Published:Updated:

`இந்தியக் கிரிக்கெட்டில் தோனி அரிதானவர்; ஆனால்...!’ - கங்குலி சொல்லும் லாஜிக்

MS Dhoni ( AP )

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடருக்கு தோனி தேர்வு செய்யப்படாதது எதிர்பார்த்ததுதான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

`இந்தியக் கிரிக்கெட்டில் தோனி அரிதானவர்; ஆனால்...!’ - கங்குலி சொல்லும் லாஜிக்

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடருக்கு தோனி தேர்வு செய்யப்படாதது எதிர்பார்த்ததுதான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
MS Dhoni ( AP )

தென்னாப்பிரிக்க அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. அந்த அணிக்கெதிராக இந்திய 3 டி20 மற்றும் அதே எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹிமாசலப்பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான அணி கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பியிருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்தத் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

Dhoni
Dhoni
Twitter

அதேபோல், உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின்போது ஓய்வுகொடுக்கப்பட்ட தோனி, இந்தத் தொடரிலும் இடம்பெறவில்லை. அதனால், `தோனி ஓய்வுபெறப் போகிறார். அவர் இந்திய அணியில் இனிமேல் இடம்பிடிப்பது கடினம்’ என்றெல்லாம் விவாதங்கள் கிளம்பின. அதேநேரம், இந்திய ராணுவத்தில் கௌரவப் பதவி வகிக்கும் தோனி, ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அவருக்குப் பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், ``தென்னாப்பிரிக்க டி20 தொடரில் தோனி தேர்வு செய்யப்படாதது எதிர்பார்த்ததே; இதில், ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வைத்து நீங்கள் பார்க்க வேண்டும். ரிஷப் பன்டுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம்.

Ganguly
Ganguly
Twitter

பன்டுக்கு மேலும் வாய்ப்பளித்து, அந்த வாய்ப்பை அவர் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதைப் பார்க்க நினைத்திருக்கலாம். அது சரியானதும்கூட. ஏனெனில் தோனி, இளம் வீரராக அணிக்குள் வந்தபோது அதுதான் நடந்தது’’ என்றார்.

தோனி - விராட் கோலி

தோனி விவகாரத்தில் கேப்டன் கோலி கடினமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட கங்குலி, ``இந்தச் சூழலில் தோனியுடனான கருத்து பரிமாற்றம் விராட் கோலிக்கு முக்கியமானது. தோனியிடமிருந்து கோலி என்ன எதிர்பார்க்கிறார் என்பது குறித்து பேசுவது கடினமானது. அதேநேரம், இதுகுறித்து வெளிப்படையாக யாரும் கருத்துத் தெரிவிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

Dhoni - Kholi
Dhoni - Kholi
Twitter

தோனி மற்றும் அணி நிர்வாகத்தினர் இடையே இதுகுறித்து எந்தவிதமான கருத்துப் பரிமாற்றம் இருக்கிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. அதுபோன்ற ஆலோசனைகளிலிருந்து நான் விலகியே இருக்கிறேன்.

ஒவ்வொரு கிரிக்கெட்டருக்கும் அல்லது விளையாட்டு வீரருக்கும் இதுபோன்றதொரு சூழல் வரவே செய்யும். கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, டென்னிஸ் லெஜண்ட் பீட் சாம்ராஸ், கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எனப் பலரும் இந்தச் சூழலை எதிர்கொண்டிருக்கிறார்கள். அதுபோன்றதொரு சூழலை தோனி தற்போது எதிர்கொண்டிருக்கிறார். தோனியிடமிருந்து விராட் கோலியோ அல்லது அணி நிர்வாகமோ என்ன எதிர்பார்க்கிறது எனத் தெரியவில்லை.

இந்திய கிரிக்கெட்டில் அரிதானவர், தோனி
கங்குலி

தோனி மீண்டும் களமிறங்கி விளையாட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தால், அவர் களமிறங்கி விளையாடுவார். அடுத்த கட்டத்துக்குப் போவோம் என அவர்கள் நினைத்தால் அப்படி நடக்கப்போகிறது. என்ன ஆனாலும் இந்த விவகாரத்தில் தேர்வுக் குழுவினர் முக்கியப் பங்காற்றுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை’’ என்றார்.

தோனி - பன்ட் ஒப்பீடு

தோனி - பன்ட் ஒப்பீடு குறித்து பேசிய கங்குலி, `ரிஷப் பன்ட், தோனி கிடையாது. அடுத்த 3-4 ஆண்டுகளில் தோனியாகவும் மாற முடியாது. தோனி இன்றைய `தோனி’ என்ற நிலையை அடைய 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்திய கிரிக்கெட்டில் அரிதானவர் தோனி’’ என்றார்.

Pant - Dhoni
Pant - Dhoni
Twitter

மேலும், ஒருசில போட்டிகளில் பண்ட் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை என்பதால் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஒருசிலர் கருத்துத் தெரிவித்து வருவது தவறானது என்றும் கங்குலி தெரிவித்தார். அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பன்ட் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கங்குலி தெரிவித்தார்.