பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

வேகம்... விவேகம்... வெற்றிக்கூட்டணி!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

அந்தத் தலைமுறைகள் காணாத மாபெரும் அதிசயத்தைக் கண்டுகொண்டிருக்கிறோம் நாம்.

‘அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கலை’- ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களின் அடுத்த தலைமுறையிடம் சொல்லும் வார்த்தைகள் இவை. அதுவும் விளையாட்டுப் பிரியர்கள் எல்லோருமே தங்கள் வாரிசுகளிடம் இப்படிப் பலமுறை சொல்லியிருப்பார்கள். தாங்கள் பார்த்ததுபோல் ஒரு விளையாட்டு வீரனை அடுத்த தலைமுறை பார்க்காது என்று ஆணித்தரமாக நம்புவார்கள். அந்த நம்பிக்கைதானே அந்த வீரனின் வெற்றி! ஒரு ரிச்சர்ட்ஸை, ஒரு மரடோனாவை, ஒரு போரிஸ் பெக்கரை இனி பார்த்திட முடியாது என்று கேள்விப்பட்டவர்கள் சச்சினை, மெஸ்ஸியை, ஃபெடரரைக் கடவுளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கு எதுவும் கிடைத்திடாது என்று நினைக்கும்போது, அவர்கள் அனைத்தையும் இரட்டிப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். கவாஸ்கருக்குப் பின் சச்சின், அதன்பின் கோலி என இந்திய கிரிக்கெட் கொண்டாடிய நாயகர்களுக்குச் சரியான சப்ஸ்டிட்யூட் வீரர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் வந்துகொண்டுதானிருக்கிறார்கள். கோலி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே, அடுத்த ரன் மெஷினை இந்தியா கண்டுகொண்டுவிடும்.

ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்
ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்

ஆனால், அதில் சந்தோஷப் படுவதற்குப் பெரிதாக என்ன இருக்கிறது? இல்லாத ஒரு விஷயம் கிடைப்பதுதானே முக்கியம். முந்தைய தலைமுறைகள் தவமிருந்த ஒரு விஷயம், அவர்கள் கனவிலும் நினைத்திடாத ஒரு விஷயம் நம் கண் முன் அரங்கேறுவதுதானே ஆனந்தம். நம் தாத்தாக்கள் எத்தனை பேர் வெஸ்ட் இண்டீஸின் மிரட்டல் வேகபந்துவீச்சுக் கூட்டணியைச் சிலாகித்திருப்பார்கள்! நம் அப்பாக்கள் எத்தனை பேர் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் நிகழ்த்தும் ஸ்விங் ஜாலத்தைப் பற்றிப் பேசியிருப்பார்கள்! எத்தனை முறை இந்தியாவில் அப்படியொரு பௌலிங் யூனிட்டைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருப் பார்கள்!

அந்தத் தலைமுறைகள் காணாத மாபெரும் அதிசயத்தைக் கண்டுகொண்டிருக்கிறோம் நாம். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் விக்கெட் வேட்டை நடத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். முந்தைய தலைமுறை பார்த்ததையே பார்ப்பவர்கள் அல்ல அதிர்ஷ்ட சாலிகள். அவர்கள் காணாத வொன்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம்தான் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள். இந்தியா முதல்முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவையோ வங்கதேசத்தையோ சுழல் பந்துவீச்சாளர்கள் புரட்டியெடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், இச்சாதனையை நிகழ்த்தக் காரணமாக இருப்பவர்கள் நம் வேகப்பந்துவீச்சாளர்கள். அதுவும் உலகத்தின் பார்வை பும்ரா மீதிருக்க, அவரில்லாமலேயே இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இந்திய பேஸ் அட்டாக்!

புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்
புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்

பும்ரா, புவி, இஷாந்த், ஷமி, உமேஷ்… உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சுக் கூட்டணியின் வரிசையில் இந்தப் பெயர்களும் இப்போது இடம்பெற்றிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் என இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த களங்களிலெல்லாம் வாணவேடிக்கை காட்டியிருக்கின்றன இந்த வேகப் புயல்கள். அதையெல்லாம் தாண்டி, சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த இந்திய ஆடுகளங்களிலும் அட்டகாசமான பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தியுள்ளனர். உலக டெஸ்ட் தொடர் நடக்கவிருக்கும் இச்சூழலில், விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கான அடுத்த போட்டி நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை எட்டாக் கனியாக மற்ற அணிகள் பார்ப்பதற்கு இந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நம் பந்துவீச்சாளர்கள் வீழ்த்திய 38 விக்கெட்டுகளில் 33 விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியவை! கொல்கத்தா டெஸ்ட்டில் வீழ்த்தப்பட்ட 19 விக்கெட்டுகளுமே இஷாந்த் அண்ட் கோ சாதித்தவை!

பவுன்சர், யார்க்கர், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் போன்ற கிளாசிக் டெக்னிக்குகளோடு நக்கில் பால், லெக் கட்டர் போன்ற மாடர்ன் கிரிக்கெட்டின் அஸ்திரங்களையும் கலந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது இந்தக் கூட்டணி. எந்த மைதானத்திலும் தங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்து ஃபார்மேட்களிலும் மேட்ச் வின்னர்களாக ஜொலிக்க முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். தங்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து அதற்கேற்ப யுக்திகள் அமைத்துச் செயல்படுகிறார்கள். ஆடுகளத்தின் தன்மை, பந்தின் தன்மை, பேட்ஸ்மேனின் ஃபார்ம் மட்டுமல்லாமல், தட்பவெட்பநிலை, காற்று போன்ற விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே முழுமையான வீரர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் நம் பந்துவீச்சாளர்கள்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய ரசிகர்களுக்குக் கேலிப் பொருள்களாக மட்டுமே இருந்த இஷாந்தும் உமேஷும் இப்போது மேட்ச் வின்னர்கள் ஆகியிருப்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வெற்றி. இதுவரை இந்திய கிரிக்கெட் கண்டிராத ஒரு பந்துவீச்சளாராக பும்ரா உருவெடுத்த அதே நேரத்தில், சீனியர் பந்துவீச்சாளர்களும் எழுச்சி கண்டிருப்பது ஒரு மாபெரும் மாற்றத்துக்குக் காரணமாகியிருக்கிறது.

கடந்த வாரம் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள், மவுன்ட் மாங்குனி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தன. நியூசிலாந்து மிடில் ஆர்டரை வெளியேற்ற முடியாமல் இங்கிலாந்து பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருக்க, ஒரு இங்கிலாந்து ரசிகர் இப்படி கமென்ட் செய்திருந்தார் : “ஆடுகளத்தைக் குறைசொல்லி எந்தப் பயனும் இல்லை. இதே ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அல்லது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக 20 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி மொத்த உலகத்தின் மதிப்பையும் நம் வேகக் கூட்டணி சம்பாதித்திருப்பது என்பது நம் முந்தைய தலைமுறைகள் எதிர்பார்க்காத ஒன்று!

முன்பெல்லாம் ஜாகீர் கானுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான். வேகப்பந்துவீச்சே இல்லாததுபோல்தான் தோன்றும். ஒரு தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பந்துவீச்சாளர் மாறிக்கொண்டே இருப்பார். ஆனால் இப்போது அப்படி எந்த பயமும் இல்லை. யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், அது அணிக்குச் சிக்கல் அளிக்காத வகையில் இன்னொருவர் அந்த இடத்தைக் கச்சிதமாக நிரப்பிக்கொண்டிருக்கிறார். புவிக்குக் காயமா, ஷமி வந்து யார்க்கர்களால் மிரட்டுகிறார். பும்ராவுக்குக் காயமென்றால், அவுட் ஸ்விங்கர்களால் அட்டகாசம் செய்கிறார் உமேஷ். கால்பந்து அணிகளைப்போல், ‘ரொட்டேஷன்’ செய்யுமளவிற்கு பலமாகியிருக்கிறது இந்தியாவின் வேகப்பந்துவீச்சு.

இவர்களின் எழுச்சி இதோடு நிற்காமல், நவ்தீப் சைனி, தீபக் சஹார் என அடுத்த தலைமுறைக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளும் பேட்டையே சுழற்றிக்கொண்டிருந்த இந்தியச் சிறுவர்கள் இப்போது ஒவ்வொரு பௌலரையும் பிரதி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ரோல் மாடல்கள் ஆகியிருக்கிறார்கள்! இதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் முந்தைய தலைமுறைகளுக்குக் கனவிலும் கிடைக்கவில்லை!