Published:Updated:

`தோனி அன்று செய்த சிறிய விஷயத்தால், வெற்றி எளிதானது!’ - உத்தப்பா பகிரும் Bowl-Out சீக்ரெட்

கம்பீர்-தோனி - உத்தப்பா
கம்பீர்-தோனி - உத்தப்பா ( ICC/Twitter )

'பெளல் அவுட்' என அறிவிக்கப்பட்டதும், நான் நேரடியாக தோனியிடம் சென்று, `நான் பந்துவீசப் போகிறேன்’ என்றேன். அவரும் நிச்சயமாக நீ பந்து வீசுவாய் என்றார்.

டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் முதலாவது உலகக் கோப்பை தொடர் 2007 -ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை இந்திய அணியில் கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நிறைய நினைவுகள் இருக்கும். தோனி தலைமையில் முதல் முறையாக உலகக் கோப்பை தொடர். முழுக்க முழுக்க இளம் அணி. யுவராஜின் 6 சிக்ஸர்கள், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பு ஆட்டங்கள் என அழகான நினைவுகள் பல.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

இந்த அழகான நினைவின் பட்டியலில், பெளல்-அவுட் (Bowl-Out) முறையும் மறக்க முடியாது. கால்பந்து போட்டியில் பெனால்டி சூட்-அவுட் மாதிரி டி20-யில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த முறை. இரு அணிகளின் ஸ்கோர் டை ஆகும் போதும் இந்த முறை பயன்படுத்தப்படும். அதாவது, பேட்ஸ்மேன் இல்லாமல் பந்து வீச்சாளர்கள் ஸ்டம்ப்பை குறிபார்த்து வீச வேண்டும். கிடைக்கும் 5 வாய்ப்புகளில் எந்த அணி வீரர்கள் அதிகமாகத் தாக்குகிறார்களோ அதனடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். மிகக் குறைந்த காலமே இந்த ரூல்ஸ் அமலில் இருந்தது. 2008 -ம் ஆண்டு `சூப்பர் ஓவர்’ அமலுக்கு வந்தபின்னர், பெளல்-அவுட் முறை ரத்து செய்யப்பட்டது.

மிக மிகக் குறைவான அணிகளுக்கு மட்டுமே இந்த முறையில் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இந்த வாய்ப்பு உலகக் கோப்பை தொடரிலே கிடைத்தது. முதலில் ஆடிய இந்தியா 141 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியும் அதே ரன்னில் ஆட்டத்தை முடிக்க பெளல் அவுட் மூலம் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது. அதில் இந்திய அணிக்குக் கிடைத்த முதல் மூன்று வாய்ப்புகளிலும் ஸ்கோர் செய்தது. ஆனால், பாகிஸ்தான் முதல் மூன்று வாய்ப்புகளிலும் கோட்டைவிட்டது. இதனால் இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், எந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இன்று வரையில் தக்கவைக்க அது உதவியது.

உத்தப்பா
உத்தப்பா
KKR/Twitter

பாகிஸ்தான் அணியில் பந்துவீச அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் தயார் நிலையில் இருக்க, இந்திய அணி சார்பில் ஷேவாக், ஹர்பஜன், உத்தப்பா ஆகியோரை அழைத்தார் கேப்டன் தோனி. இது, கைமேல் பலன் கொடுத்தது. இந்த நிலையில், அந்த ஸ்பெஷல் ஆட்டம் குறித்து உத்தப்பா, ராஜஸ்தான் ராயஸ் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் சோதியுடனான கலந்துரையாடலில் பேசினார்.

``பாகிஸ்தானின் பர்ஃபார்மன்ஸை பார்க்கும்போது, அவர்கள் பெளல் அவுட்டுக்கு முறையாகத் தயாராகவில்லை என்பது தெரியும். இந்திய அணியைப் பொறுத்த வரையில் தோனி செய்த சிறிய விஷயம், பெரிய அளவில் பலன் கொடுத்தது. பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்யும் பகுதியில், அதாவது ஸ்டெம்ப்புக்கு நேரே அல்லாமல், சற்று விலகி நிற்பார். ஆனால் தோனியோ, வழக்கமாக இருக்கும் பொஸிஷன் அல்லாமல், ஸ்டம்ப்புக்கு நேரே இருப்பார். மேலும், அவர் நிற்காமல் அமர்ந்திருப்பது போல் ஸ்டம்ப்பின் உயரத்தில் இருப்பார். இது, பந்து வீசும் எங்களுக்கு பணியை எளிதாக்கியது. நாங்கள் பந்தை தோனிக்கு வீசுவதைப் போன்று செய்தோம். அது ஸ்டம்ப்பை தகர்த்தது” என்றார்.

இந்திய அணி
இந்திய அணி
KKR/Twitter

தொடர்ந்து அவர், ``அப்போதைய பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் குறித்தும் குறிப்பிட வேண்டும். பயிற்சியின்போது அவர் எங்களுக்கு பெளல் அவுட் முறைக்கும் தயாராக இருக்கும்படி பயிற்சி அளித்தார். அதனால், பெளல் அவுட் என்றதும் அவருக்கு டென்ஷனே இல்லை. அவர் எப்போதும், அனைத்து ரூல்ஸ்களையும் பின்பற்றி அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பார்.

நாங்கள் பயிற்சி செய்து முடித்த பின்னர், பெளல் அவுட் போட்டி வைப்பார். போட்டி பேட்ஸ்மேன் அணிக்கும் பந்துவீச்சாளர் அணிக்கும் நடக்கும். பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் அணி வெற்றி பெறும். ஷேவாக், ரோகித், நான் ஆகிய மூவரும் அடிக்கடி ஸ்டம்ப்பை சரியாகத் தாக்கினோம். பெளல் அவுட் என அறிவிக்கப்பட்டதும் நான் நேரடியாக தோனியிடம் சென்று, `நான் பந்துவீசப் போகிறேன்’ என்றேன். அவரும் நிச்சயமாக நீ பந்து வீசுவாய் என்றார். அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்தது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு