ஹை ஸ்கோரிங் போட்டிகள் ரோலர் கோஸ்டர் பயணத்தை நினைவுபடுத்துபவைதான் என்றாலும் பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசும் லோ ஸ்கோரிங் போட்டிகளோ பேட்ஸ்மேன்களுக்கு கடல் அலையை சமாளிக்கும் சாகசமான நீர்ச்சறுக்குக்கு இணையானவை.
அப்படியொரு பௌலர்களுக்கு இடையேயான நேருக்கு நேரான மோதலில் இந்த சீசனின் முதல் ரவுண்டில் தன்னை வீழ்த்திய குஜராத்தை டெல்லி கேப்பிடல்ஸ் தோற்கடித்திருக்கிறது. அசந்தால் வலியதை எளியதும் வெல்லும் என்பதனையும் நிரூபித்திருக்கிறது.
'Teamwork makes the dream work' - முந்தைய போட்டியை வென்றபின் ஷமி போட்டிருந்த ட்வீட்தான் இது. வேறெந்த அணியை விடவும் குஜராத் விஷயத்தில் இது உண்மைதான் என்றாலும் அதில் பிரதானப் பங்கினை ஷமி வகிக்கிறார் என்பதை மறுக்க முடியாது. புதுப்பந்தை புரவியாக்கி, ஸ்விங் என்னும் நிச்சயமற்றதன்மையை அதனுள் புகுத்தி, லைன் அண்ட் லென்த்தில் துல்லியத்தன்மையை நிலைநிறுத்தி, வேகம் என்னும் நான்காவது பரிமாணத்தையும் கட்டுப்படுத்தி சீம் பிரசன்டேஷனாலும் பேட்ஸ்மேனை இடர்ப்படுத்துபவர். இவற்றுள் ஏதோ ஒன்றில் பேட்ஸ்மேன்கள் கைது செய்யப்படுவது நிச்சயம். பவர்பிளேயில் அப்படியொரு ஆரவாரமான ஆரம்பத்தை ஷமி தருவதுதான் ஆட்டம் முழுவதும் எதிரொலிக்கிறது. இதே நிகழ்ச்சிநிரல் டெல்லிக்கு எதிராகவும் பின்பற்றப்பட்டது.

வெள்ளை ஜெர்ஸியில் ரெட் பாலினை ஏந்தி இருக்கிறாரா அல்லது ட்யூக்ஸ் பாலினை இங்கிலாந்து லார்ட்ஸில் வீசிக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பும் ஒரு ஸ்பெல் அது. அப்ரைட் சீம் பொஷிசனோடு பெரும்பாலான பந்துகள் டெஸ்ட் லைன் அண்ட் லென்த்திலே விழ, அங்கே தொனிக்கும் அதே ஆக்ரோஷத்தை இங்கேயும் பார்க்க முடிந்தது. வீசிய முதல் பந்தையே விக்கெட்டோடுதான் தொடங்கினார் ஷமி. ஃபுல் லெந்தில் அவுட் ஸ்விங்கரை வீசி டிரைவ் செய்ய முயன்றதால் எடுக்கப்பட்ட சால்ட்டின் விக்கெட்டோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் ஒட்டியிருந்தது. அடுத்த ஓவரிலேயே வார்னர் எதிர்பாராமல் ரன் அவுட் ஆக, இரு ஓவர்களிலேயே இரு விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி. இதுவே அதிர்ச்சி என்றால் அடுத்தடுத்த ஓவர்களில் ஷமி பேரதிர்ச்சி தந்தார்.
அதுவும் அவர் தனது மூன்றாவது ஓவருக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, களத்தில் நிகழ்ந்தவை டெஸ்டின் போர்க்களக் காட்சிகளை நினைவூட்டின. பௌலருக்கும் விக்கெட் கீப்பருக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நிறைவேற்றின. ரோசோவுக்கு வீசிய சீம் அப் டெலிவரியின் மூவ்மென்ட்டில் பந்து எட்ஜாகி சஹாவிடம் சரணடைந்தது. அடுத்ததாக ஷமி வீசிய அவரது மூன்றாவது ஓவரோ பாண்டே மற்றும் ப்ரியம் கார்க் என இரு விக்கெட்டுகளை ஷமியின் கணக்கில் சேர்த்தன. ஷமியின் Wobble seam உடன் சஹாவின் அற்புதமான கேட்சும் சேர்ந்து பாண்டேவை வெளியேற்ற, கார்க்கின் மோசமான ஃபுட் மூவ்மெண்டால் இன்னொரு பந்தும் எட்ஜ் வாங்கி கீப்பர் கேட்சானது. இந்த சீசனில் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் வரிசையில் ஷமிதான் 12 விக்கெட்டுகளோடு முதலிடத்தில் இருக்கிறார். முன்பே கூறியது போல் குஜராத் முந்தியிருக்க இதுவும் ஒரு காரணம், 19 டாட் பால்களைத் தாங்கிய 4/11 என்னும் நம்பமுடியாத ஷமியின் ஸ்பெல்லே அதற்கான அத்தாட்சி. நான்கு ஓவர்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து அதே அழுத்தத்தை சுருக்குக் கயிறாக்கி டெல்லியைத் திணறடித்த இடத்தில் பாண்டியாவும் ஸ்கோர் செய்துவிட்டார்.

டெல்லியின் டாப் ஆர்டரில் இந்த சீசனில் வார்னர் மட்டுமே 308 ரன்களை எடுத்திருக்க மீதமுள்ள மூன்று இடங்களில் ஆடியவர்களும் சேர்ந்து எடுத்துள்ள ரன்கள் 311 மட்டுமே. இந்த மோசமான டாப் ஆர்டரால் ஷமியின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை. 23/5 என இருந்த டெல்லியின் ஸ்கோர் முந்தைய ஆர்சிபியின் 49 லோ ஸ்கோர் ரெக்கார்டை முறியடித்து விடும் அளவெல்லாம் பயங்காட்டியது. ஆனால் டாப் ஆர்டர் செய்யத் தவறியதை ஆமன் கான் செய்து முடித்தார். அக்ஸர் மற்றும் ரிப்பல் படேலுடனான அவரது பார்டனர்ஷிப்கள்தான் அணியைப் பேராபத்திலிருந்து கொஞ்சமேனும் மீட்டன.
மிடில் ஓவர்களில் விக்கெட் கையிருப்பு இல்லாததால் கொஞ்சமேனும் டிஃபென்சிவ் மோடுக்குள் புகுந்துகொள்ள வேண்டிய நிலையென்றாலும் அவ்வப்போது ரஷித்தின் பந்துகளில் சிக்ஸர்களை அடித்து ரன்ரேட் அதளபாதாளத்தில் விழுவதை ஆமன் தடுத்தார். அவருக்கும் அக்ஸருக்கும் இடையிலான 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின் ஆயுட்காலம் 9 ஓவர்கள் நீண்டன. மூன்று காலில் நிற்கும் நாற்காலியான டெல்லிக்கு இக்கூட்டணியே முட்டுக் கொடுத்தது. அதனை சிம்மாசனம் ஆக்காவிட்டாலும் சரிந்து விழாமல் காப்பாற்றியது அடுத்த கூட்டணியில் சேர்ந்த ரன்கள். ஆமன் கானின் ரிப்பலுடனான பார்ட்னர்ஷிப்பில் 27 பந்துகளில் 53 ரன்கள் துரிதமாக வந்து சற்றே அணியை நிலைநிறுத்தின.
160 - 180 வரை வரக்கூடிய பிட்ச் எனக் கருதப்பட்டதால் 131 என்ற இலக்கு குஜராத்துக்கான நாளாக இது முடியுமென நினைக்க வைக்க, "இது பௌலர்களின் நாள்" என அபாய விளக்கை ஒளிர வைத்தன டெல்லி வீசிய பவர்பிளே ஓவர்கள். மெய்டன் விக்கெட்டோடு கலீல் அஹ்மத் தொடங்கி மிரட்டினார்.

தலா இரு ஓவர்கள் தரப்பட்ட இஷாந்த் மற்றும் நார்க்கியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் முறையே 11 மற்றும் 8 ரன்களை மட்டுமே அந்த இரு ஓவர்களில் கொடுத்தனர். 31 ரன்களை மட்டுமே பவர்பிளேவுக்குள் விட்டுத் தந்ததோடு, குல்தீப் ஏழாவது ஓவரில் எடுத்த அபாயகரமான மில்லரின் விக்கெட்டும் டெல்லியை லீட் எடுக்க வைத்தது.
குறைந்த இலக்கு என்பதால் விக்கெட் சரிவிலிருந்து அணியைத் தோள்கொடுத்து நிறுத்தினாலே பள்ளத்தாக்கில் விழுவதைத் தடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஹர்திக் பாண்டியா - அபினவ் மனோகர் அதைத்தான் அடுத்த பல ஓவர்களுக்கு செய்தனர். 63 பந்துகள் நீடித்த இக்கூட்டணி 62 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இக்கட்டத்தில் 20 பந்துகளை டாட் பால்களாக்கி வீணடித்திருந்தனர். வார்னர் பௌலர்களை சுழற்சி முறையில் சிறப்பாகப் பயன்படுத்திய விதமும் ஒரு காரணம். அக்ஸர், கலீல், குல்தீப் ஆகிய மூவருமே ரன்கசிவைத் தங்களது ஓவர்களில் தடுத்து நிறுத்தினர்.
இந்த இடத்தில் உண்டான தேக்கமே குஜராத்தை இறுதியில் குப்புறத் தள்ளியது. கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் செல்வதில் எனக்குப் பிடித்தமில்லை என இந்த சீசனில் ஒருமுறை பாண்டியா கூறியிருந்தார். ஆனால் இப்போட்டியில் 53 பந்துகளைச் சந்தித்திருந்த அவர் அதனை மனதில் நிறுத்தி இருந்தால் அந்த டாட் பால்களின் அணிவகுப்பு தடுக்கப்பட்டிருக்கலாம். இவர்களது விக்கெட் விழாதது கூட டெல்லிக்கு அனுகூலமாகவே முடிந்தது. எந்த இடத்தில் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்து ஆட்டத்தின் கியரை மாற்றியிருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதனைச் செய்ய குஜராத் தவறிவிட்டது. 17 மற்றும் 18-வது ஓவரில் கூட முறையே 5 மற்றும் 4 ரன்களை மட்டுமே குல்தீப் மற்றும் கலீல் விட்டுத் தந்திருந்தனர். ஃபினிஷர் அவதாரத்தில் கனகச்சிதமாகப் பொருந்தக்கூடிய திவேதியாவின் ஹாட்ரிக் சிக்ஸர்களை விலக்கிப் பார்த்தால் வெற்றியிலிருந்து குஜராத்தை எங்கேயோ தள்ளி வைத்திருந்தது டெல்லி.

முதல் பாதியின் ஆரம்பத்தை ஷமி ஆக்கிரமித்திருந்தார் என்றால் இரண்டாவது பாதியில் முடிவை இஷாந்தே முடிவு செய்தார். அனுபவம் மெருகேற்றும், அதனை பவர்பிளேயில் விஜய் ஷங்கருக்கு அவர் வீசிய 'Knuckle Ball' நிரூபித்திருந்தது. வழக்கமான வேகப்பந்து வீச்சுக்கு உரிய க்ரிப்போடு தொடங்கி பின்னர் அதனையே வீசும் போது 'Knuckle Ball' ஆக மாற்றி விஜய் ஷங்கரின் கண்களை ஏமாற்றியிருந்தார். Seam-க்கு மேல் படர்ந்திருந்த விரல்கள் அதற்கு ஏதுவாக மைக்ரோ விநாடிக்குள் மடக்கப்பட்டு பந்தை லைன் அண்ட் லென்த் மாறாமலும் பயணப்பட வைத்து ஸ்டம்பைத் தகர்த்து அவர் நினைத்ததை முடித்திருந்தது. பேட்ஸ்மேனால் கணிக்க முடியாமல் செய்த க்ரிப்பின் வழியேதான் தனது சூட்சுமத்தை இஷாந்த் அரங்கேற்றியிருந்தார். வேக வித்தகர் டேல் ஸ்டெய்ன் அதனை விக்கெட் எடுக்கப்பட்ட 'Knuckle Ball'களில் தான் பார்த்ததிலேயே இதுதான் சிறந்ததென பாராட்டியிருக்கிறார்.
இஷாந்தின் அனுபவமும் திறமையும்தான் இறுதி ஓவரிலும் தேவைப்பட்ட 12 ரன்களை எடுக்க விடாமல் குஜராத்தைக் கட்டுப்படுத்தியது. அந்த ஓவரில் யார்க்கர்களாலும், வொய்ட் யார்க்கர்களாலும் ரன்களைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்ல திவேதியாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் டெல்லியின் வெற்றியை ஏறக்குறைய முடிவு செய்தது. அவ்வளவு பதற்றத்திலும் சரியான இடத்தில் பந்தைத் தரையிறக்கி அதனைக் கச்சிதமாக இஷாந்த் செய்து முடித்தார்.

இந்த வெற்றியால் இடங்கள் மாறிவிடவில்லை, குஜராத் அதே உச்சத்திலும் டெல்லி அதே அடிப்பகுதியிலும் நீடிக்கின்றன. எனினும் பின்னடைவுகளை மட்டுமே எதிர்கொண்ட டெல்லி, இந்த வெற்றி, அதுவும் முதலிடத்தில் முகாமிட்டிருக்கும் குஜராத்தை வீழ்த்தி அதனைப் பெற்றிருப்பது "Punching above the weight" என்ற பதத்திற்கு உயிர் கொடுத்தது போலவே உள்ளது. அதுவும் 23/5 என்ற இடத்திலிருந்து மீண்டு வந்து ஓர் அணியால் வெற்றியை சுவைக்க முடியுமென்பது கிரிக்கெட் எப்படி வாழ்க்கையோடும் அதன் நிச்சயமற்றன்மையோடும் ஒத்துப் போகிறது என்பதயும் காட்சிப்படுத்துகிறது. ஆமன் கானுக்கும் டெல்லி பௌலர்களுக்கும் உரித்தான வெற்றி இது.
டி20-ன் டிஎன்ஏவில் `பேட்ஸ்மேன்களின் ஃபார்மேட்' என்றே பதியப்பட்டு இருக்கிறது. ஆனால், இப்படி எப்போதேனும் பௌலர்கள் டாப் கிளாஸ் ஸ்பெல்களை வீசும்போது, அந்த அடிப்படை மாற்றப்பட்டு டி20 கிரிக்கெட்டை இன்னும் ரசிக்கும்படியானதாகவும், ரம்மியமானதாகவும் மாற்றுகின்றன!