Published:Updated:

ENG vs NZ: 3-0 என வரலாறு படைத்த இங்கிலாந்து; இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

ENG vs NZ

மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து எடுத்த ரன்களைக் கிட்டத்தட்ட அவர்கள் சந்தித்த ஓவர்களில் சரிபாதி ஓவர்களுக்குள்ளேயே இங்கிலாந்து எட்டியிருக்கிறது. டி20 என்டர்டெயின்மென்டை டெஸ்டுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறது இங்கிலாந்து.

ENG vs NZ: 3-0 என வரலாறு படைத்த இங்கிலாந்து; இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து எடுத்த ரன்களைக் கிட்டத்தட்ட அவர்கள் சந்தித்த ஓவர்களில் சரிபாதி ஓவர்களுக்குள்ளேயே இங்கிலாந்து எட்டியிருக்கிறது. டி20 என்டர்டெயின்மென்டை டெஸ்டுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறது இங்கிலாந்து.

Published:Updated:
ENG vs NZ
ரிங்கில், தனது ரெட் பால் ரீ எண்ட்ரியில் நடப்பு சாம்பியனையே 3-0 என பன்ச் செய்து ஆரவாரமாகத் தொடங்கியுள்ளது இங்கிலாந்து.

கடைசி 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இறுதி இடம் - இத்தொடரின் தொடக்கத்துக்கு முன் இப்படியொரு பரிதாப நிலையில்தான் இங்கிலாந்து இருந்தது. ஆனால், இறுதியிலோ யாருமே எதிர்பார்க்காத வகையில் நடப்பு உலக சாம்பியனையே அடித்து வீழ்த்தி லார்ட்ஸ், டிரெண்ட் ப்ரிட்ஜ், ஹெட்டிங்லே என அனைத்தையும் கைப்பற்றி 3-0 எனத் தொடரையும் வென்றிருக்கிறது.

இந்த வெற்றிக் கணக்கைவிட 277, 299, 296 என்ற பெரிய இலக்கங்களை மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து சேஸ் செய்திருப்பதுதான் இத்தொடரின் ஹைலைட்டே! அதிலும் 3.55, 5.98, 5.46 - இவைதான் அந்த இலக்கை அடைய இங்கிலாந்து எடுத்துக் கொண்ட பிரமிப்பூட்டும் ரன்ரேட் விவரங்கள்.

எந்த நோக்கோடு கேப்டன்ஷிப் ஸ்டோக்ஸ் கையிலும், பயிற்சியாளர் பதவி மெக்கல்லம் கையிலும் கொடுக்கப்பட்டதோ, அட்டாக்கிங் கிரிக்கெட்டுக்கான அர்த்தத்தைச் சொல்லி 100 சதவிகிதம் அதனை நிறைவேற்றி இருக்கிறது இக்கூட்டணி.

ENG vs NZ
ENG vs NZ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்து செய்யும் மேஜிக் என்ன? மூன்றாவது போட்டியிலும், எங்கே சரிந்தது நியூசிலாந்து, இத்தொடரில் இருந்து எடுத்துச் செல்ல நேர்மறையான விஷயங்களே அவர்களுக்கு இல்லையா?!

நியூசிலாந்துக்கும் ஒரு நல்லது நடந்திருக்கிறது. நம்பத்தகுந்த நாயகனாக மிட்செல் இத்தொடரில் உருவெடுத்திருக்கிறார். முதல் இரு போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் அணியை மீட்டெடுக்க அவரது பேட்தான் வெகுவாகப் போராடியது. முதல் இன்னிங்ஸில் ஒரு சதம், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எனக் கடைசிப் போட்டியிலும் அவரது டிரேட் மார்க்கைப் பதிய வைத்தார். அணியில் தனக்கான இடத்தை ஆண்டாண்டுக்கு ஆக்கிரமிக்கப் போவதனையே அவரது ஆட்டம் வெளிப்படுத்தியது. இத்தொடரில் 538 ரன்களை ஒட்டுமொத்தமாக மிட்செல் அடித்திருக்கிறார். அதில் மூன்று சதங்களும், இரண்டு அரை சதங்களும் அடக்கம். நியூசிலாந்து வீரர் ஒருவர், இங்கிலாந்து மண்ணில் ஒரே தொடரில் 400 ரன்களுக்கும் அதிகமாகக் கடப்பது இதுவே முதல்முறை என்பதுதான் கூடுதல் சிறப்பு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக, ப்ளெண்டெலுடனான மிட்செல்லின் கூட்டணி ஒவ்வொரு போட்டியிலுமே அணியைத் தாங்கிப் பிடித்தது. இத்தொடரில், நியூசிலாந்து எடுத்த ரன்களில் 48 சதவிகிதம் ரன்கள் இந்த இரட்டையர்களால் அடிக்கப்பட்டதே. ஒட்டுமொத்த அணியும் சொதப்பிய தருணங்களில் கூட, ஆறு இன்னிங்ஸ்களில் நான்கு முறை 100+ பார்ட்னர்ஷிப்பை இவர்கள் கட்டமைத்திருந்தனர். ஒரே தொடரில் இது நடந்தேறுவது டெஸ்ட் வரலாற்றிலேயே இது ஐந்தாவது முறை மட்டுமே.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விநோதமான முறையில் நிக்கோல்ஸ் ஆட்டமிழந்திருந்தார். அவர் தவிர மற்ற வீரர்கள் ஓரளவு பங்களித்திருப்பினும் 329 ரன்களை முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து எட்டவும் மிட்செல் - ப்ளெண்டலின் சதம் மற்றும் அரைசதமே காரணம். டெய்லர் - வாட்லிங்கின் இடத்தை இவர்கள் சற்றே நிரப்புவது போலத்தான் இருந்தது.
பேர்ஸ்டோ - ஓவர்டன் | ENG vs NZ
பேர்ஸ்டோ - ஓவர்டன் | ENG vs NZ

பின்னதாக இங்கிலாந்து ஆடிய முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்துக்கு போல்ட் கொடுத்த கிக் ஸ்டார்ட், மிகவும் குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கருணை காட்டாத அந்தப் பிட்சில்கூட இங்கிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மென்களை அவர் ஆட்டமிழக்க வைத்த விதம் பிரமாதம். மூன்று பேட்ஸ்மேன்களையுமே செட் செய்து தூக்கியிருந்தார். அலெக்ஸ் லீஸின் ஆஃப் ஸ்டம்பைப் பறக்கவிட்ட பந்தாகட்டும், போப்பைக் காலி செய்த அந்த இன்ஸ்விங்கர் ஆகட்டும், க்ராவ்லியின் மிடில் ஸ்டம்பைக் குறிவைத்துத் தகர்த்த அந்த Wobble பந்தாகட்டும், ஒவ்வொன்றுமே அவர் ஏன் நியூசிலாந்தின் ஆபத்தான ஆயுதம் என்பதற்கு நொறுங்கிய ஸ்டம்புகளே சாட்சியம் தந்தன. அங்கிருந்து 55/6 வரை நியூசிலாந்துக்கு எல்லாமே சரியாகவே நடந்தது.

ஆனால், பேர்ஸ்டோ மற்றும் அறிமுக வீரரான ஓவர்டன்னுக்கு இடையேயான கூட்டணிதான் மறுபடியும் இங்கிலாந்தைக் கிளர்ந்தெழ வைத்துவிட்டது. அந்த 241 ரன்கள் பார்ட்னர்ஷிப், அதுவும் கிட்டத்தட்ட 44 ஓவர்களிலேயே வந்து சேர்ந்தது. இந்த இடத்தில்தான் நியூசிலாந்திடமிருந்த வெற்றி வாய்ப்பு சத்தமில்லாமல் கைமாறியது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீதமிருந்த விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தால், முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையோடு அவர்களுக்குச் சாதகமான திசையில் போட்டியை நகர்த்தியும் இருக்கலாம். 31 ரன்கள் லீட் எடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை முடித்திருக்காது.

பிரச்னை, நியூசிலாந்து பௌலர்களிடம்தான் இருந்தது. மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் என்ற அவர்களது ஃபார்முலா கை கொடுக்கவில்லை. பிரதான ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டிய அவசியத்தை போட்டியின் ஒவ்வொரு அங்குலமும் நிருபித்தது. முதல் இன்னிங்ஸில் 38.3 ஓவர்கள் லீச்சை, ஸ்டோக்ஸ் பந்துவீச வைத்திருந்தார். ஹெட்டிங்லே வரலாற்றிலேயே ஸ்பின்னர் ஒருவர், முதல் இன்னிங்ஸில் 38-க்கும் அதிகமான ஓவர்களை வீசியிருப்பது இது இரண்டாவது முறை மட்டுமே. அதற்குப் பலனாக, ஐந்து விக்கெட்டுகள் லீச் சார்பில் இங்கிலாந்துக்குக் கிடைத்தன.

ஸ்டோக்ஸால் கணிக்க முடிந்த களத்தை வில்லியம்சன் அண்ட் கோ அனுமானிக்கத் தவறியதுதான் அவர்களது வீழ்ச்சிக்கு வித்திட்டது. பேர்ஸ்டோ - ஓவர்டன்னுக்கு எதிராக என்ன செய்வதென்ற வியூகத்தையே வகுக்க முடியாமல் சரண்டர் ஆனது நியூசிலாந்து. பேர்ஸ்டோவோ, ப்ரேஸ்வெல்லைப் பார்த்தாலே அடிப்பேன் என்ற ரீதியில் ஆடிக் கொண்டிருந்தார். குறிப்பாக, ஓவர்டன்னுக்கு எதிராக டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தத் தவறிய இடத்தில்தான் அவர்களுக்கான எண்ட் கார்டும் இறுதியாகப் போடப்பட்டது. ஒரு போட்டியில் எதிரணியை வீழ்த்த 20 விக்கெட்டுகள் தேவை. மூன்று போட்டியிலுமே அதனை அதிரடியாகச் செய்துதான் இங்கிலாந்து வென்றது. பௌலர்களுக்கு அதற்கான திறனில்லாததால்தான் நியூசிலாந்து தோற்றது.

லீச் | ENG vs NZ
லீச் | ENG vs NZ
ஃப்ளாட் டிராக், ரன் பசியோடு பேட்டைத் துப்பாக்கியாக்கி பந்துகளை பவுண்டரி லைனுக்கு நான்கு அல்லது ஆறு துண்டுகளாகப் பறக்க விடக் காத்திருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அவர்கள் அடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த நியூசிலாந்து பௌலர்கள் என ஒரு பக்கமாகவே போட்டியை மாற்றி விட்டனர். திருப்பித் தாக்கியது போல்டின் மேஜிக் ஸ்பெல் மட்டுமே.

இரண்டாவது இன்னிங்ஸில் லாதம் சிறப்பாக ஆடினார்தான். வில்லியம்சன் கூட ஓவர்சீஸ் போட்டிகளில் குறிப்பாக இங்கிலாந்தில் ஜொலிக்க மாட்டார் என்ற கூற்றை மீறி அரை சதத்தை நெருங்கி இருந்தார்தான். மிட்செல் - ப்ளெண்டல் இருவரணிகூட மறுபடி மீட்புக்கு வந்ததுதான். ஆனாலும், லீச்சின் சுழல் வீச்சை நியூசிலாந்தால் பெரிதாகச் சமாளிக்க முடியாமல் போனது. போதாக்குறைக்கு மேத்யூ பாட்ஸும் மிரட்டினார். வில்லியம்சனின் விக்கெட்டை இத்தொடரில் மூன்று முறை பாட்ஸ் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் எதிர்காலத் திட்டத்தில் கண்டிப்பாக அவரும் இருப்பார்.

அதே போல், முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இன்னுமொரு ஐந்து விக்கெட் ஹாலினை லீச் பதிவு செய்தார். ஜிம் லேக்கருக்கு அடுத்தபடியாக ஹெட்டிங்லேயில் ஐந்து விக்கெட் ஹாலினை நிறைவு செய்த இங்கிலாந்து ஸ்பின்னரும் அவர்தான். 1974-க்குப் பின், ஒரே டெஸ்டில் இரண்டு ஐந்து விக்கெட் ஹாலினைப் பதிவேற்றிய இங்கிலாந்து ஸ்பின்னரும் அவர்தான். அவரது பத்து விக்கெட்டுகள்தான் இங்கிலாந்துக்கான இலக்கை இன்னமும் எளிதாக்கியது.

உண்மையில், அந்த வார்த்தைகள்கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மைதான். இதைவிட அதிகமான இலக்காக இருந்தாலும் அடிக்கும் மனநிலையில் உள்ள இங்கிலாந்துக்கு, 296 என்பதெல்லாம் சவால் விடத்தக்கதல்ல. ரூட்டின் ரிவர்ஸ் ஸ்வீப்பால் பறந்த வேக்னரின் பந்தும், பேர்ஸ்டோவின் அதிவேக அரை சதமும், ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியும் அதையே பறைசாற்றின.

பேர்ஸ்டோ | ENG vs NZ
பேர்ஸ்டோ | ENG vs NZ
மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து எடுத்த ரன்களை கிட்டத்தட்ட அவர்கள் சந்தித்த ஓவர்களில் சரிபாதி ஓவர்களுக்குள்ளேயே இங்கிலாந்து எட்டியிருக்கிறது. டி20 என்டர்டெயின்மென்டை டெஸ்டுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறது இங்கிலாந்து.

அவர்களது புதிய அத்தியாயம் பிரமிக்க வைக்கிறதுதான் என்றாலும், இதில் இன்னொரு பார்வையும் விரிகிறது. "ஆபத்தை நோக்கியே பயணிப்போம்" என்பதுதான் ஸ்டோக்ஸின் அணுகுமுறை என்றும், அது தனது வேலையைச் சுலபமாக்குகிறது என்றும் மெக்கல்லம் கூறியிருந்தார். இந்தத் தொடருக்கு இந்தப் பாணி சரி, ஆனால் எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் இதுவே சாத்தியமா?

அதே போல் புல்தரை பிட்சுகளையும், ஸ்விங்கையும் மகிழ்ந்துலாவச் செய்து இங்கிலாந்து வெல்வதையே இதுவரை பார்த்த கண்களுக்கு ஃப்ளாட் டிராக்கின் பக்கம் அவர்கள் திரும்பி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் இதுதான் தொடரப் போகிறதா, அல்லது பழையபடி க்ரீன் டாப் பிட்சுகள்தான் அவர்களது அபிமானத்துக்குரியவை என்றால் இந்த அட்டாக்கிங் ஆட்டம் அவர்களுக்கு அங்கேயும் கை கொடுக்குமா?! இந்தக் கேள்விகளுக்கான விடை, இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் கிடைக்கலாம்.

நியூசிலாந்துக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற சமயத்தில், ஒருமுறை, கேரி ஸ்டெட், "வெல்லவோ, போராடித் தோற்கவோதான் கற்றுக் கொள்ள வேண்டும், டிரா தேவையில்லை" என்றார். இதே வார்த்தைகளை ஒட்டிய கருத்தைத்தான் கோலி தன்னிடம் கூறியதாக ஹர்பஜன் ஒருமுறை கூறியிருந்தார்.

ENG vs NZ | இங்கிலாந்து டீம்
ENG vs NZ | இங்கிலாந்து டீம்
இதே மனநிலையோடு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடினால் மட்டுமே வரவிருக்கும் போட்டியில் வெல்ல முடியும். அப்படியில்லையெனில், இங்கிலாந்தின் கொழுந்து விட்டு எரியும் அக்ரஷன், இந்தியாவின் ஆட்டத்தை ஊதி அணைத்து விடும்.

தீயின் நாக்குக்கு தீதானே சரிசமமாகச் சவால் விட முடியும்?!