Published:Updated:

Ashes: கம்மின்ஸ் எடுத்த ரிஸ்க்... மீட்சிக்கான அறிகுறியே இல்லாமல் சொதப்பும் இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா
News
ஆஸ்திரேலியா ( ICC )

கவுன்ட்டி கிரிக்கெட்டில் அத்தனை வலுவாக இருக்கும் ஒரு நாடு டெஸ்ட் போட்டிகளில் இப்படி வம்படியாகச் சொதப்புவது வருத்தமளிக்கக்கூடிய விஷயமே!

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவான இன்று மெல்பர்னில் தொடங்கியிருக்கிறது. முதல் நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கிறது.

வழக்கம்போல சொதப்பலான ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 61-1 என்ற நிலையில் இருக்கிறது.

பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பதால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு அவரே கேப்டனாக செயல்பட்டார். ஜை ரிச்சர்ட்சனும் நீசரும் பென்ச்சில் வைக்கப்பட்டிருந்தனர். அறிமுக வீரரான ஸ்காட் போலந்துக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் அதிகமாகவே மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஓப்பனிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த ரோரி பர்ன்ஸுக்குப் பதிலாக சக் க்ராலி ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். 150+ கி.மீ வேகத்தில் வீசும் மார்க் வுட்டும் ஸ்பின்னரும் இல்லாதது கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்திருந்தது. இந்தப் போட்டியில் க்றிஸ் வோக்ஸையும் ஸ்டூவர்ட் ப்ராடையும் பென்ச்சில் வைத்துவிட்டு மார்க் வுட்டையும் ஜேக் லீச்சையும் ஜோ ரூட் அணியில் சேர்த்திருந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பேட் கம்மின்ஸ்
பேட் கம்மின்ஸ்
ICC

இங்கிலாந்து சார்பில் ஓப்பனர்களாக ஹசீப் ஹமீதும் சக் க்ராலியும் இறங்கியிருந்தார்கள். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க்கும் பேட் கம்மின்ஸும் முதல் ஸ்பெல்லை வீசியிருந்தனர். ஸ்டார்க் முதல் பந்தையே நோ பாலாக வீசி ஆரம்பித்தார். தொடர்ந்து ஓவர் தி விக்கெட்டில் வந்து வலது கை பேட்ஸ்மேன்களான ஹசீப், க்ராலி இருவருக்குமே பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு குட் லெந்த்தில் வீசிக்கொண்டிருந்தார். இன்னொரு முனையில் பேட் கம்மின்ஸ் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஸ்டம்ப் டு ஸ்டம்பாக கொஞ்சம் ஃபுல் லெந்திலேயே வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக முதல் ஸ்பெல் முழுவதுமே ஸ்டார்க் - கம்மின்ஸ் கூட்டணி இந்த பேட்டர்னிலேயே வீசிக்கொண்டிருந்தது. ஃபுல் லெந்தில் வீசியதால் கம்மின்ஸின் பந்தில் கொஞ்சம் ரன்கள் சென்றது. ஆனாலும், கம்மின்ஸ் தொடர்ச்சியாக அந்த லெந்திலேயே வீசிக்கொண்டிருந்தார். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சிற்கும் இங்கிலாந்தின் பந்துவீச்சிற்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இது. இங்கிலாந்து பௌலர்கள் விக்கெட் வரவில்லை என்ற போதும் தொடர்ந்து அதிகமாக ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் குட் லெந்த் டெலிவரிக்களையுமே வீசிக்கொண்டிருந்தனர். ஃபுல் லெந்த்தில் வீசி ரிஸ்க் எடுக்க அவர்கள் முயலவே இல்லை. ஆனால், ஆஸ்திரேலியா அதை தொடக்கத்தில் இருந்தே சரியாக செய்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்றைக்கு பேட் கம்மின்ஸும் அதைத்தான் செய்தார். கம்மின்ஸ் மொத்தமாக 15 ஓவர்களை வீசி 36 ரன்களை கொடுத்திருந்தார். இந்த 15 ஓவர்களில் 10 ஓவர்களை முதல் செஷனிலேயே வீசியிருந்தார். அந்த 10 ஓவர்களில் மட்டும் 27 ரன்களை கொடுத்திருந்தார். முதல் செஷனுக்குப் பிறகு வீசிய 5 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். முதல் செஷனில் கொஞ்சம் அதிகமாக ரன்கள் சென்றதற்குக் காரணம் அவர் வீசிய ஃபுல் லெந்த். கம்மின்ஸின் ஓவரில் இங்கிலாந்து சீராக ஸ்கோர் செய்தாலும் அதை மனதில் வைத்து லெந்த்தை மாற்றாமல் தொடர்ச்சியாக ஃபுல் லெந்திலேயே வீசிக்கொண்டிருந்தார். அதற்கான பலனையும் அறுவடை செய்தார்.

முதல் செஷனில் மட்டும் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸே வீழ்த்தியிருந்தார்.
சக் க்ராலி
சக் க்ராலி
ICC

வழக்கம்போல ஓப்பனர்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஹசீப் ஹமீது ரன்னே எடுக்காமலும் க்ராலி 12 ரன்களிலும் கம்மின்ஸின் பந்தில் பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்தனர். அலஸ்டயர் குக்கிற்குப் பிறகு ஒரு சரியான ஓப்பனர் கிடைக்காமல் இங்கிலாந்து கடுமையாகத் திணறி வருகிறது. ஆஸ்திரேலிய பௌலர்களின் முதல் ஸ்பெல்லை தாண்டுவதற்கு கூட தடுமாறும் அளவிலேயே இங்கிலாந்தின் ஓப்பனிங் கூட்டணி அமைந்திருக்கிறது.

ஓப்பனர்கள் வெளியேறிய பிறகு, வழக்கம்போல மலானும் ஜோ ரூட்டும் மீட்பு பணியில் இறங்கினர். டேவிட் மலான் நிலைமையை உணர்ந்து அவசரப்படாமல் பந்துகளை லீவ் செய்து நிதானமாகவே ஆடினார். கேப்டன் ஜோ ரூட் கொஞ்சம் ரன்கள் சேர்க்க முற்பட்டு பேட்டை விட்டு ஆடிக்கொண்டிருந்தார். இந்தக் கூட்டணி இங்கிலாந்தை ஓரளவுக்குக் கரை சேர்த்துவிடும் என நினைக்கையிலேயே முதல் செஷனின் கடைசி ஓவரில் கம்மின்ஸ் பந்தில் மலான் ஸ்லிப்பில் நின்ற டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆகியிருந்தார். 66 பந்துகளில் 14 ரன்களில் மலான் அவுட் ஆகியிருந்தார். இரண்டாவது செஷன் தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட் அரைசதத்தைக் கடந்தார். ஆனால், நீண்ட நேரம் நிலைக்காமல் ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் வந்து 6 வது ஸ்டம்ப் லைனில் வெளியே எடுத்த பந்துக்கு பேட்டை விட்டு கீப்பரான அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார். ரூட் 82 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூட் அவுட்டான விதம் மோசமாகவே இருந்தது. எளிதில் லீவ் செய்து தவிர்க்க வேண்டிய பந்திற்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகியிருந்தார். இந்தத் தொடரில் பந்தை லீவ் செய்வதில் ரூட் கொஞ்சம் சுணக்கமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா சார்பில் மிகச்சிறப்பாக ஆடி வரும் லபுஷேன் இந்தத் தொடரில் இதுவரை ஆடியிருக்கும் பந்துகளில் 48% பந்துகளை லீவ் செய்திருக்கிறார்.

ஆனால், ரூட்டை பொறுத்தவரைக்கும் வெறும் 16% பந்துகளை மட்டுமே லீவ் செய்திருக்கிறார். இன்றைய ஆட்டத்திலும் ரூட் எதிர்கொண்ட முதல் 50 பந்துகளில் வெறும் 2 பந்துகளை மட்டுமே லீவ் செய்திருந்தார்.
Joe Root
Joe Root
ICC

எல்லா பந்துகளையும் குறிப்பாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கும் பேட்டை விட்டு டிஃபன்ஸ் அல்லது ஷாட் ஆட நினைப்பதே ரூட்டுக்கு பிரச்னையாக அமைந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியின் போது நான்காவதாக ஒரு ஸ்டம்பை நட்டு வைத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்காக பிரத்யேக பயிற்சியையும் ரூட் எடுத்திருந்தார். ஆனால், மீண்டும் ஒரு முறை சொதப்பலான முறையில் பேட்டை விட்டு அவுட் ஆகியிருக்கிறார். அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதல்.

ஜோ ரூட், டேவிட் மலான் இருவரும் அவுட்டான உடனேயே இங்கிலாந்து வழக்கமான தள்ளாட்டத்தைத் தொடங்கிவிட்டது. ஸ்டோக்ஸும் பேர்ஸ்ட்டோவும் மட்டும் கொஞ்ச நேரம் நின்றார்கள். ஆனால், அணியை மீட்டெடுப்பதற்கு அதெல்லாம் போதுமானதாக இல்லை. க்றிஸ் க்ரீன் வீசிய பந்தில் ஜோ ரூட்டை போலவே பேட்டை விட்டு ஸ்டோக்ஸ் பாயிண்ட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடந்த போட்டியில் கடைசி நாளில் இரண்டு செஷனுக்கு நின்று ஆஸ்திரேலியாவிற்குப் பயம் காட்டிய பட்லர் இந்த இன்னிங்ஸில் வெறும் 11 பந்துகளில் லயனின் பந்துவீச்சில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பேர்ஸ்ட்டோவும் 35 ரன்களில் ஸ்டார்க்கின் பந்தில் அவுட் ஆக, டெயில் எண்டர்கள் பெரிதாக சிரமம் கொடுக்கவில்லை. ராபின்சன் மட்டும் சில பவுண்டரிகளோடு 22 ரன்களை அடித்திருந்தார். இங்கிலாந்து அணி 65.1 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் கில்லியாக இருந்த இங்கிலாந்து அணி இப்போது ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களை கடப்பதற்கே திக்குமுக்காடுகிறது.

இந்த ஆண்டில் இங்கிலாந்து இதுவரை ஆடியிருக்கும் 28 இன்னிங்ஸ்களில் 13 இன்னிங்ஸ்களில் 200 க்கும் குறைவான ரன்களையே எடுத்திருக்கிறது. இன்றைக்கு ஹசீப் ஹமீத் விக்கெட்டோடு சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 50 முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகியிருக்கின்றனர்.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் அத்தனை வலுவாக இருக்கும் ஒரு நாடு டெஸ்ட் போட்டிகளில் இப்படி வம்படியாகச் சொதப்புவது வருத்தமளிக்கக்கூடிய விஷயமே.

இங்கிலாந்து
இங்கிலாந்து
ICC

மூன்றாம் செஷனின் பாதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸும் டேவிட் வார்னரும் ஓப்பனர்களாக இறங்கினர். இங்கிலாந்தின் ஓப்பனர்களை போன்றே இங்கே ஆஸ்திரேலியாவிற்கு மார்கஸ் ஹாரிஸ் கடுமையாகச் சொதப்பிக் கொண்டிருந்தார். ஆனால், இன்றைய நாளில் அவர் விக்கெட்டை விடாமல் நாட் அவுட்டாக பெவிலியனுக்குச் சென்றது ஆச்சர்யமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 61 ரன்களை சேர்த்திருந்தது. டேவிட் வார்னர் துறுதுறுவென ரன்கள் சேர்த்து 42 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக இன்றைய நாளின் கடைசிக்கு முந்தைய ஓவரில் ஆண்டர்சனின் பந்தில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆஸ்திரேலியா 61-1 என்ற நிலையோடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் இரண்டு போட்டிகளை போன்றே இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸிலேயே பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்தை மொத்தமாக அடக்கி ஆளவே ஆஸ்திரேலியா விரும்பும். ஆஸ்திரேலியாவின் எண்ணம் நிறைவேறினால் இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து மீண்டு வருவெதெல்லாம் தற்போதைய நிலையில் அசாத்தியமான காரியமே!

இங்கிலாந்து இந்த முதல் இன்னிங்ஸிலேயே மிரட்டலாக பந்துவீசி ஆஸ்திரேலியாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தினால்தான் இந்தப் போட்டியையும் காப்பாற்ற முடியும். இந்தத் தொடரிலும் நிலைக்க முடியும். என்ன செய்யப்போகிறார்கள்?