கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஏன் சறுக்கியது இந்தியா?

கோஹ்லி
பிரீமியம் ஸ்டோரி
News
கோஹ்லி

டாஸின்போது கேள்விகள் கேட்பவர்கள், ‘அணியில் என்னென்ன மாற்றங்கள்’ என்பதைக் கேட்பார்கள். அதில் வெகுசிலர் மட்டுமே, அந்த மாற்றத்துக்கான காரணத்தைக் கேட்பார்கள்

2021 டி-20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியிருக்கிறது இந்தியா. தொடர்ந்து 7 ஐ.சி.சி தொடர்களில் குறைந்தபட்சம் அரையிறுதிக்குள்ளாவது நுழைந்துகொண்டிருந்த அணி, இம்முறை அந்த வாய்ப்பை இழந்திருக்கிறது. முதல் இரு போட்டிகளிலும் தோற்றிருந்தாலும், இந்தியாவின் வீழ்ச்சி அதற்கு முன்பே தொடங்கிவிட்டது!

நியூசிலாந்திடம் தோற்றபிறகு “நாங்கள் தைரியமாக விளையாடவில்லை. பேட்டிங், பௌலிங் மட்டுமல்லாமல், எங்கள் உடல் மொழியிலும் தைரியம் வெளிப்படவில்லை” என்று பேசியிருந்தார் கேப்டன் விராட் கோலி. ஆனால், இது அந்த இரண்டு போட்டிகளில் நடந்த பின்னடைவு இல்லை. இந்திய அணியை, குறிப்பாக கோலியை கடந்த 2 ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னையின் நீட்சி அது!

கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு போட்டியிலும் டாஸிலேயே இந்திய அணி பின்தங்கியது தெரிந்துவிடும். கோலி தொடர்ந்து டாஸ் தோற்றதால் அப்படிச் சொல்லவில்லை. ‘டாஸ்தான் போட்டியை முடிவு செய்கிறது’ என்று வாதம் செய்தால், அதற்கு எதற்கு உலகத் தர வீரர்களும் உலகக் கோப்பை என்ற தொடரும்!

டாஸுக்குப் பின்பு கோலி பேசிய வார்த்தைகள் சொல்லிவிடும், இந்தியா தோற்றதன் காரணத்தை. அந்தப் பேட்டிகள் சொல்லிவிடும், இந்தியா எதையுமே தைரியமாக அணுகவில்லை என்பதை.

டாஸின்போது கேள்விகள் கேட்பவர்கள், ‘அணியில் என்னென்ன மாற்றங்கள்’ என்பதைக் கேட்பார்கள். அதில் வெகுசிலர் மட்டுமே, அந்த மாற்றத்துக்கான காரணத்தைக் கேட்பார்கள். மற்றபடி, அங்கு கேப்டன்கள் காரணம் சொல்லவேண்டியதில்லை. ஆனால், இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

சொன்ன காரணம் உண்மையாக இருந்திருந் தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு வீரரை வெளியேற்றும்போதும் அவருக்குக் காயம் என்பது, அடுத்த போட்டியில் அவரை அழைத்துவரும்போது காயம் சரியாகிவிட்டது என்பது. ஐ.பி.எல் தொடரிலிருந்து உலகக் கோப்பை வரை இதை வாடிக்கையாகவே வைத்திருந்தார் விராட்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, ‘சூர்யகுமாருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதால் இஷன்’ என்றார். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அது சரியாகிவிட்டது. ஆனால், அந்தப் போட்டிக்கு முன் வருண் சக்ரவர்த்திக்குக் காயம் ஏற்பட்டு அஷ்வின் கொண்டுவரப்பட்டார். ஸ்காட்லாந்து போட்டிக்கு முன் வருணுக்குக் காயம் சரியாகிவிட்டதாம். இரண்டே நாள்களில்!

அணி மாற்றங்களுக்கு எழும் விமர்சனங்களுக்கு பயந்து ‘காயம்’ என்பதைக் கேடயமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார் விராட். அந்த மாற்றங்களும் அந்த பயத்தின் விளைவு என்பதுதான் அடுத்த சோகம்.

ஏன் சறுக்கியது இந்தியா?

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்ததும், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டிக்கு இஷன் கிஷனைக் கொண்டுவந்தனர். இந்த மாற்றத்தில் பெரிதாகக் குறைசொல்ல முடியாது. சூர்யாவைவிட இஷன் ஃபார்மில் இருந்தார். ஆனால், இஷனை ஓப்பனராக்கி, ரோஹித்தை மூன்றாவதாக ஆடவைத்தது கேள்விகளை எழுப்பியது. இந்த மாற்றத்துக்குக் காரணம் இஷனின் ஃபார்ம் இல்லை. ‘ஒரு இளம் வீரரின் ஃபார்முக்காக, சக்சஸ்ஃபுல்லான பார்ட்னர்ஷிப்பை உடைப்பார்களா’ இல்லை ரோஹித் போன்ற ஜாம்பவான் பேட்டரின் இடத்தைத்தான் மாற்றுவார்களா? இந்த மாற்றத்தின் உண்மையான காரணம் பயம்.

இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் இடது கை வேகப்பந்துவீச்சாளர் களுக்குத் தடுமாறுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. ஷஹீன் அப்ரிடியிடம் வாங்கிய அடி அவர்களை மாற்றி யோசிக்க வைத்தது. வலது கை பேட்டர்களை டிரென்ட் போல்டிடமிருந்து பாதுகாக்க இஷன் காவு கொடுக்கப்பட்டார். ஆனால், அவரால் இந்திய டாப் ஆர்டரைப் பாதுகாக்க முடியவில்லை. மீண்டும் சொதப்பலே தொடர்ந்தது.

யுத்தியில் மாற்றங்கள் செய்வதும், அதற்காக ஒரு பெரிய முடிவை எடுப்பதும் தவறில்லை. ஆனால், அந்தக் காரணத்தை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் இல்லாததுதான் சிக்கல். ஒருவேளை, தோற்றால் அந்த முடிவு கேள்விக்குள்ளாகக்கூடாது என்றுதான், டாஸில் காரணத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்திய கேப்டன்.

தோல்விகளுக்கும், அதனால் ஏற்படும் விமர்சனங்களுக்கும் இந்த இந்திய அணியின் தலைமை பயப்படுகிறது. தோல்விகள் அங்கேதான் தொடங்குகின்றன. இந்த கொரோனா இடைவெளிக்குப் பிறகு விராட் கோலியின் மகத்தான பேட்டிங்கையும் அவரின் சதங்களையும் மட்டுமே இழந்துவிட்டதாக நினைக்கிறோம். விராட் கோலி, தன் தைரியத்தையும் மொத்தமாக இழந்திருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் தன் கேப்டன்சியில் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறார். ஆனால், அதை நியாயப்படுத்த முயல்வார். அதில் ஒரு அக்ரஷன் இருக்கும். ஆனால், இப்போது அந்தக் கேள்விகளே வரக்கூடாது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார். இத்தனை ஆண்டுகளில் இந்த ஐ.பி.எல் தொடரில்தான் அவர் குறைவான தவறுகள் செய்ததுபோல் இருந்தது. தவறுகளைத் திருத்திக்கொண்டாரோ என்று நினைத்தபோது, வெற்றிக்குத் தேவையான தைரியத்தைத் தவறவிட்டது சிக்கலாகிவிட்டது.

மிடில் ஓவர்களில் விராட்டின் அணுகுமுறையும், தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகும் கே.எல்.ராகுலின் அணுகுமுறையும் ஒன்றுதான். ராகுல் தன் அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் ஆடுகிறார். கோலிக்குத் தன்மீதே நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. பௌலர்களை ‘initimidate’ செய்வதில் கோலிக்கு நிகர் யாருமே இல்லை என்றிருந்தது. ஆனால், இன்று இளம் ஸ்பின்னர்கள்கூட இவரை பயமுறுத்துகிறார்கள். கேப்டன்சியிலும் அந்த அச்சம் தொற்றிக்கொண்டிருக்கிறது.

இந்திய கேப்டன்களில் இதுவரை யாரும் சந்திக்காத அளவு விமர்சனங்களை கோலி சந்தித்திருக்கிறார் என்பது உண்மை. ஆனால், அதற்காக அவர் உடைந்திருக்கக்கூடாது. எந்த சாம்பியன் அணியும் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது. அன்றைய வெஸ்ட் இண்டீஸ், பழைய ஆஸ்திரேலிய அணிகளிடம் ஒரு கர்வம் இருக்கும். விமர்சனங்களுக்கோ, தோல்விகளுக்கோ அவர்கள் அஞ்சியது இல்லை. அதனால்தான் அவர்களால் ஒரு தசாப்தத்துக்கும் மேல் கோலோச்ச முடிந்தது.

இன்று இத்தனை உலகத்தர வீரர்கள் இருந்தும், பல தரமான வீரர்களுக்கு இடம் கிடைக்காத அளவுக்கு மாபெரும் படையே இருந்தும், தன்னிகரில்லாத கிரிக்கெட் போர்டாக இருந்தும் இந்தியாவால் இன்னும் அவர்களைப் போல் ஆதிக்கம் செலுத்தவோ, கோப்பைகள் வெல்லவோ முடியாததற்குக் காரணம் இந்த பயம்தான்.

இந்த இரண்டு ஆண்டுகளில் பி.ஆர் ஏரியாவில் இந்தியா அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. ‘நியூசிலாந்தைப் போல் நாங்களும் நல்லவர்கள்’ என்று நிறுவப் பார்க்கிறார்கள். ஒன்றரை வருடம் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கும்போது மட்டும் ‘Black Lives Matter’ விஷயத்துக்குக் குரல் கொடுக்கிறார்கள். மிகவும் அக்ரஸிவான கிரிக்கெட்டர் என்று அறியப்பட்ட கேப்டன் விராட் கோலி ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விருது பெறும் அளவுக்கு மாறிவிட்டார். பி.ஆர் விஷயத்தில் அக்கறை செலுத்துபவர்கள் விமர்சனங்களுக்கு பயப்படுவது இயல்புதானே. பிறகு எப்படி தைரியமான கிரிக்கெட் ஆட முடியும்!

ஏன் சறுக்கியது இந்தியா?

இங்கிலாந்து ஏன் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகளைக் குவிக்கிறது? “ஜோ ரூட் எங்கள் டி-20 செட் அப்பிற்கு செட் ஆகமாட்டார்” என்று வெளிப்படையாகச் சொல்லக்கூடிய ஒரு கேப்டன் அந்த அணியில் இருக்கிறார். ரூட் போன்ற ஒரு உலகத் தர வீரரை ஒதுக்கிவைக்கவும், அதற்கு நேர்மையான காரணம் சொல்லவும் மோர்கன் தயங்கவில்லை. அதனால்தான், அவர் கோப்பைகள் வெல்கிறார்.

புதிய பயிற்சியாளராக வரும் ராகுல் டிராவிட் தன் அனுபவத்தோடு சேர்ந்து பப்ளிசிட்டிக்குத் தேவையான நற்பெயரையும் தன்னோடு கொண்டுவருகிறார். அதனால், இனியேனும் விமர்சனங்கள் பற்றி அஞ்சாமல் இந்த அணி செயல்படவேண்டும். கோலி, இன்னும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கிறார். அதில் கோப்பை வெல்ல அவர் தைரியமாக விமர்சனங்களை எதிர்கொள்ளத் தொடங்கவேண்டும்!