Published:Updated:

"என் ரோல் மாடல் கில்கிறிஸ்ட்... சச்சினுக்குத் தீவிர ரசிகன்..!" - தோனி ஷேரிங்ஸ் #VikatanVintage

தோனி

ஒரு ரகசியமும் இல்லை. ச்சும்மா ஃபேஷனாக இருக்கட்டுமே என்று நினைத்துதான் இந்த ஹேர் ஸ்டைலை வளர்த்தேன்

Published:Updated:

"என் ரோல் மாடல் கில்கிறிஸ்ட்... சச்சினுக்குத் தீவிர ரசிகன்..!" - தோனி ஷேரிங்ஸ் #VikatanVintage

ஒரு ரகசியமும் இல்லை. ச்சும்மா ஃபேஷனாக இருக்கட்டுமே என்று நினைத்துதான் இந்த ஹேர் ஸ்டைலை வளர்த்தேன்

தோனி

- எஸ்.கலீல்ராஜா | படங்கள்: சு.குமரேசன்

சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டல். லேப்டாப்பில் அடுத்த இன்டர் நேஷனல் மேட்ச் பட்டியலைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் தோனி. பக்கவாட்டில் காத்திருக்கிறது லெமன் டீயும், பீட்ஸாவும்! கார்கோ பேன்ட், டி-ஷர்ட் என மப்டியில், அசத்தல் மாடலைப் போல இருக்கிறார் தோனி.

"அதிரடியாக, நிதானமாக என ஒவ்வொரு மேட்சிலும் ஒவ்வொரு விதமாக விளையாடுகிறீர்களே... ஏன்?"

"எதுவுமே நான் முடிவு பண்ணுவது கிடையாது. அது பாகிஸ்தானோ, ஆஸ்திரேலியாவோ... அந்த டீமைப் பற்றி எந்தக் கற்பனையோ பயமோ எனக்குள் வராது. அது ஒரு டீம், அவர்கள் நல்ல ப்ளேயர்கள்... அவ்வளவுதான் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். நான் எத்தனையாவது பேட்ஸ்மேனாக இறங்குகிறேன், அப்போது எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறோம், விக்கெட் என்ன, டார்கெட் என்ன... என அத்தனை விஷயங்களையும் வைத்து மனதுக்குள் ஒரு கால்குலேஷன் போட்டிருப்பார் கேப்டன். அவர் சொல்கிறபடி விளையாட வேண்டும். இதில் நானாக எதுவும் முடிவெடுக்க முடியாது. நாம்தான் முதல் பேட்டிங் என்றால், கொஞ்சம் ஜாலியாக இருக்கும். அதிரடியாக விளையாடலாம்!"

பைக்கில் அதிவேகமாகச் சுற்றுவது ரொம்பப் பிடித்த விஷயம். கிரிக்கெட்டுக்கு வந்தபிறகு 3 சூப்பர் ஃபாஸ்ட் பைக்குகள் வாங்கிவிட்டேன்

"தோனிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள். தோனி யாருடைய ரசிகர்?"

"ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட். அவர் ஒரு நல்ல விக்கெட் கீப்பர். நல்ல பேட்ஸ்மேன். அவர்தான் எனக்கு ரோல் மாடலும்கூட! இந்தியாவைப் பொறுத்தவரை நான் சச்சினின் தீவிர ரசிகன். நான் ரப்பர் பந்தில் விளையாட ஆரம்பித்ததே சச்சினின் விளையாட்டுகளைப் பார்த்துதான். 2004-ம் வருஷம் பங்களாதேஷில் ஒரு டின்னரில் வைத்து, சச்சினைப் பார்த்தேன். அப்போது அவரைப் பார்த்து என்னால் ஒரு வரிகூடப் பேச முடியவில்லை. இப்போது அப்படியில்லை. சச்சினும் நானும் டீம் ப்ளேயர்கள். சீனியாரிட்டி பார்க்காமல் ஜாலியாக இருக்கிறோம். அதைத்தான் சச்சினும் விரும்புகிறார்."

"அடிக்கடி ஃபுட்பால் விளையாடக் கிளம்புகிறீர்களே?"

"என்னுடைய முதல் விளையாட்டே ஃபுட்பால்தான். அதோடு சேர்த்து கிரிக்கெட்டும் விளையாட ஆரம்பித்தேன். ராஞ்சியில் இருக்கிற என்.ஐ.எஸ். ஃபுட்பால் கோச்சிங் ஸ்கூலில் கோல்கீப்பராகச் சேர்ந்தேன். என்னுடைய தடுப்பாட்டம் அத்தனை பேருக்கும் பிடித்துவிட்டது. இந்திய ஃபுட்பால் டீமுக்கு செலெக்ட் ஆகி விடுவேன் என்ற நம்பிக்கையில் இதற்காகவே எனக்குச் சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தார்கள். ஆனால், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பு என்னை அந்தப் பக்கம் திருப்பியது. இப்போது கிரிக்கெட்டிலும் அதே வேலையைத்தான் செய்கிறேன். அங்கே கோல் கீப்பர், இங்கே விக்கெட் கீப்பர். என்ன... பந்துதான் சிறியது."

"தோனி ஹேர் ஸ்டைல் ரகசியம் என்ன?"

தோனி
தோனி

"ஒரு ரகசியமும் இல்லை. ச்சும்மா ஃபேஷனாக இருக்கட்டுமே என்று நினைத்துதான் இந்த ஹேர் ஸ்டைலை வளர்த்தேன். இதற்குப் பிறகுதான் எனக்கு அத்தனை நல்ல விஷயங்களும் நடந்தன. டீமில் ஒரு நல்ல இடம், நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என நான் அடைந்த உயரங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இந்த முடியை நான் வெட்டும்போதெல்லாம் அடுத்து விளையாடும் மேட்ச்சில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதனால், 2007 உலகக் கோப்பை வரை, இந்த முடியை நான் வெட்டப்போவது இல்லை."

"தோனியின் பொழுதுபோக்கு என்ன?"

"எனக்குப் பிடித்தது எல்லாமே வேகம் தான்! பைக்கில் அதிவேகமாகச் சுற்றுவது ரொம்பப் பிடித்த விஷயம். கிரிக்கெட்டுக்கு வந்தபிறகு 3 சூப்பர் ஃபாஸ்ட் பைக்குகள் வாங்கிவிட்டேன். கடைசியாக பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள யமஹா வாங்கியிருக்கிறேன். இப்போது வி.ஐ.பி. ஆகிவிட்டதால் சாதாரண ரோட்டில் சூப்பர் ஃபாஸ்ட்டில் போக முடியவில்லை. அதனால், ராஞ்சி ரோட்டில் மட்டும் ஆசை தீர ஓட்டிப் பார்த்துக்கொள்கிறேன். என்னை மாதிரியான பைக் காதலர், நடிகர் ஜான் ஆபிரஹாம். இந்த விஷயத்தில் அவர்தான் என்னுடைய ரோல் மாடல்!"

- ஆனந்த விகடன்: செப்.17, 2006 இதழில் இருந்து.

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv