Published:Updated:

`மூன்றாவது நாளில் 47 நிமிடங்கள்; 968 பந்துகள்!' - கொல்கத்தாவில் வரிசைகட்டிய சாதனைகள் #INDvBAN

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. வங்கதேச பிரதமரும் மேற்கு வங்க முதல்வரும் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியைத் தொடங்கி வைத்தனர். பிங்க் நிறப் பந்துகளில் நடைபெறும் போட்டியைக் காண ஈடன் கார்டன் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

ஈடன் கார்டன் மைதானம்
ஈடன் கார்டன் மைதானம்

பிங்க் நிறத்தில் ஜொலித்த கொல்கத்தா

கொல்கத்தா நகரின் முக்கியப் பகுதிகள் எல்லாம் பிங்க் நிறத்தில் ஜொலித்தன. பல மிட்டாய் கடைகளில் பிங்க் நிறத்தில் ஸ்வீட்டுகள் விற்கப்பட்டன. பிசிசிஐ புதிய தலைவராக சமீபத்தில் பதிவேற்ற கங்குலி பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரின் வண்ண மயமான புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்தியா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவின் ஆகியோரின் அட்டாக்கிங் பந்துவீச்சில் வங்கதேச வீரர்கள் திணறினர். சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் வழங்கப்பட்டது. பிங்க் நிறப் பந்து சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காததால் கோலி சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தப்படவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர்.

வங்கதேச அணியின் இன்னிங்ஸ் விரைவிலே முடிவுக்கு வந்தது. 30.3 ஓவர்களில் அந்த அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களே 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பிங்க் நிறப் பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார் இஷாந்த். இந்தப் போட்டியில் லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினர். அவருக்குப் பதிலாக கன்கஷன் மாற்று வீரராக மெஹிதி ஹாசன் விளையாடினார்.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்

இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை மயங்க் அகர்வால் 16, ரோஹித் ஷர்மா 21 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா - கோலி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 55 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா அவுட்டானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரைசதம் கடந்தார். இதன்மூலம் டெஸ்ட் கேப்டனாக அதிவேகமாக 5,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கோலி, ரஹானே ஆகியோர் களத்தில் இருந்தனர்.

`பிங்க் பால்’ டெஸ்டில் மிரட்டிய இஷாந்த் புதிய சாதனை! - முதல்நாளிலேயே இந்திய அணி முன்னிலை

கோலி சாதனை சதம்

இரண்டாம் நாள் ஆட்டத்தை செஸ் மாஸ்டர்களான விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் ஆகியோர் பாரம்பர்ய முறைப்படி மணியடித்து தொடங்கி வைத்தனர். அரைசதம் அடித்த நிலையில் ரஹானே வெளியேறினார். இதையடுத்து கோலி ரன்வேட்டையை தீவிரப்படுத்தினர். ஜடேஜா 12 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 27 வது சதம் இதுவாகும். பிங்க் நிறப் பந்துகளில் விளையாடும் பகலிரவு போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், சர்வதேச அரங்கில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கோலி சர்வதேச அரங்கில் மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 70 சதங்களை விளாசியுள்ளார். அதேநேரத்தில் சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்களை அடித்த ரிங்கி பாண்டிங்கின் சாதனையையும் கோலி சமன் செய்தார்.

கோலி
கோலி

தொடர்ந்து விளையாடிய கோலி 136 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு இஷாந்த் ஷர்மா முதல் ஓவரிலே ஷாக் கொடுத்தார். முதல் ஓவரின் 5-வது பந்திலேயே ஷத்மான் ஹூசைன் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்கள் மிரட்ட 13 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது வங்கதேசம்.

`இந்தியாவில் விரைவாக முடிவு எட்டப்பட்ட போட்டி?' - புதிய சாதனையை நோக்கி கொல்கத்தா டெஸ்ட் #INDvBAN

போராடிய முஷிபிகூர் ரஹீம்

மகமதுல்லா - முஷிபிகூர் ரஹீம் இணை பொறுமையாக விளையாடினர். ஷமியின் பந்துவீச்சில் மகமுதுல்லா காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்டாகி வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முஷிபிகூர் ரஹீம் மட்டும் போராடிக்கொண்டிருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். முஷிபிகூர் ரஹீம் 74 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மூன்றாவது நாளில் உமேஷ் யாதவ் விக்கெட் வேட்டை நடத்தினார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முஷிபிகூர் ரஹீம்
முஷிபிகூர் ரஹீம்

இந்தியாவின் சாதனைகள்

கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, ராஞ்சியில் நடந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இந்தூரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எனத் தொடர்ந்து 4 போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதற்கு 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் சுழற்பந்துவீச்சாளர்கள் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். அந்த ரெக்கார்டை வேகப்பந்துவீச்சாளர்கள் முறியடித்துள்ளனர்.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்

அதேபோல், கொல்கத்தா டெஸ்டில் சதமடித்த கோலி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும் முக்கிய மைதானங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, டெல்லி ஆகியவற்றில் சதம் அடித்த 4 வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் இந்த சாதனைப் பட்டியலில் கோலி இணைந்தார்.

இந்தியாவின் முதல் `பிங்க் பால்' டெஸ்ட் உள்நாட்டில் குறைவான பந்துகளில் முடிவு எட்டப்பட்ட போட்டி என்ற சாதனையைப் படைத்தது. முதல் இரண்டு நாள்களில் 916 பந்துகள் வீசப்பட்டிருந்த நிலையில், இன்று இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டுகளை 52 பந்துகளில் (8.4 ஓவர்கள்) எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம், 968 பந்துகள் வீசப்பட்ட நிலையிலேயே போட்டியில் முடிவு எட்டப்பட்டது.

`இந்தியாவில் விரைவாக முடிவு எட்டப்பட்ட போட்டி?' - புதிய சாதனையை நோக்கி கொல்கத்தா டெஸ்ட் #INDvBAN

இதற்கு முன்னர் இந்திய மண்ணில் குறைந்த பந்துகளில் முடிவு எட்டப்பட்ட டெஸ்ட் போட்டி என்ற சாதனை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2018-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி இருந்தது. இந்திய அணி வெற்றிபெற்ற அந்தப் போட்டியில் 1,028 பந்துகள் வீசப்பட்டன.