Published:Updated:

``இது அவர் மைதானம்ங்க... மகி நிச்சயம் வர்றார்..!” - ராஞ்சி மைதானத்துக்கு வரும் தோனி

கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவுகளும் தனிப்பட்ட முறையில் தோனி தான் எடுப்பார். கிரிக்கெட் முடிவுகள்குறித்து அவரைத் தவிர மற்ற யாருக்கும் எதுவும் தெரியாது.

Dhoni
Dhoni

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று ராஞ்சி மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரை ஏற்கெனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இறுதிப் போட்டியை வெல்ல வேண்டும் எனும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. அதேநேரம், இது வெறும் டெஸ்ட் தொடர் மட்டும் கிடையாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். இரண்டு ஆண்டுகள் நடக்கும் இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் முக்கியம். அதனால் இந்திய அணியும் கட்டாயம் வெற்றியைப் பதிவுய்யும் நோக்கில் களமிறங்குகிறது.

Team India
Team India

இவை எல்லாவற்றையும் தாண்டி ராஞ்சி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 4 ஆண்டுகளைக் கடந்துவிட்டது தோனிக்கு. உலகக் கோப்பைக்குப் பின்னர் மைதானத்தில் தோனியை யாரும் பார்க்கவில்லை.

இந்நிலையில், ராஞ்சியில் நடைபெறும் இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டத்தைக் காண தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத் தலைவர் நாஃபிஸ் கான், ``தனிப்பட்ட முறையில் ராஞ்சியில் நடக்கும் போட்டியைக் காண வர வேண்டும் என தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளேன். குடும்பத்தினரோடு கலந்துகொள்ள வேண்டும் என அவரிடம் தெரிவித்தேன். இது, அவரது மைதானம். எப்போது வேண்டுமென்றாலும் அவர் வருவார்” என்றார்.

தோனி
தோனி

இந்நிலையில், டெல்லியில் பி.டி.ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய தோனியின் மேலாளர் திவாகர், ``மகி கட்டாயம் வருவார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவரைக் காணலாம். நாளை (இன்று) காலையில் மும்பையிலிருந்து ராஞ்சி வருகிறார்” என்றார். எனினும் தோனி, குடும்பத்தினருடன் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தனது பண்ணை வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்காக தோனி இந்திய கிரிக்கெட் வீரர்களை அழைப்பார் எனவும் கூறப்படுகிறது.

`கல்லூரி மைதானத்தில் திடீரெனத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்’- ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய ராகுல்! #Video

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பாகப் பேசிய திவாகர், ``கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவுகளும் தனிப்பட்ட முறையில் தோனி தான் எடுப்பார். கிரிக்கெட் முடிவுகள்குறித்து அவரைத் தவிர மற்ற யாருக்கும் எதுவும் தெரியாது. அவர் எப்படி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் என நாம் அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் அவரைக் கணிக்க முடியாது. நாங்களும் அவரிடம் இது ஹொடர்பாகப் பேச மாட்டோம். இதே கேள்விகளை நாங்கள் அவரிடம் கேட்டால், பின் மற்றவர்களுக்கும் நண்பர்களாகிய எங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றார்.

Ranji Stadium
Ranji Stadium

தோனியின் பள்ளிக் கால பயிற்சியாளர்களான மோதி பிரசாத் மற்றும் கேசவ் மகராஜ், ``தோனி 2004 முதல் ஓய்வில்லாமல் விளையாடிவருகிறான். அவருக்கு இந்த ஓய்வு தேவை. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவரைக் கொஞ்சம் தனியாக விடுங்கள். அவர் அளவுக்கு இந்திய அணியில் அனுபவம் யாருக்கும் இல்லை. இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி கட்டாயமாகத் தேவைப்படுவார்” என்றார்.

இந்நிலையில், ராஞ்சியில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 39,000 பேர் அமரக்கூடிய ராஞ்சி மைதானத்தில் 1,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்றுள்ளன. இதன் காரணமாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு 5.000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளது. 10,000 டிக்கெட்டுகளைப் பள்ளி, கல்லூரி மற்றும் க்ளப்புகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

`தோனி ஊரில் காலி இருக்கைகள்..'- ராஞ்சி டெஸ்ட்டுக்கு வந்த சோதனை!

தோனி, போட்டியைக் காணவந்தால் நிச்சயம் மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஊர்களில் இருப்பவர்கள்கூட தோனியை டி.வி-யில் காண ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.