Published:Updated:

`எங்க ரூமில்தான் தோனி இருக்கிறார்; வந்து ஹலோ சொல்லுங்க!'-செய்தியாளர்களைக் கலாய்த்த கோலி

` பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வானது சிறப்பானது' என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

Dhoni
Dhoni ( BCCI )

தோனியின் ஓய்வு குறித்து 2018-ம் ஆண்டில் இருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது. தோனியும் அப்போது பேட்டிங்கில் பெரியளவில் ஜொலிக்கவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட் வருகையால் தோனி ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்பட்டது. இதற்குத் தோனி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி. இந்த உலகக்கோப்பை தொடரில் தோனி, தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருந்தனர். விஜய் சங்கர் காயம் காரணமாக விலகியதையடுத்து மூன்றாவதாக ரிஷப் பன்ட் அணிக்குள் வரவழைக்கப்பட்டார். தோனியின் இடத்துக்கு ரிஷப் பன்டைக் கொண்டுவருவது பிசிசிஐ-யின் திட்டமாக இருந்தது.

Rishab pant
Rishab pant

உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் மீண்டும் அடிபட்டன. தோனி விரைவில் தனது ஓய்வை அறிவிப்பார் அல்லது ஓய்வு பெறுவதற்கான சூழலுக்குத் தள்ளப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், தோனியோ இரண்டு மாத விடுப்பில் சென்றார். அந்த நேரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்க தொடரில் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தத் தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அப்செட் ஆனார்கள்.

பிசிசிஐ தலைவராக கங்குலி பதவியேற்கவுள்ளார். கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் கங்குலியிடன் கேட்கப்பட்டன. அப்போது, ``இந்திய தேர்வுக்குழுவினரை சந்தித்துப் பேசி தோனியின் நிலை குறித்து தெரிந்துகொள்வேன். பின்னர் தோனியிடம் பேசுவேன்' என்றார். ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோலியிடம், கங்குலி மற்றும் தோனி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது பேசிய கோலி, ``பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வானது சிறப்பானது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இதுவரை நான் சந்தித்துப் பேசவில்லை'' என்றார். தோனி குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், ``தோனி இங்குதானே இருக்கிறார். ஓய்வு அறையில்தான் உள்ளார். வாருங்கள் நேரில் வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.