Published:Updated:

`கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது!’ - பாகிஸ்தான் வீரர்களுக்கு தவானின் பதிலடி

முதலில் உங்கள் நாட்டின் பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு பின்னர் மற்றவர்களின் பிரச்னைகள் குறித்துப் பேசுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய வீரர் தவான் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Dhawan
Dhawan ( Twitter )

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் முடிவு செய்து அதற்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தனர்.

Dhawan
Dhawan
Twitter

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணியின் தொடக்கவீரர் தவான் பதிலடி கொடுத்திருக்கிறார். `இந்தியா டிவி' நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தவான், ``நம் நாட்டுக்கு எதிராக சிலர் பேசுகையில், நாம் ஒற்றுமையாக எதிர்த்து நிற்க வேண்டும். வெளிநபர்கள் நமக்கு அறிவுரை வழங்கத் தேவையில்லை. முதலில் உங்கள் நாட்டு பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு, அடுத்தவர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்குங்கள். பொதுவாக, `கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு அடுத்தவர்கள் மீது கல்லெறியக் கூடாது’ என்று கூறுவார்கள்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

``இந்த உலகக் கோப்பை தொடரின் ஓர் அங்கமாக நான் இருக்கப் போவதில்லை!'' - ஷிகர் தவான் உருக்கம்!

அந்தப் பேட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தபோது நடந்த சம்பவங்கள், தோனியின் ஆப்சென்ஸ் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தவான் பகிர்ந்திருக்கிறார். ரிஷப் பன்ட் குறித்து பேசிய தவான், ``உங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதசூழல் சில நேரங்களில் ஏற்படலாம். அவரைப் போன்ற இளம் வீரர்களுக்கு நிச்சயம் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Pant, Dhawan
Pant, Dhawan
Twitter

டெல்லியைச் சேர்ந்த தவான், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கிவரும் தவான், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.