இந்திய அணியின் ஸ்கோர் 106-3. களமிறங்குகிறார் அந்த அறிமுக வீரர். முதல் நாளின் இரண்டாம் செக்ஷன்தான் என்றாலும், அப்போது சரிந்துவிட்டால் மீண்டெழுவது மிக சவாலான காரியம். கேப்டன் ரஹானேவும் அடுத்த சில ஓவர்களில் பெவிலியன் திரும்ப மொத்த பொறுப்பும் அந்த இளம் வீரர் மேல் விழுகிறது. தன் முதல் ரன்னை எடுக்கும் வரை ஒருவித பதற்ற நிலையிலேயே இருந்தார் அவர்.

முதல் ஏழு பந்துகளில் டிஃபன்ஸ் ஆடி பொறுமையிழக்கும் அவர், அடுத்த பந்தில் டவுன் தி கிரீஸ் இறங்கி எக்ஸ்ட்ரா கவர் மேல் தூக்கி அடிக்க முற்பட, பந்து சரியாக படமால் இரண்டு ரன்கள் எடுக்கிறார். மோசமான ஷாட்டால் தன் டெஸ்ட் கரியரின் முதல் ரன்கள் வந்தாலும் அடுத்த இரண்டு பந்துகளில் மிட் விக்கெட் திசையில் அற்புதமான பவுண்டரி ஒன்றை அடித்து தன் பதற்ற நிலையில் முழுமையாக ஆஃப் செய்கிறார். ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கும் அத்தனை நெருக்கடியையும் சுமந்து வந்தவர், இப்போது ஆசுவாசமாகிறார். ஷ்ரேயாஸ் ஐயரின் டெஸ்ட் கரியர் தொடங்குகிறது!

55 முதல் தரப் போட்டிகளில் 4762 ரன்கள். 53 எனும் அட்டகாசமான சராசரி! தன்னை ஒரு தேர்ந்த ரெட் பால் பேட்டராக நிரூபிக்க ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதற்கு மேல் என்ன இருக்கிறது!
நிரூபிக்க எதுவும் இல்லை என்றாலும், நிரூபிப்பதைத் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. சாதனையாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் வெற்றிக்கான போராட்ட காலம் எந்த அளவிற்கு முக்கியம் வாய்ந்ததோ, அதற்கு சம அளவு முக்கியமான மற்றுமொரு அத்தியாயம், தன் வாய்ப்பிற்கான காத்திருப்பு. தன் முதல் டெஸ்ட் வாய்ப்பிற்காக நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்தார் ஷ்ரேயாஸ்.
அதிலும் 2019 இராணி கோப்பைக்குப் பிறகு எந்த ஒரு ரெட்-பால் போட்டியிலும் அவர் விளையாடி இருக்கவில்லை. தான் ஒரு அக்ரஸிவ் ஒயிட்-பால் பேட்டர் மட்டுமே என அவரே நம்பும் அளவிற்கு லிமிடட் ஓவர் கிரிக்கெட் ஆடியிருந்தார் ஷ்ரேயாஸ். இதற்கிடையே தன்னை படுக்கையோடு கிடத்திய காயம் வேறு. ஆனால் தன் காத்திருப்பில் உறுதியாய் இருந்தார் ஷ்ரேயாஸ். ஐ.பி.எல், டி20 உலகக்கோப்பை என ஓய்வே இல்லாமல் விளையாடி வந்த சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட முதல் முறையாக டெஸ்ட் வாய்ப்பொன்று ஷ்ரேயாஸின் கதவை மெல்ல தட்டுகிறது.

நீண்ட நாள் காத்திருப்பு, முதல் வாய்ப்புக்காக தனக்கு பின்னால் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீரர்கள், இவை அனைத்திற்கும் மேலாக தன் முதல் போட்டியே கடைசி போட்டியாகவும் அமைந்துவிடலாம் என்கிற அபாயம். இத்தனை சவால்களுக்கு மத்தியில் நியூஸிலாந்துக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் ஷ்ரேயாஸ்.
நெருக்கடி மிகுந்த சூழலில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸை ஷ்ரேயாஸ் ஐயர் கட்டமைத்த விதம் அபாரமானது. இரண்டாவது செஷ்ஷனில் 55 பந்துகள் சந்தித்து 17 ரன்கள் மட்டுமே அடிக்கும் அடுத்த செஷ்ஷனில் 81 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 75 ரன்களை குவித்திருந்தார் ஷ்ரேயாஸ். அடுத்த நாளில் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் 90களை கடந்து முதல் போட்டியிலேயே சதம் விளாசி தன் காத்திருப்புக்கான பரிசை தனக்கே அளித்துக்கொள்கிறார் ஷ்ரேயாஸ்.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்விற்கு மிக முக்கிய காரணமாய் இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் தெரிந்தது அவரின் முதிர்ச்சி. 51-5 என்ற இக்கட்டான நிலையில் அஷ்வினுடன் கூட்டணி அமைத்த அவர் 125 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் சதத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது இந்த அரைசதம்.

இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்டார்களான புஜாரா, மிக குறிப்பாக அஜிங்க்யா ரஹானே இருப்பை தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளார் ஷ்ரேயாஸ். ரஹானேவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு முழுவதும் மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். அடிலெய்டு டெஸ்ட்டில் இந்தியா வாங்கிய பேரடிக்கு பிறகு மெல்போர்ன் டெஸ்டில் அணியை சிறப்பாக வழிநடத்தி சதம் அடித்ததே அவரின் சமீபத்திய பெஸ்ட். ஆனால் இது நடந்தே ஒரு வருடம் ஆகப்போகிறது.
இந்த ஆண்டில் மொத்தம் 12 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள அவர் இருபதுக்கும் குறைவான சராசரியுடன் 411 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார் (அரைசதங்கள்-2). 'ஃபார்ம் தற்காலிகம், கிளாஸ் நிரந்தரம்' என்னும் கிரிக்கெட் கூற்றிற்கேற்ப ஒரு கிளாஸ் பேட்டர் தன் பழைய ஃபார்மிற்கு திரும்ப ஒரே ஒரு பெரிய இன்னிங்ஸ் போதுமானது. ஆனால், அதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருப்பது?! மெல்போர்ன் டெஸ்டிற்கு பிறகான 6 இன்னிங்ஸ்களில் ரஹானே அடித்த ரன்கள் 22, 4, 37, 24, 1, 0.

மும்பையில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பவிருக்கிறார் கேப்டன் விராட் கோலி. இதனால் முதல் டெஸ்டில் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் நீடிப்பாரா அல்லது துணை கேப்டனான ரஹானேவுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது.
என்ன செய்யப்போகிறார் கேப்டன் கோலி?!