சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வீரர்களா... போர்டா... ரசிகர்களா... தோல்விக்குக் காரணம் யார்?

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

இந்திய அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை.

மீண்டும் ஓர் அவமானகரமான தோல்வியோடு டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

இந்த முறை மிஸ் செய்திருப்பது மகளிர் அணி. இதன்மூலம் ஐசிசி-யின் நாக் அவுட் போட்டிகளுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்குமான பந்தம் நீடிக்கிறது. ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையைக் கையில் ஏந்தியிருக்கிறது ஆஸ்திரேலியா. இந்தியாவின் தோல்விக்கும், ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கும் கிரிக்கெட்டைத் தாண்டிப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன எனப் பார்ப்போம்.

‘`இது போதும் எங்களுக்கு’’ ஆட்டிட்யூட்!

இந்த உலகக்கோப்பை முழுக்கவே “இதுபோதும் எங்களுக்கு’’ என்கிற மனநிலையில் இந்திய அணி விளையாடியதுதான் இறுதிப்போட்டியின் மிகப்பெரிய தோல்விக்கான முதல் காரணம். உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு டி20 போட்டிகளில் விளையாடியது இந்திய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்தத் தொடரிலேயே இந்தியாவின் பேட்டிங் சுமார் என்பது தெரிந்துவிட்டது.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

ஷெஃபாலி சில சிக்ஸர்கள் அடிக்க, ஸ்மிருதி மட்டுமே கொஞ்சம் பெரிய இன்னிங்ஸ் ஆடினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஒரு போட்டியில் மட்டும் 40 ரன்களைத் தாண்டியிருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆவரேஜ். அப்போதே இந்தியாவின் பயிற்சியாளரும் கேப்டனும் உஷார் ஆகியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பெரிதாகக் கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை. அந்த அலட்சியம் உலகக்கோப்பையில் பளிச்செனத் தெரிந்தது.

ஃபார்மில் இருந்த ஸ்மிருதி ஃபார்ம் அவுட் ஆக, ஷெஃபாலி மட்டுமே இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம். ஷெஃபாலி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் இந்திய அணிக்குள் வந்தவர், 16 வயதேயான ஷெஃபாலி. உலகக்கோப்பைக்கு முன்புவரை 15 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர். ஆனால், அவர்மேல்தான் முழு பாரத்தையும் இறக்கியிருந்தது இந்தியாவின் டாப் ஆர்டர். இதனால் ஷெஃபாலியை மட்டும் வீழ்த்தினால்போதும், இந்தியாவின் பேட்டிங்கைக் குலைத்துவிடலாம் என்ற ஒற்றை டார்கெட்டுடன் வியூகம் அமைத்தது ஆஸ்திரேலியா. முதல் ஓவரிலேயே ஷெஃபாலியைத் தூக்க, டாப் ஆர்டர் நிலைகுலைந்தது. பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகள் இழந்து தோல்வியை நோக்கிப் போனது இந்தியா.

வியூகம் இல்லா பௌலிங்!

பேட்ஸ்மேன்கள் தடவித் தடவி 140 ரன்களுக்குள் அடித்தால்போதும் பெளலிங்கில் சமாளித்துவிடலாம் என்கிற நினைப்போடுதான் உலகக்கோப்பைக்குள் வந்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத். அதற்கேற்றது போல லீக் போட்டிகளில் பூனம் யாதவ், ராதா யாதவ், தீப்தி ஷர்மா என ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுக்க, எளிதில் வெற்றிகளைப் பெற்றது இந்தியா. அதனால் ஸ்பின்னர்களைச் சமாளித் தால்போதும் என ஷார்ட்கட்டில் காரியத்தை முடித்தார்கள் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் ஹீலியும் மூனியும்.

பெண்கள் டி-20 உலகக் கோப்பை
பெண்கள் டி-20 உலகக் கோப்பை

இந்திய அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஸ்பின்னர்களின் கான்ஃபிடன்ஸை உடைத்துவிட்டால்போதும் என முடிவெடுத்து தீப்தி ஷர்மாவின் முதல் ஓவரிலேயே பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் அலீஸா ஹீலி. பூனம் யாதவ், ராதா யாதவ் என யாருடைய பெளலிங் குக்கும் அங்கே மதிப் பில்லை. ஹீலிக்கும் மூனிக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் எந்த டெலிவரியும் பூனமின் விரல்களுக்குள் இருந்து வெளிப்படவில்லை.

பேட்டிங் மோசம்... பெளலிங்கிலும் வேரியேஷன் இல்லாமல்போனதோடு ஃபீல்டிங்கிலும் கோட்டைவிட்டதுதான் இன்னும் சோகம். இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் இருவரும் தலா 75, 78 ரன்கள் அடித்திருந்தனர். இவர்கள் சிங்கிள் டிஜிட்டில் இருக்கும்போதே இருவரின் கேட்சுகளையும் கோட்டை விட்டனர் இந்தியாவின் ஃபீல்டர்கள். போதாததுக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபீல்டிங் செட் அப்பிலும் சொதப்ப, பவுண்டரிகள் தாறுமாறாக எகிற ஆரம்பித்தன. சிங்கிள் எல்லாம் டபுள் போகப்போக நம்பிக்கையை இழந்து, லைன் அண்ட் லென்த்தை மறந்து ஸ்பின்னர்கள் ஃபுல் டாஸ்களாகப் பந்துகளைப் போட சிக்ஸர்கள் நிற்கவில்லை.

ஏன் இந்தத் தோல்வி?!

ஆஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி தயார் ஆவதற்கு ஒரு வார இடைவெளி இருந்தது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தவேண்டும் என்றால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவேண்டும், பேட்டிங் சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் பேட்டிங் ஆர்டரில் ஏதும் மாற்றங்கள் செய்யலாமா, பேட்டிங் லைன்அப்பை இன்னும் பலப்படுத்தலாமா என எந்தச் சிந்தனையும் இல்லாமல் அதே லைன் அப்போடு இந்தியா களமிறங்கியது சாதாரண கிரிக்கெட் ரசிகர்களுக்கே அதிர்ச்சி. ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு கட்டத்தில்கூட இந்தியாவின் பெளலிங்கோ பேட்டிங்கோ சவால் விடவில்லை.

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி எப்படி?!

ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வெல்வது சாதாரணமாக நடந்து விட்டதல்ல. 2007-ல் இருந்தே மகளிருக்கான டி20 போட்டிகளை நடத்திவருகிறது ஆஸ்திரேலியா. 2015 முதல் சர்வதேச வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் பிக்பேஷ் டி20 லீக் போட்டிகளை நடத்திவருகிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவு என எல்லா நாட்டு வீராங்கனைகளும் ஆஸ்திரேலியாவில் விளையாடிவருகின்றனர்.

மிகப்பெரிய பயிற்சியையும் நம்பிக்கையையும் இந்த பிக்பேஷ் லீக் போட்டிகள் கொடுக்கின்றன. அலீஸா ஹீலி, பெத் மூனியெல்லாம் பிக்பேஷ் லீகிலேயே பல சாதனைகள் படைத்தவர்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் ரசிகர்களும் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகராகப் பெண்கள் கிரிக்கெட்டையும் மதிக்கிறார்கள். அதனால்தான் ஆஸ்திரேலியா தொடர்ந்து உலகக்கோப்பைகளை வெல்கிறது.

ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியில்லை. உலகக்கோப்பைப் போட்டிகள் நடக்கும்போதுதான் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அணி இருப்பதே நம் கவனத்துக்கு வரும். பிக்பேஷ் லீக் போன்று மகளிர் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தாமல் இருக்க பிசிசிஐ சொல்லும் காரணம் ரசிகர்களிடையே பெரிய ஆர்வம் இல்லை என்பதுதான். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் முதலில் ரசிகர்களிடையே ஆர்வம் இல்லையென்றாலும் போட்டிகளை நடத்தியது. மகளிர் கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, கூட்டத்தை ஸ்டேடியத்துக்குள் வரவைத்தது. உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டான பிசிசிஐக்கு இது செய்ய முடியாத காரியம் அல்ல. அவர்களுக்குப் பணமும் தடையாக இருக்கமுடியாது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் மனம்தான் தடையாக இருக்கிறது போலும்.

ஆண்கள் அணிக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை, அதே பயிற்சிகளை, அதே வாய்ப்புகளை பெண்கள் அணிக்கும் கொடுத்தால் இந்திய மகளிர் அணி 5 முறையல்ல 50 முறைகூட உலகக்கோப்பையை வெல்லும்.