
கிரிக்கெட்டின் எல்லா ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டி அடித்தவர் யுவராஜ். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என்றதும் நினைவுக்கு வரும் இந்தப் பஞ்சாப் சிங்கத்துக்கும் எண்களின் மீது தீவிர நம்பிக்கை உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். கிரிக்கெட் வீரர்களைப் பலர் கடவுளாகவே வணங்குகிறார்கள். அப்படிப் புகழ்பெற்ற கிரிக்கெட் கடவுள்கள் சிலர் பின்பற்றும் விசித்திர நம்பிக்கைகள் இங்கே...

சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டில் சச்சின் செய்த சாதனைகள் யாராலும் முறியடிக்க முடியாதவை. அவரது ரன்களை யார் ஈடு செய்தாலும் சுமார் 24 ஆண்டுகளாக ரசிகர்களுக்கு அவர் கொடுத்த மகிழ் தருணங்களை யாராலும் ஈடு செய்யமுடியாது. அப்படிப்பட்ட லிட்டில் மாஸ்டர் எப்போது விளையாடக் கிளம்பினாலும் சென்டிமென்ட்டாக தனது இடது கால் பாதுகாப்புப் பட்டையையே (Pad) முதலில் அணிவாராம். ஒருவேளை மாற்றி அணிந்தால் அணிக்கு அபசகுனம் என்று நினைப்பாரோ என்னவோ?!

வீரேந்திர சேவாக்
சிங்கிள்னா என்ன... எனக்கு சிக்ஸர் மட்டும்தான் அடிக்கத் தெரியும் என டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆட்ட முறைக்கே ஆட்டம் காண்பித்தவர் சேவாக். வீரேந்திர என்கிற தன் பெயருக்கேற்ப வீர அடையாளமாக இருந்தவருக்கு ஜெர்சி அடையாள எண்கள்மீது பயம் கலந்த நம்பிக்கை இருந்தது. பல எண்கள் ராசியில்லாமல் போக, இறுதியில் எந்த எண்ணும் பொறிக்காத உடையிலேயே விளையாடியிருக்கிறார். ‘நம்பர்ல ஒன்னும் இல்ல, என்னைய நம்புங்க’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

சௌரவ் கங்குலி
‘தி ரியல் போர்கண்ட சிங்கம்’ என்று கங்குலியை சொன்னால் மிகையாகாது. ஒரு அணிக்குள் நுழைந்து, தலைவனாக உயர்ந்து, வெற்றிக்காகப் போராடும் போராளிகளை உருவாக்கி நம்பர் 1 அணியாக இந்தியா வலம் வர முழுமுதற் காரணமானவர்! இந்த வங்காளப் புலியின் விரல்களில் ஏராளமான நம்பிக்கை சார்ந்த மோதிரங்கள் இருந்ததுடன் விளையாடும்போது தன் குருவின் புகைப்படத்தையும் பாக்கெட்டில் வைத்திருப்பாராம். எல்லாப் புகழும் குருவுக்கே!

ஜாகிர் கான்
இந்திய கிரிக்கெட் அணியைத் தனது பந்துவீச்சின் மூலம் அரணாகக் காத்து நின்றவர் ஜாகிர்கான். சச்சினுக்குப் பிறகு 90ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச கிரிக்கெட்டர் இந்த கிங் கான். இடதுகை பேட்ஸ்மேன்களைப் பார்த்தால் ‘ஜாலி’ கான் ஆகிவிடும் ஜாகிர்கானுக்குப் பந்துவீசும் போது தன்னுடன் ஒரு மஞ்சள் துணி இருக்கவேண்டும். கடுமையாக உழைத்து 600 சர்வதேச விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இவரது பெருமையை மஞ்சள் துணியும் பங்குபோட்டுக்கொள்கிறது.

அனில் கும்ப்ளே
1999-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் ஒரே நபராகக் கைப்பற்றி சம்பவம் செய்தவர் கும்ப்ளே. ‘ஜம்போ’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் ஒவ்வொரு முறையும் பந்துவீச வரும்போது தனது தொப்பியையும் ஸ்வெட்டரையும் நடுவரிடம் தருவதற்குப் பதிலாக சச்சினிடம் கொடுத்து வருவதை ஒரு வழக்கமாக வைத்திருந்துள்ளார். நல்ல ராசியான கை என கும்ப்ளே நம்பியதில் தப்பேயில்லை.

யுவராஜ் சிங்
கிரிக்கெட்டின் எல்லா ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டி அடித்தவர் யுவராஜ். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என்றதும் நினைவுக்கு வரும் இந்தப் பஞ்சாப் சிங்கத்துக்கும் எண்களின் மீது தீவிர நம்பிக்கை உள்ளது. எண் 12-ஐ ஜெர்சிக்குத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் பிறந்த நேரம் 12 மணி, 12ஆம் மாதம் (டிசம்பர்), 12ஆம் தேதி ஆகியவை இருக்கின்றன. இதை ‘Birthdate syndrome’ எனச் சொல்கிறார்கள். கூடுதலாக ஒரு கொசுறு செய்தி, சண்டிகரில் உள்ள செக்டார் 12இல் சிறுவயதில் வசித்துள்ளார்.