
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிதான் ஆச்சர்யம் தந்திருக்கும்
“நல்லவங்க வாழ்வாங்க… ஆனா, கொஞ்சம் லேட் ஆகும், அவ்ளோதான்!’’ என்கிற ரஜினியின் புகழ்பெற்ற வசனம் நியூசிலாந்து அணிக்கும், அதன் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் பக்காவாகப் பொருந்தும்.
மார்ட்டின் க்ரோவ் காலத்துக் கனவு இது. ஸ்டீஃபன் ஃபிளம்மிங், டேனியல் வெட்டோரி, பிரண்டன் மெக்கல்லம் என வெவ்வேறு காலகட்டங்களில் பல கேப்டன்கள் முட்டி மோதி முயன்று பார்த்தும் முடியாதது கேன் வில்லியம்சன் மூலமாக நிறைவேறியிருக்கிறது.
2019 ஒருநாள் உலகக்கோப்பையை கிட்டத்தட்ட முத்தமிட்டுவிட்டார் கேன். ஆனால், ஆட்டம் டையாகி, சூப்பர் ஓவரும் டையாகி, இறுதியில் ‘அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள்’ என்று சொல்லி இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைக் கொடுத்தது ஐசிசி. இது உண்மையில் நியூசிலாந்திடமிருந்து பறிக்கப்பட்ட வெற்றி என்பது உலகுக்கே தெரியும்.
எந்த இங்கிலாந்தில் உலகக்கோப்பையைக் குழப்பக் கணக்குகளால் தவறவிட்டாரோ, அதே இங்கிலாந்தில் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று காட்டியிருக்கிறார் கேன் வில்லியம்சன். அதுவும் இந்தியாவைத் தோற்கடித்து!

கிரிக்கெட்டில் 1970-களை வெஸ்ட் இண்டீஸின் சகாப்தம் (Era) என்பார்கள். 90-களில் அந்த இடத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வென்று அந்த இடத்தை இந்தியா பிடித்தது. இந்தியாவின் இடத்துக்கு இப்போது நியூசிலாந்து வந்துவிட்டது என்பதற்கான அடையாளம்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி!
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிதான் ஆச்சர்யம் தந்திருக்கும். 100 சதவிகிதம் தகுதியான நியூசிலாந்து அணி கோப்பையை வென்று, கோலி - ரவி சாஸ்திரி கூட்டணியில் செயல்படும் இந்திய அணியில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலி யாவில் வைத்தே வீழ்த்திவிட்டோம், இங்கிலாந்தை இந்தியாவில் மண்ணைக் கவ்வ வைத்துவிட்டோம் எனப் பெருமை பேசியே கோப்பையைக் கோட்டை விட்டுவிட்டது இந்தியா. இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை எப்படி, நியூசிலாந்தின் பலம் என்ன, இந்திய அணிக்கான சரியான ப்ளேயிங் லெவன் எது என எதைப் பற்றியும் யோசிக்காமல், கொஞ்சமும் திட்டமிடல் இல்லாமல் இங்கிலாந்தில் போய் இறங்கியதில் தொடங்கியது இந்தியாவின் வீழ்ச்சி.
டி20, ஒருநாள், டெஸ்ட் என்கிற இந்த மூன்று ஃபார்மேட்களில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதுதான் மிகவும் சவாலானது. அனுபவமும் நிதானமுமே டெஸ்ட்டில் கைகொடுக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது 2019-ல் தொடங்கியது. 60க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்து, புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும் நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்கப்போகிறது என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். ஆனால், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஏற்றபடி இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஒரு நிலையான அணியை உருவாக்கவே இல்லை.

ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும்தான் இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். ரோஹித் ஷர்மா டெஸ்ட் பேட்ஸ்மேன் கிடையாது. சமீபத்தில்தான் அவருக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. இந்திய மைதானங்களில் சிறப்பாக விளையாடி யிருக்கிறாரே தவிர, இங்கிலாந்தில் பெரிய அனுபவம் கிடையாது. ஷுப்மான் கில்லின் ஒட்டுமொத்த சர்வதேச அனுபவமே 7 டெஸ்ட் போட்டிகள்தான். நியூசிலாந்துடனான இறுதிப்போட்டிதான் அவருக்கு இங்கிலாந்தில் முதல் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்தான் மிக முக்கியமானது. இரண்டு ஓப்பனர்களும் சேர்ந்து இரண்டு செஷன்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடி 75 - 100 ரன்கள் சேர்க்கும்போதுதான் அணிக்கு நல்ல அடித்தளம் அமையும். இவ்வளவு முக்கியமான ஓப்பனிங் ஸ்லாட்டிலேயே தவறு செய்தது இந்திய அணி.
அடுத்தது மிடில் ஆர்டர். செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பன்ட். புஜாரா ஃபார்மிலேயே இல்லை. அவர் ஒரு சதம் அடித்து 18 இன்னிங்ஸ்கள் ஆகின்றன. கேப்டன் விராட் கோலிக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியபோது 2019-ல் வங்கதேசத்துக்கு எதிராக அடித்ததுதான் அவரது கடைசி சதம். ரஹானே நிலையில்லாத ஒரு பேட்ஸ்மேன். எப்போதாவது நினைத்தால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்கிற ரகம்.
கடைசியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். பேட்ஸ்மேன் என்பதைத் தாண்டி அவர் ஒரு விக்கெட் கீப்பர். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பரின் இடம் மிகவும் முக்கியமானது. நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் வேட்லிங்கின் அனுபவமும், அவரது திறமையான கீப்பிங்கும் நியூசிலாந்துக்குக் கைகொடுத்தது. ஆனால், இந்தப் பக்கம் விக்கெட் கீப்பங்கில்கூடத் திணறினார் ரிஷப் பன்ட்.
நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இருந்த மிக முக்கியமான வித்தியாசம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். காயம் காரணமாக அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இன்னொரு ஆல்ரவுண்டரை இந்தியா கண்டெடுக்காததன் பலனைத்தான் இங்கிலாந்தில் அனுபவித்தது. நியூசிலாந்தில் காலின் டிகிரந்தோம் என ஒரு ஆல்ரவுண்டர் இருக்க, நாம் அங்கும் ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜடேஜாவைக் கொண்டுபோய் நிறுத்தினோம்.
பெளலிங்தான் இந்தியாவின் பலம் என்கிற நிலையில் பும்ரா சொதப்ப, ஷமி மற்றும் இஷாந்த்தின் பந்துகளும் பெரிதாக ஸ்விங் ஆக மறுக்க, பேட்டிங் - பெளலிங் என இரண்டுமே கைவிட்டுவிட்டன.
இதையெல்லாம் மீறி இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது கேப்டன்ஸி. கோலி மிகத் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தலைமைப் பொறுப்புக்கானபக்குவமும், போராடும் குணமும் கோலிக்கு இல்லை என்கிற விமர்சனத்திற்கு வலு சேர்ப்பது போல அமைந்துவிட்டது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. கண்டிஷன்களைப் பற்றிக் கவலைப்படாமல் ப்ளேயிங் லெவனை செலக்ட் செய்தது, முதல் நாள் மழை பெய்து ப்ளேயிங் லெவனை மாற்றவேண்டிய சூழல் இருந்தும் மாற்றாமல் அதே ப்ளேயிங் லெவனோடு ஆட்டத்தைத் தொடங்கியது, தவறான பெளலிங் ரொட்டேஷன், மோசமான ஃபீல்டிங் செட்அப் என கோலியின் தவறுகள் அதிகம். அதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பங்கும் அதிகம் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சரியான நேரம் இது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் டி20 உலகக்கோப்பைப் போட்டிகள், அவற்றைத் தொடர்ந்து 2023-ல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் என அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான ஐசிசி கோப்பைகள் வரிசைகட்டி இருக்கின்றன. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்ல முடியாமல் திணறும் இந்தியா இப்போதே அடுத்த இரண்டு ஆண்டுக்கான செயல்திட்டத்தோடு களமிறங்க வேண்டும். அதில் முக்கியமானது கேப்டன்சி மாற்றம்.
கோலியின் சுமையைக் குறைத்து அவரை கேப்டன்ஸியிலிருந்து விலக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்த வைக்கலாம். டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டன், ஒருநாள்- டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என இரண்டு கேப்டன்களோடு தனித்தனி வியூகங்கள் அமைத்துப் பயணித்தால் மட்டுமே கோப்பைகள் சொந்தமாகும்!