Published:Updated:

அரையிறுதி தோல்விகள்.. பந்தை சாப்பிடும் தோனி.. இரட்டை தலைமை - கங்குலி ஹாட் கமென்ட்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணி பெரிய தொடர்களில் அரையிறுதியில் தோற்று வெளியேறுவது தொடர்பாக தனது ஆதங்கத்தை கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.

கங்குலி
கங்குலி

“உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லாதது வருத்தமாகத்தான் இருக்கும். அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும். அடுத்த வருடம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடர் குறித்து கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம். அணிக்குள் எந்தப் பிளவும் இல்லை. டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல விதமான சூழல்தான் நிலவுகிறது. ரோஹித்துடன் எந்தப் பிரச்னையும் இல்லை. இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி” என வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக கோலி பேசினார். இந்திய அணியின் கேப்டன் கோலி எதிர்வரும் டி-20 உலகக் கோப்பை குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

கோலி
கோலி

கிரிக்கெட்டின் ‘தாதா’ கங்குலியோ, ``2013க்கு பிறகும் இந்திய அணி மிகப்பெரிய தொடர்களை வெல்லவில்லை. கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையைக் கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு நாள் உலகக் கோப்பை , டி-20 உலகக் கோப்பையில் வரிசையாக அரையிறுதியில் தோற்று வெளியேறிருக்கிறது'' என்ற தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் ஒரு வீரர் சிறப்பாக ஆடுகிறார் எனத் தேர்வு செய்வதும், அதேபோல் ஒரு வீரருக்காக மற்றொரு வீரரை அணியிலிருந்து நீக்குவதும் தேவையில்லாதது. ஒரு விஷயத்தை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய வீரர்கள் மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் விளையாட வேண்டும். நல்ல வீரர் என்பவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் ஆட வேண்டும். அதிகப்படியான எண்ணிக்கையைப் பார்க்கக் கூடாது. தரமான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

இங்கிலாந்து
இங்கிலாந்து

இந்திய அணி 2013- சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக் கைப்பற்றியது. அதன் பின் பெரிய தொடர்களை நாம் கைப்பற்றவில்லை. வரிசையாக 3 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளோம். நாம் இதில் முன்னேற்றம் காண வேண்டும். 2015 உலகக் கோப்பையில் தனக்குக் கிடைத்த பாடத்தைக் கொண்டு இங்கிலாந்து தங்களை மேன்மைபடுத்திக் கொண்டது. இந்த உலகக் கோப்பையில் வலுவாக வந்தனர். அந்த மாற்றத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரட்டை கேப்டன்ஷிப் குறித்து தேர்வுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு தலைமைகள் இருந்துள்ளன. அனில் கும்ப்ளே- தோனி, இப்போதைய கேப்டன் கோலி - தோனி ஆகியோர் இருந்துள்ளனர். தோனி 2023 உலகக் கோப்பை வரை விளையாடமாட்டார். அடுத்த வருடம் நடக்கும் டி-20 உலகக் கோப்பையின் போது அவர் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

தோனி
தோனி

தோனி தொடர்ந்து விளையாட விரும்பினால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அவர் நிறைய பந்துகளை சாப்பிடுகிறார். அதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர் சாம்பியன் அதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா விளையாட்டு வீரனும் ஒரு நாள் ஓய்வு பெற வேண்டும். ரிஷப் பண்ட் திறமையான வீரர்தான். அவரை தோனியுடன் ஒப்பிடாதீர்கள். தோனியுடன் அவரை ஒப்பிடுவது தவறு. தோனி சில காலம் எடுத்துக்கொண்டார் தன்னை நிரூபித்தார்'' எனக் கூறியுள்ளார்.