Published:Updated:

இங்கிலாந்தின் தொடர் பேட்டிங் சொதப்பல்... கடைசி டெஸ்ட்டில் கோலி கூட்டணியின் முதல் நாள்?!#INDvENG

விராட் கோலி

"தனது வீரர்களுக்கு ஒன்று என்றால், முன்னாள் வந்து நிற்கும் ஒரு கேப்டனைத்தான், நாம் சிட்னியில் மிஸ் செய்தோம்!" என்று கோலியின் மீதான மதிப்பை கூட்டினார் கவாஸ்கர்.

இங்கிலாந்தின் தொடர் பேட்டிங் சொதப்பல்... கடைசி டெஸ்ட்டில் கோலி கூட்டணியின் முதல் நாள்?!#INDvENG

"தனது வீரர்களுக்கு ஒன்று என்றால், முன்னாள் வந்து நிற்கும் ஒரு கேப்டனைத்தான், நாம் சிட்னியில் மிஸ் செய்தோம்!" என்று கோலியின் மீதான மதிப்பை கூட்டினார் கவாஸ்கர்.

Published:Updated:
விராட் கோலி

முதல்நாளே ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கிறது என்று குறை சொல்லிக் கொண்டிருந்தவர்களை, ''இன்றைய பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதகமாகத்தான் இருந்தது. ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்தான் சரியாக ஆடவில்லை'' என்று சொல்லவைத்திருக்கிறது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டாஸ் தோற்பது என்பது தற்போது கோலிக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டு, டாம் பெஸ் மற்றும் லாரன்ஸ் என்ற இரண்டு ஸ்பின்னர்களை உள்ளே கொண்டு வந்திருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக, சிராஜ் அணியில் இடம்பிடித்தார். சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் வருவார் என நினைத்த நிலையில் சுந்தரையே தக்கவைத்துக் கொண்டது இந்திய அணி.

பிங்க் பால் டெஸ்ட் போல, பந்து வேகமாக வராது, முதல் நாள் ஆட்டம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து, தனது பேட்டிங் கணக்கைத் தொடங்கியது.

இஷாந்தின் முதல் ஓவர்... 2-வது பந்தே, க்ராலிக்கு எல்பிடபிள்யூவுக்கு ரிவ்யூ சென்றனர் இஷாந்த் ஷர்மாவும் கோலியும். ஆனால், பந்து ஸ்டம்புக்கு மேலே செல்ல, நாட் அவுட் என்று கூறப்பட்டது. முதல் 5 ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களை பந்து வீசவைத்து விட்டு, 6-வது ஓவர், உடனடியாக அக்ஸர் பட்டேலை, உள்ளே கொண்டு வந்தார் கோலி.

இந்த தொடர் முழுவதும் விக்கெட் வேட்டைகளை நடத்திக்கொண்டிருக்கும் அக்ஸர், கோலியின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. தான் வீசிய இரண்டாவது பந்தில், சிப்லியை போல்ட் ஆக்கி, அற்புதமான தொடக்கத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து உள்ளே வந்த பேர்ஸ்டோ, பொறுமையாக ஆட ஆரம்பிக்க, க்ராலியைக் குறி வைத்தனர், இந்திய அணியினர். 8-வது ஓவரில் அக்ஸர் பந்தில், இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க முயல, பந்து எட்ஜாகி சிராஜ் கைகளில் தஞ்சம் புகுந்தது. 2002-க்குப் பிறகு முதன்முறையாக ஸ்பின்னர் ஒருவர், இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களையும் முதல் பத்து ஓவர்களுக்குள் அவுட் ஆக்கியது, இதுவே முதல்முறை ஆகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மைதானத்தில் லேட்ரல் மொமன்ட் இருக்க, கோலி ஒரு எண்டில் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார். அதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. கேப்டன் ரூட்டுக்கு அருமையாக செட்டப் செய்து, தொடர்ந்து அவுட் ஸ்விங்கர்களை வீசி, அவர் எதிர்பாராத நேரத்தில் இன்ஸ்விங்கை வீசி, எல்பிடபிள்யூ ஆக வைத்தார் சிராஜ். இந்தத் தொடரில், முதல் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததோடு சரி, அதற்குப் பிறகு எந்த பெரிய இன்னிங்ஸும் ஜோ ரூட் ஆடவில்லை. இது, பேட்டிங்கில் பெரும்பகுதியை ரூட்டை நம்பியே இருக்கும் இங்கிலாந்துக்கு, மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது .

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

ஜோ ரூட்டைத் தொடர்ந்து உள்ளே வந்த பென் ஸ்டோக்ஸுக்கு சிராஜ் பவுன்சர் வீசியபோது ஸ்டோக்ஸ் சில வார்த்தைகளைக் கூற, கேப்டன் கோலி உடனே வந்து, பென் ஸ்டோக்ஸிடம் பேச, சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனே அம்பயர்கள் தலையிட்டு, இந்த வாக்குவாதத்தை முடித்து வைத்தனர்.

கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த சுனில் கவாஸ்கர், "தனது வீரர்களுக்கு ஒன்று என்றால், முன்னாள் வந்து நிற்கும் ஒரு கேப்டனைத்தான், நாம் சிட்னியில் மிஸ் செய்தோம்!" என்று கோலியின் மீதான மதிப்பை மேலும் கூட்டினார்.

பென் ஸ்டோக்ஸ் வந்தாலே அஷ்வினை உள்ளே கொண்டு வந்து, அவர் விக்கெட்டை எடுக்கும் கோலி, இந்த முறை ஒரு எண்டில் அக்ஸரையும், மறு எண்டில் ஃபாஸ்ட் பவுலர்களையும், தொடர்ந்து போட வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. அஷ்வினை 19-வது ஓவர் உள்ளே கொண்டு வந்தார் கோலி. அஷ்வினை சிக்ஸுடன் வரவேற்ற பென் ஸ்டோக்ஸ், தொடர்ந்து ஆட்டமிழக்காமல் ஆட, மதிய உணவுநேர முடிவில், 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என வந்து நின்றது, இங்கிலாந்து.

இரண்டாவது செஷன் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்துக்கு, மீண்டும் ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சிராஜ். பேர்ஸ்டோவை எல்பிடபிள்யூ ஆக்க, அவர் ரிவ்யூக்குச் சென்றார். பந்து ஸ்டம்புக்கு மேல் செல்வது போல் இருந்தாலும், அது 'Umpires Call' ஆக மாற, அவுட் ஆகி, பெவிலியன் சென்றார் பேர்ஸ்டோ. பேர்ஸ்டோவைத் தொடர்ந்து உள்ளே வந்த போப், இந்த முறை நன்றாக ஆட ஆரம்பித்தார்.

ஸ்டோக்ஸ் மற்றும் போப், பொறுப்பாக ஆட ஆரம்பிக்க, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ், தனது 24-வது அரைச் சத்தத்தைப் பூர்த்தி செய்து, இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனால், அந்த நம்பிக்கையை, அடுத்த ஓவரிலேயே பொய்யாக்கினார் வாஷிங்டன். அவர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி, நடையைக் கட்டினார் ஸ்டோக்ஸ்.

அணியின் ஸ்கோர் 121 ரன்கள் என இருந்தது, இங்கிலாந்து 200 ரன்களைத் தொடுமா?, இல்லை, மீண்டும் ஒருமுறை சீட்டுக்கட்டு போல் சரியுமா?! என்று எதிர்பார்த்தபோது, மற்றொரு சிறிய பார்ட்னர்ஷிப் இங்கிலாந்துக்குக் கைகொடுத்தது .

இங்கிலாந்து
இங்கிலாந்து

போப் மற்றும் லாரன்ஸ் பொறுமையாக ரன்கள் சேர்க்க, அணியின் ஸ்கோர் 166 ரன்கள் என வந்து நின்றது. இந்தத் தொடர் முழுவதும், அஷ்வின் பந்தில் அவுட் ஆகிக் கொண்டிருக்கும் போப், மீண்டும் ஒருமுறை அஷ்வின் விரித்த வலையில் சிக்கி, சில்லி பாயின்ட்டில் நின்று கொண்டிருந்த கில்லிடம் கேட்ச் கொடுத்து, 29 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த ஃபோக்ஸ், 1 ரன்னில், அஷ்வின் பந்தில், ரஹானேவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அக்ஸர் பட்டேல், தன் பங்கிற்கு, சீரான இடைவெளியில், இரண்டு விக்கெட்டுகளைத் தூக்கி, 189 ரன்களுக்கு, 9 விக்கெட்டுகள் என கொண்டு வந்து நிறுத்தினார்.

கடைசியில் ஆண்டர்சன் அடித்த 10 ரன்களின் மூலமாக, 200 ரன்களைக் கடந்த இங்கிலாந்து, தனது இன்னிங்ஸை, 205 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. கடைசி விக்கெட்டாக, அஷ்வின் பந்தில் லீச் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் அக்ஸர் பட்டேல் 4, அஷ்வின் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்கள்.

இங்கிலாந்து சார்பில், ஸ்டோக்ஸைத் தவிர வேறு யாரும், அரைச்சதத்தைத் தொடவில்லை. போன போட்டி போன்று இல்லாமல், பேட்டிங் ஆட நல்ல சூழல் இருந்தும், 400 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய இன்னிங்ஸை, தங்களது தவறான ஷாட் செலக்ஷன்களால், 205 ரன்களுக்கு முடித்துக் கொண்டது இங்கிலாந்து.

இந்திய இன்னிங்ஸை ரோஹித் ஷர்மாவும், கில்லும் ஆரம்பிக்க, தொடர்ந்து சொதப்பி வரும் கில், இந்த முறையாவது பெரிய ஸ்கோர் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பை முதல் ஓவரின், மூன்றாவது பந்திலேயே, முடித்துவைத்தார். தொடர்ந்து இன்ஸ்விங் பந்துகளுக்குத் திணறிவரும் கில், இந்த முறையும், அதே பொறியில் ஆண்டர்சனிடம் சிக்கினார். ஆண்டர்சன் பந்தில், லெக்ஸ்டம்ப் லைனில் பேடில் வாங்க, அம்பயர் அவுட் கொடுத்தார். ரிவ்யூ எடுத்தும், பந்து ஸ்டம்புகளைத் தாக்க, கில் பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதாகி விட்டது.

கில்லை டக் அவுட் ஆக்கியதன் மூலம், ஓப்பனிங் பேட்ஸ்மேனை, ஸ்கோர் எடுக்க விடாமல் அவுட் ஆக்கிய கணக்கை, 104-வது முறையாக செய்து, மெக்ராத்துடன், முதலாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

கில்லைத் தொடர்ந்து உள்ளே வந்த புஜாரா, நிதானமாக ஆட, ஆட்ட நேரமுடிவில் 24 ரன்களுக்கு, 1 விக்கெட்டு என முடிந்துள்ளது இந்தியா. நாளைய ஆட்டத்தில் இந்தியா லீட் எடுக்கும் பட்சத்தில், போட்டி இந்திய அணியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.