Published:Updated:

ENG v IND - 4:1 அல்லது 3:2... லார்ட்ஸ் டெஸ்டுக்கு கோலியின் பார்முலா என்ன? மழை வாய்ப்பு இருக்கிறதா?

ENG v IND | Virat Kohli

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் அத்தியாயம் கடைசிப் பக்கமே இல்லாது முடிந்து போக அதன் இரண்டாவது அத்தியாயம் லார்ட்ஸில் எழுதப்பட இருக்கிறது.

ENG v IND - 4:1 அல்லது 3:2... லார்ட்ஸ் டெஸ்டுக்கு கோலியின் பார்முலா என்ன? மழை வாய்ப்பு இருக்கிறதா?

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் அத்தியாயம் கடைசிப் பக்கமே இல்லாது முடிந்து போக அதன் இரண்டாவது அத்தியாயம் லார்ட்ஸில் எழுதப்பட இருக்கிறது.

Published:Updated:
ENG v IND | Virat Kohli
டிரெண்ட் பிரிட்ஜில் வெற்றி பெற்று டிரெண்டிங்கில் இருந்திருக்க வேண்டிய இந்தியா மழையின் சதியால் அதனை நழுவவிட்டது. இந்நிலையில், லார்ட்ஸில் நடைபெறும் போட்டியில் அந்தக் களத்தில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி உள்ள ஆண்டர்சன், லார்ட்ஸில் 150-வது டெஸ்டில் ஆடப் போகிறோம் என்ற கனவில் இருந்த பிராட் ஆகிய இரட்டை ஏவுகணைகள் இல்லாத இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

லார்ட்ஸ் நினைவுகள்

2014-ம் ஆண்டு, லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில், அஜிங்யா ரஹானேயின் சதம், இஷாந்த் ஷர்மா மற்றும் புவனேஷ்வர் குமாரின் முறையே, ஏழு மற்றும் ஆறு விக்கெட்டுகள், இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தன. ஆனால், 2018-ம் ஆண்டு, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவை இரண்டு இன்னிங்ஸிலும் ஆல் அவுட் ஆக்கி, இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இப்படி இருக்க இந்த மோதல் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கப் போகிறது.

ENG v IND | முகமது ஷமி
ENG v IND | முகமது ஷமி

வேகத்திற்கு வந்த வினை

சொல்லி வைத்தாற் போல் இங்கிலாந்து இந்தியா இருபக்கமும் வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விலகி உள்ளனர். ஆண்டர்சன் மற்றும் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட, ஸ்டூவர்ட் பிராட், காயத்தால் தொடரிலிருந்தே விலகி உள்ளார். ஏற்கெனவே, பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்திற்கு பெரிய இழப்பாக இருந்து வரும் நிலையில் அணியின் இரண்டு தூண்களான ஆண்டர்சன் மற்றும் பிராட் இல்லாதது இப்போட்டியில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. இது மற்ற வீரர்களால் சரி செய்யப்படுமா அல்லது அந்த வெற்றிடம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அவர்களுக்கே கலக்கம் தருமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேகப்பந்து வீச்சாளர்களின் ராஜ்ஜியம்

ENG v IND | பும்ரா
ENG v IND | பும்ரா

2018-ம் ஆண்டுக்குப் பிறகு, லார்ட்ஸில் நடைபெற்றுள்ள ஐந்து போட்டிகளில், 133 விக்கெட்டுகளை, வேகப் பந்து வீச்சாளர்களே வீழ்த்தி உள்ளனர். 11 விக்கெட்டுகளை மட்டுமே ஸ்பின் பௌலர்கள் வீழ்த்தி உள்ளனர். எனவே, வேகப் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தை இப்போட்டியில் காண வாய்ப்பு அதிகமுள்ளது.

4 : 1 தொடருமா?!

ENG v IND | அஷ்வின்
ENG v IND | அஷ்வின்

கடந்த போட்டி முடிந்தபிறகு, கோலி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர் என்ற சூத்திரத்தையே தாங்கள் முன்னெடுத்துப் போகப் போவதாகக் கூறி இருந்தார். அதே நேரத்தில், நிலைமைக்குத் தகுந்தவாறும், அது தகவமைக்கப்படும் என்ற ஒரு கருத்தையும் சொல்லி இருந்தார். தாக்கூர் விலகியுள்ள நிலையில் இஷாந்த் ஷர்மா அல்லது உமேஷ் யாதவ்வை நாடி அவர் நகர்வாரா அல்லது லார்ட்ஸ் பேட்ஸ்மென்களுக்கு ஓரளவு ஆதரவு அளிக்கும் என்பதால் அஷ்வினைக் கொண்டு வருவாரா என்ற குழப்பம் நீடிக்கிறது. 4 : 1 என்ற விகிதம், 3 : 2 ஆக மாறுமா என்பது கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கையிலேயே இருக்கிறது.

இருபக்க பேட்டிங் சொதப்பல்கள்

ENG v IND | கேப்டன் ஜோ ரூட்
ENG v IND | கேப்டன் ஜோ ரூட்

இங்கிலாந்து - இந்தியா இருபக்கமுமே, பேட்டிங்கில் பெரிதாகச் சோபிக்கவில்லை. இந்தியாவின் முப்பெரும் பேட்ஸ்மென்கள் கோலி, புஜாரா, ரஹானேயின் பேட்டிங் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. முக்கியமாக, இந்தியாவின் முழுமுதல் பிரதான வீரரான கோலி அவரது சதத்தை எதிர்பார்க்க வைத்ததை எல்லாம் தாண்டி ரன்களுக்கே எதிர்பார்க்க வைக்கும் நிலைக்கு ரசிகர்களை கொண்டு வந்துவிட்டார். இங்கிலாந்தின் நிலைமையும் ஏறக்குறைய இதேதான். ரூட்டைத் தவிர வேறு யாருமே நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை.

மயாங்க் சேர்க்கப்படுவாரா?!

முதல் போட்டியில், காயத்தால் விலகிய மயாங்க் அகர்வால், இரண்டாவது போட்டிக்கு முழு உடல் தகுதி பெற்று, தயாராக இருக்கிறார். ஆனால், முதல் போட்டியில் கே எல் ராகுலின் செயல்பாடு அவருக்குரிய இடத்தை உறுதி செய்து விட்டது. இந்நிலையில் பேட்டிங்கில் சொதப்பிக் கொண்டிருக்கும் புஜாரா அல்லது ரஹானே யாராவது ஒருவர் வெளியே உட்கார வைக்கப்படலாம், அல்லது இன்னமும் ஒரு போட்டிக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என அவர்களையே தொடர வைத்து, இந்தப் போட்டியிலும் மயாங்க்குக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

ENG v IND | மொயின் அலி
ENG v IND | மொயின் அலி

மொயின் அலி வருகை

இத்தொடரில் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளது இங்கிலாந்தின் பேட்டிங் ஸ்லாட் ஒன்று நிரப்பப்படுவதோடு, ஸ்பின்னர் ஒருவர் கிடைப்பதையும் உறுதி செய்துள்ளது. இந்தியா ஜடேஜாவைக் கொண்டு இவை இரண்டையுமே நிறைவேற்றிக் கொள்வதைப் போல் இங்கிலாந்தும் செய்ய முனையலாம். மொயின் அலியின் வருகையால் வெளியேறுவது லாரன்ஸாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஹசீப் ஹமீத் சேர்க்கப்படுவாரா?!

சமீபத்தில், இந்தியா விளையாடிய பயிற்சி ஆட்டங்களில், இந்தியாவுக்கு எதிராக கவுண்டி செலக்ட் லெவனாக, ஓப்பனராகக் களமிறங்கி இருந்தார் ஹசீப் ஹமீத். அதில், முதல் இன்னிங்க்ஸில் 112 ரன்களையும் அடித்திருந்தார். இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் எடுக்கத் திணறும் சூழலில், ஏன் அவரை முயன்று பார்க்கக் கூடாது என்ற கருத்துக்களும் தொடர்ந்து உலவுகின்றன. எனினும், அதை இப்போட்டியில் இங்கிலாந்து செயல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.

ENG v IND
ENG v IND

மாற்று பௌலர்கள் யார்?!

இங்கிலாந்தின் பிரதான பௌலர்களான ஆண்டர்சன் மற்றும் பிராட் இல்லாத நிலையில், அவர்களது இடத்தை மார்க் உட்டும், ஷகிப் மேக்மூத்தும் நிரப்பலாம். இங்கிலாந்தின் சமீபத்திய இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது, மார்க் உட் பந்து வீச்சால் அசத்தியது நினைவு இருக்கலாம். அவரது வேகம்தான் அவரது பலமே. எனவே கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை மார்க் உட், திறம்பட பயன்படுத்தி மிரட்டலாம்.

வானிலை எப்படி?!

ENG v IND | லார்ட்ஸில் பயிற்சியில் இந்திய அணி
ENG v IND | லார்ட்ஸில் பயிற்சியில் இந்திய அணி

இந்தியாவின் வெற்றி வாய்ப்பை, டிரெண்ட் பிரிட்ஜில், தட்டிப் பறித்தது மழை. உண்மையில், இடையிடையே குறுக்கிடும் மழை, டெஸ்ட் போட்டியின் ஜீவனையே குலைத்து விடுகிறது. ஆனால், லார்ட்ஸில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை பொழியாது என்ற தகவல், ஒரு முழுமையான கிரிக்கெட்டைப் பார்த்து மகிழலாம் என்ற எண்ணத்திற்கு வலுவேற்றி உள்ளது.

லார்ட்ஸில் கடைசியாக நடைபெற்ற 25 போட்டிகளில், 13-ல் வெற்றி கண்டுள்ள இங்கிலாந்து, ஆறு போட்டியை, டிரா செய்து, ஆறு போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. இது லார்ட்ஸில் அவர்களது பலத்தைச் சொல்கிறது. எனினும், அந்த ஆறில் ஒரு தோல்வி, இந்தியா ஆறா வடுவாகப் பரிசளித்ததுதான்‌. அதே திரைக்கதையை, இந்தியாவால், திரும்பவும் எழுத முடியுமானால், அது தொடரில் இந்தியாவை முன்னிலை பெற வைப்பதோடு, நம்பிக்கையையும் பல்கிப் பெருகச் செய்யும்.
லார்ட்ஸ் டெஸ்டுக்கு இந்தியாவின் பிளேயிங் 11 என்னவாக இருக்கலாம்? உங்களின் சாய்ஸை கமென்ட்டில் சொல்லுங்கள்.