Published:Updated:

`பிங்க் பால்’ டெஸ்டில் மிரட்டிய இஷாந்த் புதிய சாதனை! - முதல்நாளிலேயே இந்திய அணி முன்னிலை

இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Published:Updated:

`பிங்க் பால்’ டெஸ்டில் மிரட்டிய இஷாந்த் புதிய சாதனை! - முதல்நாளிலேயே இந்திய அணி முன்னிலை

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. வங்கதேச பிரதமரும் மேற்கு வங்க முதல்வரும் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியைத் தொடங்கி வைத்தனர். வங்கதேச பிரதமருக்கு இந்திய கேப்டன் கோலியை பிசிசிஐ தலைவர் கங்குலி அறிமுகப்படுத்தி வைத்தார். மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு மற்ற வீரர்களைக் கோலி அறிமுகப்படுத்தினார்.

வங்கதேச பிரதமர், மேற்கு வங்க முதல்வர், கங்குலி
வங்கதேச பிரதமர், மேற்கு வங்க முதல்வர், கங்குலி

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிங்க் நிறப் பந்துகளில் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்தப் போட்டியைக் காண ஈடன் கார்டன் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்க தேச வீரர்கள் திணறினர். முடிவில் 30.3 ஓவர்களில் அந்த அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையை நடத்தினர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3, முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்லாமல் பிங்க் நிறப் பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

இந்தப் போட்டியில் லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினர். ஷமி வீசிய பந்து லிட்டன் தாஸின் ஹெல்மெட்டைப் பதம்பார்த்தது. முதலில் வங்கதேசம் மருத்துவக்குழு அவரை பரிசோதித்தது. அதன்பின் அவர் விளையாடினார் தொடர்ந்து அசௌகரியமாக இருந்ததால் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பதிலாக கன்கஷன் மாற்று வீரராக மெஹிதி ஹாசன் களமிறங்கினார். அவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

ஐசிசியின் கன்கஷன் மாற்று வீரர் என்னும் விதி இந்தாண்டு ஜூலையில் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ஒரு வீரர் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகளால் விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக வரும் மாற்று வீரர், பேட்டிங் , பௌவுலிங் என இரண்டையும் மேற்கொள்ளலாம்.

இந்திய அணி
இந்திய அணி

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை மயங்க் அகர்வால் 16, ரோஹித் ஷர்மா 21 ரன்களில் வெளியேறினர். இந்திய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய புஜாரா - கோலி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 55 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா அவுட்டானார். அதன்பின் ரஹானே களமிறங்கினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 59, ரஹானே 23 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது.