Published:Updated:

ENG v IND: பேட்டிங்கில் கைகொடுத்த பண்ட் - ஜடேஜா இணை... இன்று சாதிக்குமா இந்திய பௌலிங் படை?!

நவரசத்தின் ஓரிரு ரசம் தவிர அத்தனையும் நிறைந்ததாக, இரு பக்கத்திற்கும் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி அமைந்திருந்தது, லார்ட்ஸின் இரண்டாவது நாளில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்க, 245 ரன்கள் முன்னிலையோடு வலுவான நிலையில் இந்தியா முடித்துள்ளது.

இங்கிலாந்து கிடுக்குப்பிடி

இன்கமிங், அவுட் கோயிங் என ஸ்விங்காகும் அத்தனை பந்துகளையும் கணித்து, சிறப்பாக ஆடிய கே எல் ராகுலை, இரண்டாவது நாளில், அவர் சந்தித்த இரண்டாவது பந்திலும், ரஹானேவை, அவர் சந்தித்த முதல் பந்திலேயும் இங்கிலாந்து அனுப்பி வைத்தது. 129 ரன்களில் ராகுல் வெளியேறியிருந்தார். 400-ஐத் தாண்டுவோமா, 450 வரை போவோமா எனக் கனவிலிருந்த இந்திய ரசிகர்களை, "இதுதான் டெஸ்ட் கிரிக்கெட், அதுவும் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட், ஓரிரு ஓவர்களில், மொத்தமும் மாறலாம்!" என நிகழ் உலகிற்குக் கொண்டு வந்தன அந்த இரண்டு விக்கெட்டுகள்.

ENG v IND
ENG v IND

மிளிராத மிடில் ஆர்டர்

இந்தியாவின் ஓப்பனர், டெய்ல் எண்டர்கள் பிரச்னையெல்லாம் பழையதாக, மிகப் பெரிய தலைவலியாக சமீபத்தில் உருவெடுத்து உள்ளது மிடில் ஆர்டர் பலவீனம். கோலி, புஜாரா, ரஹானே, மூவரில் யாரேனும் ஒருவர் சொதப்பினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மூவருமே ஃபார்ம் இழந்து தவிப்பதுதான் மிடில் ஆர்டர் அவசர சிகிச்சை அனுமதியை நாட வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளது. 2020-ம் ஆண்டுக்குப் பின், இந்த மூவரும் டெஸ்டில் இணைந்து எடுத்துள்ள அரை சதம் மற்றும் சதங்களின் எண்ணிக்கை, முறையே 9 மற்றும் 1 மட்டுமே. இதே காலகட்டத்தில் மூவரின் டெஸ்ட் சராசரியுமே 26-ஐக் கூடத் தாண்டவில்லை. இதனாலேயே, இந்தியா பல போட்டிகளில் வெற்றியை நழுவ விடுகிறது.

ENG v IND
ENG v IND

ரீசெட்டாக வேண்டிய ரஹானே!

கிரவுண்ட் ஆக்கி அனுப்பி இருக்க வேண்டிய பந்தை, காற்றில் கவரில் அனுப்பி ராபின்சனுக்கு ராகுல் தனது விக்கெட்டைப் பறிகொடுத்ததைக் கூட 250 பந்துகளைச் சந்தித்த களைப்பு எனலாம். ஆனால், ரஹானே ஆடிய தற்கொலைக்கு ஒப்பான ஷாட்டுக்கு எந்த விளக்கமும் கொடுக்க முடியாது. இதுவரை இங்கிலாந்தில் வைத்து, அவர்களது வேகப்பந்து வீச்சுக்கு தனது விக்கெட்டை 14 முறை தாரை வார்த்திருக்கிறார் ரஹானே. அதில் 11 முறை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தைத் தொட்டு ஆட்டமிழந்திருந்திருக்கிறார். அதை மனதில் வைத்து அவருக்கு வீசப்படும் பந்துகளில் 80 சதவிகிதம் அவ்வாறே வீசப்படுகின்றன. அந்த நிலை கொஞ்சமும் மாறாது 12-வது முறையாக, அவர் அதே லைனில் வந்த பந்தில் வெளியேறியதுதான் மிகப்பெரிய கொடுமை! கடைசியாக அவர் ஆடிய பத்து இன்னிங்ஸ்களில், ஏழு முறை 15-க்கும் குறைவான ரன்களையே ரஹானே எடுத்துள்ளார்.

பண்ட் - ஜடேஜா இணை

வழக்கம் போல அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்த வேதனையைக் கூட இந்திய ரசிகர்களை மறக்க வைத்தது பண்ட்டின் ஆட்டம். 19 ஓவர்கள் நீடித்த இக்கூட்டணிதான் முதல் செஷனில் இந்தியக் கணக்கில் 70 ரன்கள் வரவு வைக்கப்பட காரணமாக இருந்தது. 1000 டெஸ்ட் ரன்கள் என்ற இலக்கை, இந்தியாவுக்கு வெளியே, மற்ற நாடுகளில் அடித்த பெருமையை இப்போட்டியில் பண்ட் பெற்றார். இந்த 1000 ரன்களையும் அவர் 29 இன்னிங்ஸ்களிலேயே எட்டி இருப்பது சொல்லும், அவர் ஏன் தொடர்ந்து, ஓவர்சீஸிஸ் வொய்ட் ஜெர்ஸியில் ஆட வைக்கப்படுகிறார் என்பதனை!

ENG v IND
ENG v IND

ஃபார்முக்குத் திரும்பிய பின்வரிசை!

போன போட்டியில், இந்திய டெய்ல் எண்டர்கள் பொறுப்பாக ஆடி, தங்கள் பங்குக்கும் ரன்களைச் சேர்த்து, 'புது இந்தியா பிறந்து விட்டதா?!', என ரசிகர்களின் கண்களை வேர்க்க வைத்தனர். ஆனால், இப்போட்டியில் இழந்த ஃபார்மை திரும்ப மீட்டெடுத்துவிட்டனர். பண்ட்டின் விக்கெட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே பந்து விக்கெட் வாடை மறக்காமல் அடுத்த நான்கு விக்கெட்டுகளையும் காவு வாங்கிவிட்டது. ஸ்கோர், 331-ல் இருந்தபோது, பண்ட்டின் விக்கெட் விழ, அங்கிருந்து அணியின் ஸ்கோர், 364ஐ எட்டும் போதே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இந்த 33 ரன்களிலும், 24 ரன்கள் ஜடேஜா அடித்ததுதான். இந்தியாவின் பின்வரிசை பின்தங்கத்தான் செய்கிறது.

பின்வரிசையின் முன் ஏர்!

ENG v IND
ENG v IND

முதல் போட்டியில், அரைசதம் அடித்த ஜடேஜா, அதே பாணியை இங்கேயும் கையிலெடுத்தார். பண்ட் சென்ற பிறகு, ஒருபக்கம் அவர் மட்டுமே போராட, அவருக்குப் போதிய ஒத்துழைப்பு மறுபக்கமிருந்து கிடைக்கவில்லை. இப்போட்டியில் மட்டுமின்றி, பல போட்டிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இருந்தாலும், ஜடேஜா தனது இருப்பை நிரூபிக்காமல் செல்வதில்லை. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆறாவது அல்லது அதற்கும் லோயர் ஆர்டரில் களமிறங்கிய போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி 54.4 ஆக இருக்கிறது. பின்வரிசையை அவர் எப்படித் தாங்கிப் பிடிக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதிக்கக்காரர் ஆண்டர்சன்!

ஐந்து விக்கெட் ஹால்கள் மற்றவர்களுக்கு வேண்டுமெனில், சாதனையின் உச்சகட்டமாக இருக்கலாம், ஆனால், ஆண்டர்சனுக்கு அது பொழுதுபோக்கே! இந்தப் போட்டியில் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் ஹாலின் மூலமாக, அதிக வயதில், டெஸ்டில், ஐந்து விக்கெட்டுகள் ஹாலினைப் பதிவு செய்தவர்கள் பட்டியிலில் ரிச்சர்ட் ஹாட்லியைத் தாண்டி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் ஆண்டர்சன். லார்ட்ஸில் வைத்து, இது அவருடைய எழாவது ஐந்து விக்கெட் ஹால் என்பதும், அந்த ஏழில் நான்கு இந்தியாவுக்கு எதிராக வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ENG v IND
ENG v IND

300+ ரன்கள் வரலாறு

இந்தியா, முதல் இன்னிங்சில் 364 ரன்களைச் சேர்த்திருந்தது. இன்னமும் ஒரு 50 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தால், இந்தியா சந்திக்க நேரும் முடிவுகளில் மூன்றில் ஒன்று அடிக்கப்பட்டிருக்கும். அதாவது மேலும் ஒரு 50 ரன்கள் வெற்றிக்கே அடிக்கோடு இட்டிருக்கும். ஆனாலும், இந்த எண்களும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தன. ஏனெனில், இதுவரை இந்தியா இங்கிலாந்தில் முதல் இன்னிங்சில் 300-க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்த எட்டு சந்தர்ப்பங்களில் இரண்டில் வென்று ஆறைச் சமன் செய்துள்ளதே தவிர தோல்வியைச் சந்தித்ததே இல்லை.

சிராஜின் சீற்றம்!

ENG v IND
ENG v IND

இந்தியா பெற்ற இரண்டு விக்கெட்டுகள், இந்தியா இழந்த இரண்டு ரிவ்யூக்கள், இரண்டுமே சிராஜின் கணக்கில் எழுதப்பட வேண்டியவைதான். தேநீர் இடைவேளை முடிந்து வந்த கையோடே இரண்டு விக்கெட்டுகளை அநாயாசமாக இரண்டே பந்துகளில் காலி செய்தார் சிராஜ். அவர் சிப்லிக்கு வீசிய முதல் பந்தை லெக் சைடுக்கு அனுப்பி இருந்தார். போன போட்டியில், இப்படி ஒரு பந்தைத் தொட்டு அது எட்ஜாகிதான் அவரது விக்கெட்டை விழச் செய்திருந்தது. எனவே இம்முறையும் அதையே சிராஜ் முயல, சிப்லி கொஞ்சமும் யோசிக்காமல் லெக் சைடில் நகர்ந்த பந்தைத் தொட, அது ஷார்ட் மிட் விக்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கே எல் ராகுலால் பிடிக்கப்பட்டது. அடுத்த பந்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அணிக்குள் திரும்பி இருந்த ஹமீத்தினை போல்டாக்கி அனுப்பி இருந்தார் சிராஜ். அதுதான் அவர் சந்தித்த முதல் பந்துமே! விக்கெட்டுகளால் வெற்றிக்கு விதையிடும் சிராஜ், ரிவ்யூக்களை வீணாக்குவதிலும் சிறந்தே விளங்குகிறார். இதுவரை சிராஜ் கேட்டுள்ள பத்து ரிவ்யூக்களில், ஒன்று மட்டுமே சாதகமாகி உள்ளது. இப்போட்டியிலும், அப்படி இரண்டு ரிவ்யூக்கள் வீணடிக்கப்பட்டிருந்தன.

ரோஹித் - ராகுல் கூட்டணி : லார்ட்ஸில், செம க்ளாஸில்... இந்தியாவின் ஓப்பனிங் பிரச்னை தீர்ந்ததா?

பர்ன்ஸ் - ரூட் இணை

இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டாலும், இந்த இணை விடாப்பிடியாக போராடிக் கொண்டிருந்தது. பர்ன்ஸின், அரைசதத்திற்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்னும் நிலையில் ஷமி அவரை அனுப்பி இருந்தாலும், இவர்களது 85 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் அணியை சரிவிலிருந்து சற்றே மீட்டு, மேடேற்றியது. சிராஜ் மற்றும் இஷாந்தின் அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில், இவர்கள் அடித்த ஐந்து பவுண்டரிகள், 'நாம் பார்த்துக் கொண்டு இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்தானா?!' என்று கூட சற்றே சந்தேகிக்க வைத்தன.

ENG v IND
ENG v IND

ரூட் சாதனை

சென்ற போட்டியில் சதமடித்துச் சாதித்த ரூட், இப்போட்டியிலும் நம்பிக்கை தரும் வகையிலேயே ஆடிக் கொண்டிருந்தார். இப்போட்டியில், அதிக டெஸ்ட் ரன்களை இங்கிலாந்துக்காகச் சேர்த்தவர்கள் பட்டியலில், கிரகாம் கூச்சின் சாதனையை முந்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். எட்டக் கடினமான இலக்கில் 12,472 ரன்களோடு, குக் முதலிடத்தில் உள்ளார்.

யாரின் ஆவர்த்தனம்?!

முதல் இரண்டு செஷன்களை இங்கிலாந்து முழுமையாக கபளீகரம் செய்து இருந்தாலும், சிராஜ் மற்றும் ஷமி எடுத்த அந்த மூன்று விக்கெட்டுகள், நாளை முழுமையாக இங்கிலாந்துடையதாக மாற்றிக் கொள்ள அனுமதிக்கவில்லை. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 119/3 என முடித்துள்ளது. 245 ரன்கள் இந்தியாவை விட இங்கிலாந்து பின்தங்கி உள்ளது. ரூட் 48 ரன்களோடு தனது அடுத்த அரை சதத்தை எதிர்நோக்கி பேர்ஸ்டோவோடு களத்தில் உள்ளார்.

ENG v IND
ENG v IND

மூன்றாவது நாளில், இந்தியாவுக்கான வெற்றிச் சூத்திரத்தின் விடை விரைவான விக்கெட்டுகளாக மட்டுமே இருக்கப் போகிறது. அந்த சமன்பாட்டினில் மாறிலியாக பொருந்த இருக்கும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும், ஒரு ஸ்பின் பௌலரும்தான் அதன் வலப்பக்கம், விக்கெட்டுகள் என்றும், வெற்றி என்றும் எழுதப்பட்டுள்ளதா என முடிவு செய்ய உள்ளனர்.

காத்திருந்து காண்போம்!

எதுவும் நேரலாம், இது இங்கிலாந்து மைதானம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு