Election bannerElection banner
Published:Updated:

227 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி... சென்னை டெஸ்ட்டின் கடைசி நாளில் என்ன நடந்தது?! #INDvENG

#INDvENG
#INDvENG

92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரே ஒவரில் 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டான பன்ட் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தால் அவரை வந்த வேகத்தில் பெவிலியனுக்குப் போகவைத்துவிட்டார் ஆண்டர்சன்.

ஒரே ஒரு ஓவர் 5 நாள் ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றுமா? 38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது இரண்டு அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங்க்கால் மொத்த போட்டியின் போக்கையும் மாற்றி 22 ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை மண்ணில் இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்துள்ளார்.

இந்தியா மற்றுமொரு சரித்திர வெற்றி பெறுமா, புஜாரா ஒரு பக்கம் நின்று ஆடி மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடி ஆட்டம் ஆட வழிவகை செய்து கொடுப்பாரா, பன்ட் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் ஆடி அணியை கரை சேர்ப்பாரா எனப் பல கேள்விகளுடன் இன்றைய நாள் தொடங்க அந்த சீன் எல்லாம் இங்கே இல்லை என இங்கிலாந்து சிம்பிளாகப் போட்டியை முடித்துவைத்துவிட்டது.

90 ஒவர்களில் 380 ரன்களை சேஸ் செய்ய வேண்டும், கையில் 9 விக்கெட்டுகள் இருக்கின்றன. பிரிஸ்பேனில் செய்தது போல் மற்றுமொரு அதிரடி ஆட்டத்தை இந்தியா ஆடும் எனப் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்றைய போட்டி தொடங்கியது.

#INDvENG
#INDvENG

கில் பவுண்டரியுடன் ஆட்டத்தை ஆரம்பிக்க, ஆல் இஸ் வெல் என நிமிர்ந்து உட்கார்ந்தான் இந்திய ரசிகன். ஆனால் பாசிட்டிவ் தொடக்கம் சிறிது நேரத்திலயே நெகட்டிவ் தொடக்கமாக மாறிவிட்டது. இன்றைய நாள் முழவதும் ஒரு எண்டில் நிலைத்துநிற்க வேண்டிய புஜாரா லீச் வீசிய பந்தில் முன்னே சென்று டிஃபன்ஸ் ஆட முயற்சிசெய்ய பந்து எகிறி பேட்டில்பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ஸ்டோக்ஸ் கைகளில் தஞ்சம்புகுந்தது.

புஜாரா இழப்பு பெரிய இழப்பாகப் பார்க்கப்பட்டது. இவர் ஒரு எண்டில் நின்றால்தான் மற்ற பேட்ஸ்மேன்களால் தைரியமாக தங்களின் ஷாட்ஸை ஆடமுடியும் என்ற நிலை எல்லாருக்கும் தெரியும்.

புஜாரா பெவிலியனுக்குப்போக கேப்டன் கோலி உள்ளே வந்தார். உடனே இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் கோலியை அவுட் ஆக்கிய பெஸ்ஸை உள்ளே கொண்டு வந்தது. பெஸ்ஸின் பந்தில் கில் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். முதல் ஒவரிலயே இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அதுவும் இறங்கி வந்து பெஸ்ஸின் லைன் அண்ட் லென்த்தை உடைத்தார். அதற்கு அடுத்த ஒவரில் சிக்ஸர். கில்லும், கோலியும் அணியை கரை சேர்த்துவிடுவார்கள் என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அந்த நம்பிக்கை கொஞ்சநேரம் கூட நீடிக்கவில்லை.

கில் 50 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து ஆண்டர்சனை உள்ளே கொண்டு வந்தது. 26 ஒவர்கள் முடிந்து 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருந்த போட்டி ஒரே ஒவரில் மொத்தமாக மாறிவிட்டது. அதை மாற்றிகாட்டியவர் 38 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

#INDvENG
#INDvENG

தான் வீசிய இரண்டாவது பந்தை ரிவர்ஸ் ஸ்விங்காக வீச கில்லின் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. சரி கில்லைத்தான் வீழ்த்திவிட்டார், அடுத்த வருகிற ரஹானே நன்றாக ஆடுவார் என நினைப்பதற்குள் ஆண்டர்சனின் மற்றுமொரு அபாரமான ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்பிடள்யு ஆகப்பார்த்தார் ரஹானே. அம்பயர் அவுட் தர மறுக்க இங்கிலாந்து ரிவ்யூவுக்குச் சென்றது. ரீப்ளேவில் அது Umpire's Call என அறிவிக்கப்பட எல்பிடள்யுவில் இருந்து தப்பிப்பிழைத்தார் ரஹானே. ஆனால், அந்த சந்தோஷம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. அடுத்த பந்தையே கில்லுக்கு வீசியது போல இன்னொரு ரிவர்ஸ் ஸ்விங்கை வீச, ரஹேவின் பேட்டுக்கும் பேடுக்கும் இடையே சோஷியல் டிஸ்டன்ஸிங் அதிகமாக இருக்க ஸ்டம்புக்கள் தெறித்தன.

92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரே ஒவரில் 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டான பன்ட் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தால் அவரை வந்த வேகத்தில் பெவிலியனுக்குப் போகவைத்துவிட்டார் ஆண்டர்சன். அடுத்து வந்த சென்னையின் செல்லபிள்ளை சுந்தரும் பெஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆக மொத்த நம்பிக்கையும் தகர்ந்தது.

கிங் கோலி களத்தில் நின்றாலும் சேப்பாக்கம் பிட்ச்சில் பந்துகள் கன்னாபின்னாவென திசைமாறியதில் தடுமாறிப்போனார்கள் பேட்ஸ்மேன்கள். "என் விக்கெட்டையா எடுக்குற?'' என்பதுபோல மீண்டும் பெஸ் ஒவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஆனால், வெற்றிக்கு வெகுதூரம் இருந்ததால் இந்த பவுண்டரிகளை கொண்டாட முடியவில்லை.

ஒரு பவுன்சரை வீசி அஷ்வினை நிலைகுலையச் செய்த ஆர்ச்சர், அடுத்த ஒவரில் மீண்டும் ஒரு பவுன்சரை வீசி அஷ்வினின் கையில் காயத்தை ஏற்படுத்தினார். 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் முதல் செஷனை முடித்தது இந்தியா.

உணவு இடைவேளைக்குப்பிறகு ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த கூட்டணி வெகுநேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் லீச் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆக அடுத்த சிறிது நேரத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒரே நம்பிக்கையாக இருந்த கோலியையும் காலி செய்தது. ஸ்டோக்ஸ் வீசிய பந்து இடுப்பளவு உயரத்துக்கு வரும் என எதிர்பார்த்த கோலி முன்னே செல்ல பந்து மிகவும் தாழ்வாக சென்று ஸ்டம்ப்பைத் தனியாக தூக்கிசென்றது. கோலியே அந்த டெலிவரியைப் பார்த்து அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டார்.

#INDvENG
#INDvENG

நேற்று ஜோ ரூட்டுக்கு பந்து தாழ்வாக சென்று எல்பிடபிள்யு ஆனது என்றால் இன்று அதைவிட தாழ்வாக சென்று கோலியின் ஸ்டம்பை தட்டிபறித்ததே சேப்பாக்கம் பிட்ச்சின் தன்மை எப்படியிருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டியது. கோலி அவுட் ஆனதும் இந்தியாவின் கதை க்ளைமேக்ஸைத் தொட்டது.

நதீம் மற்றும் பும்ரா அடுத்தடுத்த இடைவெளியில் அவுட் ஆக, 192 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது இந்தியா. இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இங்கிலாந்து சார்பில் லீச் 4, ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்கள்.

டாஸின் வெற்றி தோல்வி கோலி கையில் இல்லை. ஆனால், தவறான பெளலர்களைத் தேர்வு செய்தது, இங்கிலாந்து அணியை பெரிய ஸ்கோர் எடுக்க விட்டது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது என அடுக்கடுக்கான பல தவறுகளை செய்து வழக்கம்போல தொடரின் முதல்போட்டியை தோற்றுள்ளது இந்தியா.

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுகொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெல்வது ஒன்றும் இந்திய அணிக்கு புதிதல்ல. அதை இந்த முறையும் இந்தியா செய்யும் என்று நம்புவோம்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு