Published:Updated:

இந்தியா + தென்னாப்பிரிக்கா = டெல்லி... Capitals ஆல்டைம் லெவன்!

Delhi Capitals
Delhi Capitals

டெல்லி டேர்டெவில்ஸ் டு டெல்லி கேபிட்டல்ஸ்… பெயர் மாறிவிட்டது. ஆனாலும் அவர்களின் ஐபிஎல் கனவு இன்னும் நிறைவேறவேயில்லை. ஐபிஎல் ஃபைனலுக்குள் நுழையாத ஒரே அணியாக விளங்கும் டெல்லியின் ஆல்டைம் லெவன் எப்படியிருக்கும்?!

வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை பல உலகத் தர வீரர்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார்கள். வார்னர், மெக்ரத், டி வில்லியர்ஸ், பீட்டர்சன், மோர்னே மோர்கல், ரபாடா எனப் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், அதில் 4 வீரர்களை மட்டும் தேர்வுசெய்வது என்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் ரெகுலர் வீரர்கள் பலர் இந்த அணிக்கு ஆடியிருக்கிறார்கள். அதனால், ஒவ்வொரு பொசிஷனாக முடிவுசெய்வோம்.

முதல் ஓப்பனராக எந்தவித குழப்பமுமின்றி முன்னாள் கேப்டன் விரேந்திர சேவாக். சேவாக்கின் அதிரடித் திறனுக்கு அவர் கெய்லுக்கு நிகராக ஐபிஎல் தொடரில் தாக்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரது இன்கன்சிஸ்டன்சி அதற்கு வழிவகுக்கவில்லை. இருந்தாலும் மூன்று 400+ சீசன்கள், 1 சதம், 15 அரை சதம் என டேர்டெவில்ஸின் முக்கிய அங்கமாக விளங்கியிருக்கிறார். அதனால், சேவாக் இன்.

Virender Sehwag
Virender Sehwag

அவரோடு ஓப்பனராக ஆட, ஷிகர் தவான். 2 சீசன்கள்தான் டெல்லிக்காக ஆடியிருக்கிறார். ஆனால், சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். 30 போட்டிகளில் 9 அரை சதங்கள் அடித்திருக்கிறார். வார்னர், முதல் 3 சீசன்களில் சுமார் 25 என்ற சராசரியில்தான் ஆடியிருக்கிறார். 2013 சீசனில் மட்டும்தான் 350 ரன்களுக்கு மேலாக அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மிடில் & லோயர் ஆர்டரில் தேர்வுசெய்ய நிறைய ஓவர்சீஸ் வீரர்கள் இருப்பதால், வார்னரைப் புறக்கணித்துவிடலாம்.

மூன்றாவதாக கௌதம் கம்பீர். அட்டகாசமான முதல் சீசனுக்குப் பிறகு, இரண்டு சுமாரான சீசன்கள்தான். இருந்தாலும், முதல் சீசனில் இவர் வைத்திருக்கும் 41.07 என்ற சராசரியும், மூன்றாவது சீசனில் 30.77 என்ற சராசரியும் டெல்லியின் ஆல்டைம் லெவனில் இடம்பிடிக்கப் போதுமானதாக இருக்கிறது. முன்னாள் கேப்டன்களைத் தொடர்ந்து, இப்போதைய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். 5 சீசன்களில் மூன்று 400+ ஸ்கோர்கள் கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மேனைத் தேர்வுசெய்ய, பெரிதாக விளக்கம் சொல்லத் தேவையில்லை.

Risabh Pant
Risabh Pant

என்னதான் இந்திய அணிக்காக இவரது செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார், ரிஷப் பன்ட். 2018-ல் 684 ரன்கள், 2019-ல் 488 ரன்கள் என வேற லெவலில் பர்ஃபார்ம் செய்துகொண்டிருக்கிறார். அதனால், டெல்லியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகிறார் பன்ட். டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், மற்ற இரண்டு சீசன்களிலும் மிகவும் சுமாராகத்தான் ஆடியிருக்கிறார். அதனால், அவரை ஆல்டைம் லெவனில் தேர்வுசெய்ய முடியாது. இன்னொரு பக்கம் பீட்டர்சன். 2012-ல் அட்டகாசமாக ஆடினார். ஆனால், 8 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அதனால், கடைசி பேட்டிங் ஸ்லாட்டுக்கு இன்னும் பொருத்தமான ஒருவரைத் தேடுவோம்.

ஜே.பி.டுமினி - டேர்டெவில்ஸ் அதளபாதாளத்தில் தவித்துக்கொண்டிருந்தபோது, தனி ஆளாகப் பல போட்டிகளில் போராடியிருக்கிறார். ஆடிய 3 சீசன்களில், 40+ சராசரியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். அதனால், எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் அவரையே தேர்வுசெய்வோம். ஆல்ரவுண்டர் ஸ்லாட்டுக்கு தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ். 34 போட்டிகளில் 41 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதுபோக, சுமார் 160 என்ற சராசரியில் அதிரடியாக ஸ்கோர் செய்திருக்கிறார். அதனால், ஆல்ரவுண்டர் ஸ்லாட்டுக்கு அவரையே டிக் செய்யலாம்.

J.P.Duminy
J.P.Duminy

பௌலிங்கைப் பொறுத்தவரை, டெல்லிக்காக 97 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அமித் மிஷ்ரா, அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரர். இன்னும் இரண்டு ஓவர்சீஸ் ஸ்லாட்டுகள் மீதமிருப்பதால், அதை முதலில் முடிவுசெய்துவிடலாம். டிர்க் நானஸ், 2009-ல் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால், அதற்கடுத்த சீசனில் சோபிக்கவில்லை. 37 போட்டிகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் மோர்னே மோர்கல், ரபாடா இருவரையும் வேகப்பந்துவீச்சாளர்கள் இடத்தில் நிரப்புவோம். மோர்னே 2012 சீசனிலும், ரபாடா கடந்த சீசனிலும் தலா 25 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். அவர்களைப் புறக்கணிப்பது முடியாத காரியம். அதனால், இது முழுக்க முழுக்க இண்டோ - சௌத் ஆப்பிரிக்கன் அணியாகத் தெரிந்தாலும், இவர்களையே தேர்வுசெய்யலாம்.

கடைசி இடத்திற்கு உமேஷ் யாதவ், ஆசிஷ் நெஹ்ரா இருவரில் ஒருவரைத்தான் தேர்வுசெய்ய முடியும். உமேஷ், இரண்டு சீசன்களில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். 47 போட்டிகளில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். எகானமி மிகவும் அதிகம். அதேசமயம், நெஹ்ரா 27 போட்டிகளில் 36 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதனால், இந்தியாவின் சீனியர் பௌலர் அணியின் கடைசி இடத்தைப் பிடிக்கிறார். சேவாக், ஒரு கட்டத்தில் அணியின் கேப்டனாகச் செயல்பட விரும்பாததால், இந்த ஆல்டைம் அணியின் கேப்டனாக கம்பீரைத் தேர்வுசெய்வோம்.

அடுத்த கட்டுரைக்கு