Published:Updated:

ENGvIND: மிரட்டிய இந்திய வேகங்கள், ரூட்டின் ஆறுதல் கம்பேக்... முதல் நாளின் டாப் மொமன்ட்ஸ்!

வெகுண்டெழுந்த இந்திய வேகப்படையின் மிரட்டல் பௌலிங்கினாலும், மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ள பும்ராவின் நான்கு விக்கெட்டுகளாலும், 66 ஓவர்களிலேயே இங்கிலாந்து அடங்கி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டாஸ் என்னும் நேரவிரயம்

டாஸ் போடும் காசுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும், கோலி எதிர்பார்ப்புக்கு எதிராகத்தான் அது விழ வேண்டும் என்று. வழக்கம் போல டாஸை கோலி இழக்க, ரூட் பேட்டிங் என்றார்.

பும்ரா பேக் டு ஃபார்ம்

பும்ரா முதல் ஓவரிலேயே அவுட் ஸ்விங்கர்களால் பர்ன்ஸை செட் செய்து, பின் இன் ஸ்விங்கரால் அவரைத் தூக்கியதெல்லாம் ஆகச்சிறந்த ஸ்கெட்ச். ஸ்விங்கோடும் சீமோடும், பவுன்சையும் தேவைக்கேற்பக் கலந்து, அட்டாக்கிங் லைனில் பந்துவீசி, நான்கு விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா, பழைய பும்ராவாக, போர்க் குதிரையாகத் திரும்பி இருக்கிறார். முதல் இன்னிங்சில் வீசப்பட்டதில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பந்துகள் அவருடையதே. ஆண்டர்சன் விக்கெட்டை எடுத்த அந்த இன்ஸ்விங்கிங் யார்க்கர் எல்லாம், மொத்த இன்னிங்க்ஸுக்குமான பந்து!

ENGvIND
ENGvIND

க்ராவ்லிக்கான ரிவ்யூ

டிஆர்எஸ்ஸுக்கும் கோலிக்குமான நீண்ட நெடிய கதை, இங்கேயும் தொடர்ந்தது. சிராஜ் வீசிய ஓவரில், இரண்டு பந்துகள் இடைவெளியில், இரண்டு முறை ரிவ்யூ கேட்கப்பட்டு, இரண்டாவது முறை இந்தியா வெல்ல, க்ராவ்லி வெளியேறினார். பண்ட்டை நம்பி மட்டுமே ரிவ்யூவுக்குப் போகும் முடிவை கோலி மறுபரிசீலனை செய்வது சாலச் சிறந்தது. எனினும், இரண்டாவது முறை, பண்ட்டின் கணிப்பு பொய்க்கவில்லை என்பதும் உபரித் தகவல்.

சிராஜின் சிறப்பான ஸ்பெல்கள்

சிராஜ் எடுத்தது ஒரு விக்கெட்தான் என்றாலும், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில், முக்கிய வீரராக அவர் இருக்கப் போகிறார் என்பதை முதல் இன்னிங்ஸ் முழுவதும் நிரூபித்திருந்தார். ஷார்ட் பால்கள் மட்டுமின்றி, அவரது குட் லெந்த் பந்துகளும் பேட்ஸ்மேன்களைச் சோதித்தன.

வேகம் வெர்ஸஸ் டாப் ஆர்டர் பேட்டிங்

இங்கிலாந்தின் முக்கிய பலவீனங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்ட டாப் ஆர்டர் குறைபாடு நன்றாகவே தெரிந்தது. இன் ஸ்விங்கா, அவுட் ஸ்விங்கா என்று கணித்து ஆட முடியாமல் குழம்பினர். ஓரளவு தாக்குப் பிடித்த க்ராவ்லி, சிப்லி கூட, அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடாமல், வெள்ளைக் கொடியோடே விளையாடியது போலத்தான் இருந்தது.

ENGvIND | Joe Root
ENGvIND | Joe Root

ரூட்டின் தனிநபர் போராட்டம்

வேறு யாரும் 30 ரன்களைக் கூடத் தாண்டாத நிலையில், கடந்த சில போட்டிகளாக அரைசதத்தை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரூட், தனது 50-வது அரை சதத்தை டெஸ்டில் பதிவு செய்தார். டைமிங், ஷாட் செலக்ஷன், ஃபுட் வொர்க் எல்லாம் தரமாக இருந்தது. சிராஜின் ஓவரில், அவரது ஹாட்ரிக் பவுண்டரிகள், வெளிப்படையாகவே சவால் விட்டன. பேர்ஸ்டோவுடனான அவரது பார்ட்னர்ஷிப்பில் வந்த 72 ரன்கள்தான் இங்கிலாந்துக்குக் கொஞ்சம் கௌரவம் சேர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷமியென்னும் சாமர்த்தியசாலி

முதலில் சில ஓவர்கள், விக்கெட்டில்லா ஓவர்களாக நகர்ந்தாலும் இறுதியில், ஷமியின் சாம்ராஜ்யம் களைகட்டியது. சிப்லியை கட்டம் கட்டித் தூக்கியவர், ஒரு கட்டத்தில் கட்டரால் பேர்ஸ்டோவின் கதையையும் முடித்திருந்தார். அதோடு, லாரன்ஸின் விக்கெட்டும் அவரது அற்புத பந்து வீச்சுக்கானதுதான். அந்த மூன்று விக்கெட்டுகளின் பின்னுமே, நிறைய உழைப்பும் திட்டமிடலும் இருந்தது. அதிலும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் என்னும் அவரது சம்பவம்தான், இங்கிலாந்தை இக்கட்டில் தள்ளியது.

அட்டாக்கிங் ஃபீல்டிங்

கடந்த ஆஸ்திரேலியத் தொடரில், அடிலெய்டு வீழ்ச்சிக்குப் பின், மெல்போர்னில் முதல் பந்திலிருந்தே, பௌலிங்கிலும், ஃபீல்டிங்கிலும் மிரட்டி இருந்தது இந்தியா. இந்தப் போட்டியிலும் அதே உத்வேகத்தை இந்தியாவிடம் பார்க்க முடிந்தது. பேர்ஸ்டோவின் தவற விடப்பட்ட ரன் அவுட் வாய்ப்பைத் தவிர, பெரும்பாலும், ஃபீல்டிங்கில் அசத்தியது இந்தியா. கோலியின் ஃபீல்ட் செட்அப்பும் வழக்கத்தை விட மேம்பட்டிருந்தது.

ENGvIND
ENGvIND

அஷ்வினா ஜடேஜாவா?!

அஷ்வினைக் கழட்டிவிட்டு, பேட்டிங்கைப் பலப்படுத்த ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தாலும், உதிரிகளுடன் கூடிய அவரது விக்கெட்டில்லா ஓவர்கள், அனைவருக்கும் அஷ்வினை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன.

நொறுங்கிய பேட்டிங் லைன் அப்

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் தாண்டி, மிக மோசமாக ஆடி இருந்தனர் இங்கிலாந்தின் மத்திய பின்வரிசை வீரர்கள். தேநீர் இடைவேளைக்கு அடுத்து, பேர்ஸ்டோவின் விக்கெட்டோடு ஆரம்பித்த அவர்களது சரிவு, அடுத்த 22 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழக்குமளவு படுபயங்கரமாக இருந்தது. ராபின்சன் வரை நீளும் பேட்டிங் லைன் அப்தான் எனினும், ஆறு பேர் ஒற்றை இலக்கத்தோடும், அதிலும் மூன்று பேர், டக்அவுட்டாகியும் வெளியேறி இருந்தனர். "அடடே நமது இந்திய அணியா இது?!" என சபாஷ் போட வைத்தது இந்தியப் பந்துவீச்சு.

ரூட் அவுட்

ஒருபக்கமாக நின்று போராடிக் கொண்டு, இங்கிலாந்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த ரூட்டின் விக்கெட்தான் இந்தியாவுக்கு ரூட்டைக் கிளியர் செய்தது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை தாக்கூர் வீழ்த்தி இருந்தாலும், அவர் மேல் ஸ்பாட் லைட் போட வைத்தது, ரூட்டின் விக்கெட்டே!

ENGvIND
ENGvIND

சமர்த்துக் குழந்தை சாம்

கடைசி வரை ஆட்டமிழக்காமல், இருந்த சாம் கரண், இந்திய பந்துவீச்சை கொஞ்சமாய்ச் சோதித்தார். பெரிய ஷாட்களையும் அவர் பேட் பார்த்திருக்க, 27 ரன்களைச் சேர்ந்திருந்தார்.

ஒப்பந்த ஓப்பனர்

ரெட் பால் கிரிக்கெட் மறுபடியும் ஒரு முறை கேஎல் ராகுலுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது. ரோஹித் - கே எல் ஓப்பனர்களாகக் களம் காண்பது இதுவே முதல்முறை. இக்கூட்டணி, வெற்றிகரமாகவே இன்னிங்கஸைத் தொடங்கியுள்ளது. விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள இந்தியா, முதல் நாள் ஆட்டத்தில் தனது கையை ஓங்க வைத்துள்ளது.

ஆட்டநேர இறுதியில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்து, இங்கிலாந்தை விட 162 ரன்கள் மட்டுமே பின்தங்கி இருக்கிறது. இந்தப் பார்ட்னர்ஷிப், அடித்தளத்தை இன்னமும் பலமாக இட்டு, இந்தியாவை முன்னிலை பெற வைக்குமா அல்லது புதிய நாளில், புதுத் திட்டங்களோடு புறப்பட்டு வந்து, ஆண்டர்சன் தலைமையிலான பௌலிங் படை, விட்டதைக் கைப்பற்றுமா எனக் காத்திருந்து பார்ப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு