கட்டுரைகள்
Published:Updated:

எங்காகினும் பார்த்தது உண்டோ!?

ரெய்னா, தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
ரெய்னா, தோனி

நெஞ்சம் மறப்பதில்லை-9

ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருப்பதால் இந்த வாரமும் ஐ.பி.எல் சார்ந்தே ஒரு பழைய நிகழ்வைப் பார்த்துவிடுவோம்.

ஏப்ரல் 3 அன்று... சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி ஆடிய போட்டி. ருத்துராஜ் நெருப்பாகத் தகதகக்க, தோனி சிக்சர்களால் மினி நில அதிர்வை ஏற்படுத்த, பந்துவீச்சாளர்களின் தாராள மனதையும் தாண்டி லக்னோவை வீழ்த்தி அந்தப் போட்டியை வென்றது சென்னை அணி.

போட்டி முடிந்த பிறகு சில புகைப்படங்கள் இணையத்தில் அதிக வைரலாயின. சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா மஞ்சள் நிற கோட் - சூட்டுடன் தோனியைக் கட்டித் தழுவும் புகைப்படமும், டிரெஸ்ஸிங் ரூமில் சென்னை அணி வீரர்களுடன் ரெய்னா எடுத்துக்கொண்ட புகைப்படமும்தான் அவை. சேப்பாக்கம் மைதானத்தில் ரெய்னா இல்லாமல் சென்னை அணி ஆடிய முதல் போட்டி இது என்பதால் பல உணர்ச்சிக் குவியல்களை உள்ளடக்கியதாக இருந்தன அந்தப் புகைப்படங்கள்.

 தோனி, ரெய்னா,
தோனி, ரெய்னா,

சென்னை அணியில் தோனிக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த வீரர் ரெய்னாதான். எப்படி தோனி தொடக்கத்திலிருந்து சென்னை அணிக்காக மட்டுமேதான் ஆடிவந்தாரோ... அதேபோலத்தான் ரெய்னாவும். அந்த இரண்டு ஆண்டுகள் தடையைத் தவிர ஆடிய அத்தனை சீசன்களிலும் சென்னை அணிக்காக மட்டும்தான் விசிலடித்

திருந்தார் ரெய்னா. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்துக்கு முன்பு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான செயல்பாடுகள் நடக்கும்போது தோனிக்கு அடுத்து சென்னை நிர்வாகம் ரெய்னாவின் பெயரைத்தான் டிக் அடித்திருக்கிறது. ஓய்வுக்கு முன்பு வரை தோனியைவிடவும் சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரர் எனும் பெருமையும் ரெய்னா வசம்தான்.

அணியைக் கடந்து தோனிக்கும் ரெய்னாவிற்கும் இடையிலான தனிப்பட்ட உறவுமே அதிக நெகிழ்ச்சியான தருணங்களை உள்ளடக்கியதுதான். தோனி தனது உணர்வுகளை பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாதென நினைப்பவர். ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்த அன்று... டிரெஸ்ஸிங் ரூமில் ரெய்னா அவருடன் ஒரு செல்ஃபி எடுத்திருப்பார். அந்த செல்ஃபிதான் தோனியின் கண்ணீரை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கண்களில் நீர் நிரம்ப ரெய்னாவுடன் செல்ஃபி எடுத்துவிட்டு, ‘இந்த ஜெர்சியை இதற்கு மேல் அணியப்போவதில்லை' என ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார் தோனி. பின்னாளில், பல வருடங்கள் கழித்து 2020ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வுபெறுவதாக அறிவித்த அதே நாளில்தான் ரெய்னாவும் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார்!

 தோனி, ரெய்னா,
தோனி, ரெய்னா,

ரெய்னாவுக்கு தோனி ஒரு மூத்த சகோதரரைப் போன்றவர். தன்னை வழிநடத்தும் தனக்காக எப்போதுமே நிற்கும் அண்ணனாகத்தான் தோனியைப் பார்த்தார். இப்படி ஒரு நேசத்திற்கு அவரின் பால்ய காலச் சம்பவங்களும் ஒரு காரணமாக இருந்தது. ஏழ்மையான பின்னணியைக் கொண்ட ரெய்னா, சிறுவயதிலேயே மூத்த சகோதரர்களில் ஒருவரை விபத்தில் இழந்தவர். சிறுவயதிலிருந்தே கூச்ச சுபாவத்தோடு பல தயக்கங்களுடன்தான் வளர்ந்திருக்கிறார். பள்ளி, கல்லூரி நாள்களில் ரயில் பயணங்களின் போது சீனியர்கள் பலரால் ராகிங் பிரச்னைக்கும் உள்ளாகியிருக்கிறார். இது அத்தனையையும் ரெய்னாவே தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியான பின்னணியோடு கிரிக்கெட் உலகிற்குள் நுழைந்தவருக்கு தன்னை அரவணைத்துக் காக்கும் மூத்த சகோதரனாக தோனி தெரிந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில்தான் இருவரும் இந்திய அணிக்குள்ளே நுழைந்தனர். ஐ.பி.எல்-லுக்காகச் சென்னை அணி உருவாக்கப்பட்டபோதும் முதல் சீசனிலிருந்தே இருவரும் சென்னை அணிக்காகத்தான் ஆடிவருகின்றனர். இந்திய அணியில் தோனி கேப்டனாக இருந்த வரைலிமிட்டெட் ஓவர் போட்டிகளில் ரெய்னாவிற்கான இடம் பாதுகாப்பாகவே இருந்தது. 2016-17 சமயத்தில் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகுதான் இந்திய அணியின் தேர்வுக்குழு ரேடாரிலிருந்தும் ரெய்னா காணாமல்போனார்.

 ரெய்னா, தோனி,
ரெய்னா, தோனி,

இவ்வளவு நெருக்கமானவர்களுக்கிடையே முரணே ஏற்பட்டதில்லையா எனில், ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணையுமா இணையாதா எனப் பதைபதைக்கவைக்கும் வகையில் இருவருக்குமிடையே முரண் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முரண்களும் அதிலிருந்து மீளுதலும்தானே உறவின் அடிப்படையே. ‘கொரோனா காலகட்டத்தில் ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தபோது சென்னை அணி அங்கே புறப்பட்டுச் சென்றது. தோனியும் ரெய்னாவும் அதில் அடக்கம்.

சேப்பாக்கத்தில் சில வாரங்கள் பயிற்சியையெல்லாம் முடித்துவிட்டுதான் எல்லாரும் விமானம் ஏறினர். ஆனால், துபாயில் தரையிறங்கிய வேகத்தில் ரெய்னா மீண்டும் கிளம்பி இந்தியாவுக்கே திரும்பிவிட்டார். அணி நிர்வாகம் மற்றும் தோனியுடனான மனஸ்தாபத்தினாலேயே ரெய்னா அதிருப்தியில் கிளம்பிவிட்டார் எனப் பல செய்திகளும் சொல்லப்பட்டன. தனக்குப் போதுமான வசதிகள் செய்துகொடுக்காததால்தான் ரெய்னா கோபமடைந்தார் என்றும் தோனியே தனியாக அழைத்துச் சமாதானம் பேசியும் ரெய்னா திருப்தியடையவில்லை என்றும், அதனால் தோனியே கடும் அதிருப்தியில் இருக்கிறார் எனவும் உறுதிப்படுத்தப்படாத பல செய்திகள் அப்போது உலாவின. ஆனால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இச்சம்பவம், ரெய்னா இனிமேல் சென்னை அணிக்காக ஆடுவாரா எனும் சந்தேகத்தைக் கிளப்பியது. காலம் எல்லா மனக்காயங்களையும் போக்கியது. ரெய்னாவும் தோனியும் மீண்டும் அடுத்த சீசனிலேயே ஒன்றிணைந்து ஆடினர். ரெய்னாவின் ஃபார்ம் மற்றும் வயது எல்லாவற்றையும் மனதில் வைத்துதான் சென்னை அணி ரெய்னாவை சமீபத்திய ஏலத்தில் வாங்காமல்விட்டது. அணியின் நலனை மனதில் வைத்து ரெய்னாவும் இந்த முடிவை முழுமையாகப் புரிந்துகொண்டார்.

விளையாட்டு என்பது வெறுமென போட்டிகளும் அதைச் சார்ந்த வர்த்தகமும் மட்டுமே கிடையாது. இங்கே அதைத் தாண்டியும் மனதை நெகிழ்வாக்கி நினைவில் வைத்துப் போற்றும் ஆற்றலைக் கொண்ட எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான உதாரணம்தான் தோனி - ரெய்னாவின் சகோதர பாசம்!