Published:Updated:

`கிரிக்கெட் வாரியத்தை அணுகவுமில்லை.. எந்த டிமாண்டும் வைக்கவுமில்லை!' - டிவிலியர்ஸ் விளக்கம்

டிவிலியர்ஸ்
டிவிலியர்ஸ் ( Twitter )

சிலர், `நான் பணத்தாசை பிடித்தவன், தேசத்துக்கு விளையாடாமல் தனியாருக்காக விளையாடுகிறேன்' என்றெல்லாம் பேசுகிறார்கள். அது அனைத்தும் தவறு. உண்மையில், பல லீக் தொடர்களில் விளையாட `பெரிய தொகை' கொடுத்து என்னை அழைத்தார்கள்.

உலகக் கோப்பைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் ராசியில்லை என்ற பேச்சு எப்போதும் உண்டு. இதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக இந்த உலகக் கோப்பை தொடரில் `பரிதாப' தோல்வி அடைந்து நிலைகுலைந்து போயுள்ளது. முன்பெல்லாம் தொடக்கத்தில் நன்றாக விளையாடி அரையிறுதிவரை எப்படியும் வந்துவிடுவார்கள். ஆனால், இந்தமுறை லீக் போட்டியிலேயே வெளியேறிவிட்டார்கள். அதுவும் தொடரின் ஆரம்பமே வரிசையாக மூன்று தோல்வி கிடைக்க ஒட்டுமொத்த அணியும் சோகமடைந்தது. இதற்கிடையே, தொடரின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா தோல்விகளால் துவண்டுகிடக்க அந்நாட்டு ரசிகர்கள் பலரும், ஏபி டிவிலியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுவிட்டு தேசிய அணிக்காக விளையாட வேண்டும்.

தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா
AP

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் அவரை அணுக வேண்டும் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதேபோல் உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு அணி நிர்வாகத்தை அவர் தொடர்புகொண்டதாக ஒரு தகவலும் வெளியானது. ஆனால், அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் நிராகரித்திருந்தது. இதுதொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்திருந்தன. இதுவரை இதற்கு விளக்கம் அளிக்காமல் இருந்த டிவிலியர்ஸ் தற்போது இந்த விவகாரத்தில் மனம் திறந்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நீண்ட விளக்கத்தில், ``உலகக் கோப்பை முடிந்துவிட்டது. தொடரின்போது என்மீது எழுந்த நியாயமற்றக் குற்றச்சாட்டுகளுக்கு இப்போது பதிலளிக்க விரும்புகிறேன். ஒரு தனிப்பட்ட உரையாடல் யாரோ ஒருவரின் சுயநலனுக்காக வெளியாகி சர்ச்சையாகியதில் என்ன நடந்தது என்பதை தெளிவாக விளக்க விரும்புகிறேன். 2018 மே மாதம் எனது ஓய்வை அறிவித்தேன். அதிகமான பணிச்சுமையால் மனைவி, குழந்தையுடன் சரியாக நேரம் செலவிட முடியவில்லை. அவர்களுடன் நேரம் செலவழிக்கவே ஓய்வு முடிவு எடுத்தேன்.

டிவிலியர்ஸ்
டிவிலியர்ஸ்

ஆனால் சிலர், `நான் பணத்தாசை பிடித்தவன், தேசத்துக்கு விளையாடாமல் தனியாருக்காக விளையாடுகிறேன்' என்றெல்லாம் பேசுகிறார்கள். அது அனைத்தும் தவறு. உண்மையில், பல லீக் தொடர்களில் விளையாட `பெரிய தொகை' கொடுத்து என்னை அழைத்தார்கள். ஆனால், அவை அனைத்தையும் நான் ஏற்கவில்லை. ஓய்வுக்கு முன்னால் தொடர்ச்சியான வேலைப்பளு இருந்தது. இதனால் வருடத்தில் 8 மாதம் குடும்பத்தைவிட்டு பிரிய நேர்ந்தது. ஆனால், ஓய்வுக்குப் பின் இது வெறும் மூன்று மாதமாக குறைந்தது.

ஒன்றை மட்டும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நேர்மையான காரணங்களுக்காவே நான் ஓய்வு பெற்றேன். இதில் என் மனம் மிக தெளிவாக இருக்கிறது. ஓய்வுக்குப்பின் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்துக்கும் எனக்குமான தொடர்பு இல்லை. சங்கத்திலிருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை. டூ பிளசிஸ்ஸும் நானும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். சரியாக உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்னர் இருக்கும். நான் டூ பிளசிஸ்க்கு சாட் செய்தேன்.

டிவிலியர்ஸ்
டிவிலியர்ஸ்

ஓய்வுக்குப் பின் ஐபிஎல் தொடரில் விளையாடி நான் பார்மில் இருந்தேன். அதனால் அணிக்குத் தேவைப்பட்டால் நான் விளையாடுகிறேன் என சாதாரணமாக கூறினேன். இதில் கவனிக்கப்பட வேண்டியவை, ``தேவைப்பட்டால் மட்டுமே....'' எனக் கூறினேன். அணிக்குள் நிலையை எந்த டிமாண்டும், எந்த வற்புறுத்தலையும் அவரிடம் நான் சொல்லவில்லை. ஆகவே, என் தரப்பில் இதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. எந்த அநீதியும் இல்லை.

Vikatan

இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் தோல்வி அடைந்தபின் எங்களின் தனிப்பட்ட இந்த உரையாடல் மீடியாவில் கசிந்துடன் என்னை ஒரு மோசமானவனாக சித்திரித்தனர். இந்த சம்பவங்கள் என்னிடம் இருந்தோ.. என்னை சார்ந்தவர்களிடம் இருந்தோ, டூ பிளசிஸ்ஸிடம் இருந்தோ வெளியாகவில்லை. தோல்வி மீதான விமர்சனத்தை மறைக்கவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காவோ இதை பரப்பினார்களா என எனக்குத் தெரியவில்லை.

டிவிலியர்ஸ்
டிவிலியர்ஸ்

ஆனால், முடிவில் நான் ஒரு சுயநலவாதியாக, திமிர்பிடித்தவனாக மாற்றப்பட்டேன். இப்போதும் என்னுடைய மனம் தெளிவாக உள்ளது. உண்மையான காரணங்களுக்காகவே நான் ஓய்வு பெற்றேன். இப்போதைக்கு ஒரு சில டி20 தொடர்களில் விளையாடவே முடிவு செய்துள்ளேன். தேவையில்லாமல் எழுந்த இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் இந்த நேரத்தில், தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியதற்கும் அந்த அணியை வழிநடத்தியதையும் இதன்மூலம் கிடைத்த நட்புகளையும் நினைத்து பெருமைகொள்கிறேன். தென்னாப்பிரிக்கா அணிக்கு எப்போதும் எனது ஆதரவு இருக்கும். நோ ப்ராப்ளம்... எனக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லை" என விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு