விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தங்களின் 5வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கணக்கையே தொடங்காத ஓர் அணியாகக் கடைசி இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அணியில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி அணியின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது என்றாலும் இந்த சீசனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்கிறார்கள். ஆனால், அடுத்த சீசனுக்கு முன் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய ஆட்களை உள்ளே கொண்டுவர முடிவு செய்திருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம்.
தற்போது அணியின் இயக்குநராக சவுரவ் கங்குலி, தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், துணை பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ், ஷேன் வாட்சன், அஜித் அகர்கர், பிரவீன் அம்ரே, பிஜு ஜார்ஜ் என இவர்களை வைத்தே ஒரு பிளேயிங் லெவன் போடும் அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அடுத்த சீசனில் இந்தப் பயிற்சியாளர்களில் பலர் அணியில் இடம் பெறமாட்டார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டேவிட் வார்னர் தலைமையில் ஆடும் டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.