அஹமதாபாத் டெஸ்ட்: சுழலால் அசத்திய அக்ஸர், அஷ்வின்... 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து!

வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என கோலி நினைத்தது அப்படியே தலைகீழாக மாறிப்போனது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அஹமதாபாத்தில் பகலிரவுப் போட்டியாக பிற்பகலில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
"நான் டாஸை ஜெயித்திருந்தால் பேட்டிங்கைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். இது முதலில் பேட்டிங் ஆடவேண்டிய பிட்ச். இருந்தாலும் இதுவேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அதனால் வேகப்பந்து வீச்சாளர்களைக்கொண்டு இங்கிலாந்து அணியை சமாளிக்க இருக்கிறேன்" என்று டாஸின்போது சென்னார் இந்திய கேப்டன் விராட் கோலி.
ஜோ ரூட், கோலி என இரண்டு கேப்டன்களின் கணிப்புமே தவறானது. முதலில் பேட்டிங் செய்ய ஏற்ற விக்கெட் எனக் களமிறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு, அதுவும் 50 ஓவர்களுக்குள்ளாகவே ஆல் அவுட் ஆகியிருக்கிறது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என கோலி நினைத்ததும் அப்படியே தலைகீழாக மாறிப்போனது.

முதல் விக்கெட்டை இஷாந்த் ஷர்மா எடுத்திருந்தாலும் அடுத்த 9 விக்கெட்களையும் ஸ்பின்னர்களே எடுத்தார்கள். அக்ஸர் பட்டேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, அஷ்வின் 3 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். இங்கிலாந்து அணியின் டாப் ஸ்கோரர் ஸாக் க்ராலி 53 ரன்கள் அடித்தார். இரண்டு பேர் டக் அவுட், நான்கு பேர் சிங்கிள் டிஜிட் ஸ்கோர் என 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது இங்கிலாந்து.
இந்தியா இப்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கியிருக்கிறது.