Published:Updated:

ENG vs IND : வரலாறு படைத்த இங்கிலாந்து; எங்கே சொதப்பியது இந்தியா?

ENG vs IND

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 450 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்த்தோம். காரணம், அதை நாங்கள் எப்படி சேஸ் செய்கிறோம் என்பதை சோதித்து பார்க்கலாம் என்று இருந்தோம்.

ENG vs IND : வரலாறு படைத்த இங்கிலாந்து; எங்கே சொதப்பியது இந்தியா?

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 450 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்த்தோம். காரணம், அதை நாங்கள் எப்படி சேஸ் செய்கிறோம் என்பதை சோதித்து பார்க்கலாம் என்று இருந்தோம்.

Published:Updated:
ENG vs IND
டாஸை வென்று பௌலிங்கைத் தேர்வு செய்யும் கேப்டன்கள் அதற்கான காரணமாய் பொதுவாக சொல்வது ஆடுகளத்தின் தன்மையைத்தான். ஆனால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தபோது " எங்களுக்கு சேஸிங்தான் சிறப்பாக வரும்" என்று கூறியிருந்தார்.

ஒருநாள், டி20 என சிறிய ஃபார்மர்ட்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாகத் தெரியலாம். ஐந்து நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்ய நாங்கள் முழு முழுவதுமாக தயாராக இருக்கிறோம் என்பது இங்கிலாந்து அணியின் நம்பிக்கை அளவைக் காட்டுகிறது.

Stokes - Bumrah
Stokes - Bumrah

ஆம், ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இதைத்தான் செய்திருக்கிறது . எனவேதான் இப்போட்டியின் முதல் மூன்று நாட்களில் இந்திய அணியின் கையே ஓங்கியிருந்தாலும் இங்கிலாந்து சிறிதும் அசந்து போயிருக்கவில்லை. தாங்கள் திட்டமிட்டதை அப்படியே செயல்படுத்தினர் அவ்வீரர்கள். அவர்கள் காட்டிய தீவிரம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் மொத்த நம்பிக்கையும் குலைத்தது. முடிவில் 378 என்ற இமாலய இலக்கை வெறும் மூன்றே விக்கெட்டுகளை இழந்து அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து. உபயம்: பேர்ஸ்டோ மற்றும் ரூட்ஸின் சதம்.

போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் "இரண்டாவது இன்னிங்ஸ்கில் இந்தியா 450 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்த்தோம். காரணம், அதை நாங்கள் எப்படி சேஸ் செய்கிறோம் என்பதை சோதித்து பார்க்கலாம் என்று இருந்தோம்” என்று நினைத்ததாகக் கூறினார். அவர் கூறியதுபோல இங்கிலாந்து அணியால் 500 ரன்களைக்கூட சேஸ் செய்திருக்க முடியும் ஆனால் 450+ ரன்களை அடிக்க வாய்ப்பிருந்தும் அதை இந்திய அணி மிக எளிதாக தவறிவிட்டது என்பதே நிதர்சனம்.

Roots - Bairstow
Roots - Bairstow

மூன்றாவது இன்னிங்ஸில் பண்ட் - புஜாரா பார்ட்னர்ஷிப் களத்தில் இருக்கும் வரை ஆட்டம் இந்தியாவின் வசமே இருந்தது. புஜாரா தன் விக்கெட்டைப் பறிகொடுக்க அங்கு தொடங்கியது அணியின் சரிவு. இங்கிலாந்தின் ஷார்ட் பால் வியூகத்தை சமாளிக்க இயலாமல் முதல் இன்னிங்க்ஸைப் போலவே ஷ்ரேயாஸ் ஐயர் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து பண்ட்டும் லீச் பந்தை ரிவெர்ஸ் ஸ்வீப் அடிக்க சென்று விக்கெட்டை பறிகொடுத்தார். இப்படி இங்கிலாந்தின் பந்துவீச்சால் அல்லாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளைத் தாங்களாகவே விட்டுக்கொடுக்க ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் கைகளிலிருந்து நழுவியது.

அதேபோல இங்கிலாந்தின் முதல் விக்கெட் பார்ட்னெர்ஷிப் 100 ரன்களைத் தாண்டவும் இதை எளிதான சேஸாக இருக்கும் என்ற அச்சம் எழ அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அப்போது சற்றே இந்தியாவின் கை மீண்டும் ஓங்குவதாகத் தெரிந்தது. இதைப் பயன்படுத்தி இங்கிலாந்து பேட்டர்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் நன்கு ப்ரஷர் போட்டிருக்க முடியும். அதற்கு மாறாக ஒரு சரியான திட்டத்தை அமைத்து செயல்படாமல் பந்துவீச்சைத் தொடரவே போட்டியை முடிக்காமல் பெவிலியன் திரும்புவதாக இல்லை என்பதுபோல ஆடத்தொடங்கியது ஜோ ரூட், பேர்ஸ்டோ கூட்டணி.

சிராஜ், ஷர்துல் ஆகியோரின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாமல் போனது. ஃபீல்டு செட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் அட்டாக்கிங் முறையில் இருந்து டிபன்ஸுக்கு மாறியது இந்தியா. பேர்ஸ்டோ பந்தைத் தூக்கி அடிப்பார் என லாங் ஆப் பீல்டு வைக்கப்பட அவரோ சிங்கிள்களை ஓயாமல் ஓடத்தொடங்கினார். பேர்ஸ்டோ கடைசி மூன்று போட்டிகளில் தன் நான்காவது சதத்தை அடித்தார். ரூட்டும் தன் அசத்தல் ஃபார்மைத் தொடர்ந்து சதத்தை நிறைவு செய்ய 250 ரன்களுக்கும் மேலாக சேர்ந்து குவித்த அக்கூட்டணி கடைசி வரை களத்தில் நின்றது.

இங்கிலாந்தின் கடைசி நான்கு வெற்றிகள் சேஸிங்கில் வந்தவைதான். நியூஸிலாந்துடனான முதல் டெஸ்டில் 275 ரன்களை 78.5 ஓவர்களில், இரண்டாவது டெஸ்டில் 299 ரன்களை வெறும் 50 ஓவர்களில் இத்தொடரின் கடைசி டெஸ்டிலும் 296 ரன்களை 54.2 ஓவர்களிலும் முடித்துள்ளது அந்த அணி. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 350 ரன்களுக்கு மேலான சேஸ்களில் எதிரணி இரண்டாவது புது பந்தை எடுப்பதற்குள் முடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. இங்கிலாந்து அணியின் ‘Bazzball’ ஆட்டமுறை அவர்கள் கூறியவாரே டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இலக்கணம் எழுதத் தொடங்கியுள்ளது.