை பேரையும் இறக்கி பிரம்மாண்டமாக 'The Hundred' முதல் சீசனை 2020-ல் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா வந்து நின்று நிலைத்து அட்டகாசமான இன்னிங்ஸ் ஆட, 2021க்கு தள்ளிப்போனது 'The Hundred'.

கொரோனாவுக்கு பிறகான இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியிருப்பதால், ஜுலை 21 அதாவது நாளை முதல் இந்த தொடர் தொடங்கவிருக்கிறது. ஆண்கள்,பெண்கள் என இரண்டு தொடரும் ஒரே நேரத்தில் நடக்கிறது. பெண்கள் போட்டிகள் இன்று முதல் தொடங்க, ஆண்கள் 100 போட்டிகள் நாளை தொடங்குகிறது.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் மொத்தம் 18 அணிகள் இருந்தாலும் இந்த தொடருக்கு எட்டு அணிகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. பர்மிங்காம் ஃபோனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ், ஓவல் இன்விசிபில்ஸ், சதர்ன் ப்ரேவ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ், வெல்ஸ் ஃபயர் என அந்த அணிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் இங்கிலாந்தின் தற்போதைய நட்சத்திர வீரர் ஒருவர் முக்கியமாக இடம்பிடித்திருக்கிறார்.

SLvIND: சஹாருக்குக் கைகொடுத்த சிஎஸ்கே அனுபவம்... பந்தயம் விடாமல் சாதித்த இந்திய இளம் படை!

பெண்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படுவது இந்தத் தொடரின் சிறப்பம்சமாக இருக்கிறது.

எட்டு ஆண்கள் அணிக்கு நிகராக எட்டு பெண்கள் அணிகளும் இருக்கின்றனர். ஓவல் ஆண்கள் அணி ஆடுகிற அதே நாளில் ஓவல் பெண்கள் அணியும் போட்டியில் ஆடும். மேலும், 'பேட்ஸ்மேன்' என்கிற ஆண்மயப்பட்ட பதத்திற்கு பதிலாக 'பேட்டர்' என்கிற பதமே இங்கே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மித்தி மந்தனா, ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா போன்ற இந்திய வீராங்கனைகளும் இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கின்றனர்.
லண்டன் ஸ்பிரிட் சார்பில் இயான் மோர்கன்
லண்டன் ஸ்பிரிட் சார்பில் இயான் மோர்கன்
TheHundred.com

14 சீசன்களாக ஆண்களுக்கு தொடரை நடத்திவிட்டு, பெண்களுக்கு ஒரு முழு சீசனை கூட நடத்த மனமில்லாமல் இருக்கும் போர்டுகளுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

விதிமுறைகளிலும் இந்த ஃபார்மட்டுக்கேற்ப சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு அணிகளும் தலா 100 பந்துகளை ஆடப்போகின்றன.

ஓவருக்கு 6 பந்துகள் என்கிற கணக்கு இங்கே கிடையாது. அதற்கு பதில் 'Five' என்றழைக்கப்படும். அதாவது, ஓவருக்கு 5 பந்துகள். ஒரு பௌலர் 5 பந்துகளை வீசி முடித்த பிறகு நடுவர் ஒரு வெள்ளை கார்டை எடுத்து காண்பிப்பார். கேப்டன் விருப்பப்பட்டால் அதே பௌலர் தொடர்ச்சியாக மேலும் 5 பந்துகளை வீசிக்கொள்ளலாம். ஒரு பௌலர் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 20 பந்துகளை மட்டுமே வீச முடியும்.

பேட்டிங் ஆடும் அணிக்கு முதல் 25 பந்துகள் பவர்ப்ளே. அந்த சமயத்தில் வட்டத்திற்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க முடியும். இது வழக்கமான விஷயமே.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டி ஒரு அணி பந்துவீசுகிறதென்றால், அந்த எக்ஸ்ட்ரா நேரத்தில் அவுட் ஃபீல்டில் இருக்கும் ஒரு ஃபீல்டரை 30 யார்டு வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும்.

போட்டி டை ஆகும்பட்சத்தில் சூப்பர் 5 கடைப்பிடிக்கப்படும்.

தமிழ்ப் படத்தில் சிவா மரு வைத்து மாறுவேடம் போடுவது டி20 யின் விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்து 'The Hundred' விதிமுறைகளாக வெளியிட்டுள்ளனர்.

TNPL: 40 வயதிலும் சூப்பர் பர்ஃபாமென்ஸ் காட்டிய சதீஷ்… மழையில் நனையும் சேப்பாக்கம்!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் முதலில் திட்டமிட்டதை போல பிரமாண்டமாக இந்த சீசனை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் குவாரன்டைன் விதிமுறைகளால் மொத்தமாக பின்வாங்கிவிட பொல்லார்ட், ரஸல், பிராவோ போன்ற டி20 சூப்பர் ஸ்டார்களும் இந்த சீசனிலிருந்து விலகியிருக்கின்றனர். இங்கிலாந்து வீரர்களும் தொடர்ச்சியாக சர்வதேச தொடரில் ஆடிக்கொண்டிருப்பதால் ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஸ்டோக்ஸ், பட்லர், ரூட், பேர்ஸ்ட்டோ போன்ற நட்சத்திர வீரர்கள் ஆட முடியும் என்கிற சூழலே நிலவுகிறது.

The Hundred
The Hundred
TheHundred.com

இந்த தொடர் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் மொத்தமும் கவுன்ட்டி போட்டிகளையும் பெண்கள் கிரிக்கெட்டையும் மேம்படுத்த பயன்படுத்தப்படும் என கூறுகிறது இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட்.

5 ஓவர் 50 ஓவர் 5 நாட்கள் எந்த வடிவத்தில் கிரிக்கெட் ஆடினாலும் கிரிக்கெட் கிரிக்கெட்தான் என விளக்கமெல்லாம் கொடுக்கப்பட்டாலும், இந்த மாதிரியான வணிக நோக்கிலான புதிய ஃபார்மேட்கள் கிரிக்கெட்டின் ஆன்மாவை குலைத்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பம்.

இந்த 'The Hundred' கிரிக்கெட் உலகில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு