Published:Updated:

Deepti Sharma:`ஓயாத விவாதம்' - தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா?

Deepti ( sony )

இவர்கள் இருவர் மட்டுமல்ல, இந்த விஷயத்தில் கறாராக `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்' குறித்து பேசுபவர்களெல்லாம், மரபுகளை மீறுவதல்ல, விதிகளை மீறுவதுதான் ஸ்பிரிட் ஆஃப் தி கேமை குலைக்கும் என்பதை உணர வேண்டும்.

Deepti Sharma:`ஓயாத விவாதம்' - தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா?

இவர்கள் இருவர் மட்டுமல்ல, இந்த விஷயத்தில் கறாராக `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்' குறித்து பேசுபவர்களெல்லாம், மரபுகளை மீறுவதல்ல, விதிகளை மீறுவதுதான் ஸ்பிரிட் ஆஃப் தி கேமை குலைக்கும் என்பதை உணர வேண்டும்.

Published:Updated:
Deepti ( sony )

இரண்டு நாட்களுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

அனுபவமிக்க வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டி என்பதால் மட்டுமல்ல, அதைத் தாண்டியும் ஒரு முக்கியமான சம்பவத்தை தீப்தி சர்மா அந்தப் போட்டியில் செய்திருந்தார். அதுதான் இப்போது கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. தீப்தி சர்மா மன்கட் முறையில் செய்த அந்த ரன் அவுட் முறையானதா இல்லையா என்பதே விவாதங்களின் அடிநாதமாக இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் அது. முதல் இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில் இந்த மூன்றாவது போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. ஸ்கோரை சேஸ் செய்த இங்கிலாந்து அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில் சார்லி டீன் எனும் வீராங்கனை மட்டும் விடாப்பிடியாக நின்று வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். அவர் 80 பந்துகளில் 47 ரன்களை எடுத்து நான் ஸ்ட்ரைக்கராக இருந்த போதே தீப்தி சர்மா அவரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இந்த ரன் அவுட் சம்பவம்தான் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது

Ashwin
Ashwin
ஏற்கனவே இந்திய வீரர் அஷ்வின் ஐபிஎல் லில் ஜாஸ் பட்லரை இந்த முறையில் வீழ்த்தியது பெரும் சர்ச்சை ஆகியிருந்தது. அதை விட பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும் இப்போது தீப்தி சர்மா ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் சார்ந்து இந்திய வீரர்களும் இங்கிலாந்து வீரர்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீப்தி சர்மாவுக்கு எதிராக கருத்து கூறியிருப்பவர்களில் ஆண்டர்சன் மற்றும் ப்ராட் இருவரின் கருத்தும் ரொம்பவே முக்கியமானது.

Anderson and Broad
Anderson and Broad
England Cricket
மன்கட் பற்றிய விவாதங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது. இருதரப்பிலிருந்தும் ஏகப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் நான் ஒரு போதும் இப்படியாக போட்டிகளை வெல்ல விரும்ப மாட்டேன். மற்றவர்கள் வேறுவிதமாக நினைப்பதிலும் மகிழ்ச்சியே.
ப்ராட்

இவ்வாறாக ஸ்டூவர்ட் ப்ராட் கூறியிருக்கிறார்

'இப்படி செய்வதற்கான தேவை எங்கிருந்து எழுகிறதென்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை'
ஆண்டர்சன்

என ஆண்டர்சன் கூறியிருக்கிறார். தீப்தி சர்மாவிற்கு எதிராக வந்திருக்கும் கருத்துகளில் இந்த இருவரின் கருத்தும்தான் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஐ.சி.சியின் விதிப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதென்பது முறையான விஷயமே. விதிகளை பின்பற்றி ஒரு வீராங்கனை விக்கெட் எடுக்கும் போது அதை எப்படி கேள்வி கேட்க முடியும்? பேட்டர்கள் சார்பில் கேள்வி கேட்பதற்கான இடம் எங்கே இருக்கிறது? ஒரு குறைந்தபட்ச நியாயம் என எதையாவது அவர்கள் தரப்பில் குறிப்பிட முடியுமா? ஒவ்வொரு ரன்னுமே முக்கியமான ஒரு போட்டியில், பௌலர் கையிலிருந்து பந்து ரிலீசாவதற்கு முன்பே நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும் பேட்டர் க்ரீஸை விட்டு சில அடிகள் வெளியேறுவதை எப்படி ஏற்க முடியும்? சில இன்ச் வித்தியாசத்தில் இங்கே எத்தனையோ ரன் அவுட்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கையில், க்ரீஸை விட்டு முன்பே வெளியே வரும் நான் ஸ்ட்ரைக்கர்கள் எவ்வளவு சௌகரியத்தை அனுபவிக்கிறார்கள்? இதனால் ஏற்கெனவே பாரபட்சமாக இருக்கும் களச்சூழலில் பௌலர்களும் பௌலிங் செய்யும் அணியும் மட்டுமே இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இப்படி மன்கட் முறையிலான ரன் அவுட்கள் நிகழும்போது மட்டுமே இவையெல்லாம் விவாதமாக்கப்படுகின்றது. இல்லையேல் பேட்டர்கள் எந்தப் பிரச்னையுமின்றி க்ரீஸை விட்டு வெளியேறும் சௌகர்யத்தை அனுபவித்துக் கொள்கின்றனர். சர்ச்சையாகியிருக்கும் இந்த போட்டியில் கூட அவுட்டான அந்த வீராங்கனை சார்லி நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்ற போது இந்த போட்டியில் மட்டும் 73 முறை பௌலர் பந்துவீசும் முன்பே க்ரீஸை விட்டு வெளியேறியிருக்கிறார்.

Dean
Dean
Sony
72 தடவைகளும் பொறுத்திருந்து 73 வது முறையில்தான் மன்கட் முடிவுக்கு இந்திய அணி வந்திருக்கிறது. தீப்தி அதை கச்சிதமாக செயல்படுத்தினார். 73 வது முறை வெளியேறிய போது சார்லி, தீப்தியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஒருவேளை மன்கட் செய்யப்படாமல் விட்டிருந்தால் இதெல்லாம் ஒரு பேசுபொருளாகவே மாறியிருக்காது. 73 முறை க்ரீஸை விட்டு வெளியேறியவர் இன்னும் அடுத்தடுத்தும் க்ரீஸை விட்டு வெளியேறி ஓடி ஓடியே போட்டியை இன்னும் நெருக்கமாக்கியிருப்பார். இறுதியில் இங்கிலாந்து வென்றிருக்கக்கூட செய்யும். ஆனால், அப்போது சார்லி க்ரீஸை விட்டு இத்தனை முறை வெளியேறியதெல்லாம் கவனிக்கக்கூடப்பட்டிருக்காது.

இந்த விஷயத்தில் ஆண்டர்சனும் ப்ராடும் சீனியர் பௌலர்களாக இந்த வகையிலான ரன் அவுட்டின் தேவையை உணர்ந்து ஒரு பௌலரின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. ஆனால், சாதனை மேல் சாதனை செய்த பந்து வீச்சாளர்கள் இந்த விஷயத்தில் மட்டும் ஒரு அராஜமிக்க பேட்டரின் மனநிலையிலிருந்து கருத்து கூறியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. தேசப்பற்றின் காரணமாக ஏதேதோ கருத்துகளை கூறிக்கொண்டிருக்கின்றனர் என எண்ணிக்கொள்வோம் . 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து எப்படி வென்றது? அதுமட்டு ஸ்பிரிட் ஆஃப் தி கேமுக்குள் அடங்குமா? என ஆண்டர்சனையும் ப்ராடையும் ரசிகர்கள் பந்தாடி வருகின்றனர்.

இவர்கள் இருவர் மட்டுமில்லை, இந்த விஷயத்தில் கறாராக 'ஸ்பிரிட் ஆஃப் தி கேம்' குறித்து பேசுபவர்களெல்லாம், மரபுகளை மீறுவதல்ல விதிகளை மீறுவதுதான் ஸ்பிரிட் ஆஃப் தி கேமை குலைக்கும் என்பதை உணர வேண்டும்.

இந்த சர்ச்சையில் அஷ்வின், சேவாக், கைஃப் போன்றோர் தீப்தி சர்மாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கின்றன. பல முறை எச்சரித்த பிறகே டீனே அவுட் ஆக்கினோம் என தீப்தி கூறியிருக்கிறார். இந்தியா சார்பில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என இங்கிலாந்து கேப்டன் கூறியிருக்கிறார். யார் சொல்வது உண்மை என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். அதேநேரத்தில், ரன் அவுட் ஆக்கப்பட்ட சார்லி டீனே இந்த விஷயத்தை ரொம்பவே பக்குவமாக கையாண்டிருக்கிறார். தீப்தி தன்னை ரன் அவுட் ஆக்கியதுமே களத்தில் எந்த சச்சரவுகளிலும் ஈடுபடாமல் நடுவரின் முடிவை ஏற்று இயல்பாக வெளியேறியிருந்தார். மேலும், தன்னுடைய தவற்றையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இனியாவது க்ரீஸூக்குள் முறையாக நிற்பேன் என்று நினைக்கிறேன்
சார்லி டீன்

என சார்லி டீன் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். முழுமையாக 22 வயது கூட நிரம்பாத இளம் வீராங்கனை. அவருக்கு இருக்கும் புரிதல் கூட பெரும் அனுபவமிக்க வீரர்களுக்கு இல்லை என்பதுதான் சோகம்.

ஒரு புரிதலுக்காக மட்டுமே இங்கே 'மன்கட்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1 முதல் இந்த வகையிலான அவுட்களை 'ரன் அவுட்' என்றே குறிப்பிட வேண்டும் என ஐ.சி.சி கூறியிருக்கிறது. ஆக இனி நாமும் அப்படியே அழைப்போம்.

இந்த ரன் அவுட் சர்ச்சையானதில் ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறது.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஒரு விவாதம் இவ்வளவு நீண்டு கொண்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பெண்கள் கிரிக்கெட்டும் கவனிக்கப்படுகிறது. நல்ல முன்னேற்றம்தான்!