Published:Updated:

ENG vs IND : மூன்று நாள் இந்திய ஆதிக்கத்தை ஒரே நாளில் உடைத்த இங்கிலாந்து; நடந்தது என்ன?

ENG vs IND

தனக்கு விரிக்கப்பட்டது வலை என தெரிந்தும்தானே போய் சிக்கிக்கொள்வதுபோல இருந்தது ஷ்ரேயாஸ் தன் விக்கெட்டை இழந்த விதம்.

ENG vs IND : மூன்று நாள் இந்திய ஆதிக்கத்தை ஒரே நாளில் உடைத்த இங்கிலாந்து; நடந்தது என்ன?

தனக்கு விரிக்கப்பட்டது வலை என தெரிந்தும்தானே போய் சிக்கிக்கொள்வதுபோல இருந்தது ஷ்ரேயாஸ் தன் விக்கெட்டை இழந்த விதம்.

Published:Updated:
ENG vs IND
4-ம் நாள் ஆட்டமான நேற்றைய தினம்தான் போட்டியின் உண்மையான மூவிங் டே போலத் தோன்றியது. பொதுவாக போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்படும் ரன்களே எதிரணிக்கு அச்சுறுத்தும் டார்கெட்டாக அமையும்.

ஆனால் தற்போதைய இங்கிலாந்து அணிக்கு இந்த டார்கெட் நிச்சயம் போதுமானதாக இருக்காது. இதற்கான காரணமாக பயிற்சி பட்டறையில் புதிதாக இணைந்திருக்கும் ப்ரெண்டன் மெக்கல்லம், அதன் எதிரொலியாகக் கிடைத்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான வெற்றி ஆகியவற்றைச் சொல்லி தெரிய தேவையில்லை. இந்திய அணியின் 257 ரன்கள் முன்னிலையை 400+ ரன்களுக்கு எப்படியேனும் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Shreyas Iyer
Shreyas Iyer
நன்கு செட்டான இரண்டு பேட்டர்கள், மீதமிருந்த 7 விக்கெட்டுகள் என 450+ ரன்களுக்கே பிரகாசமான வாய்ப்பு இருந்தது. புஜாராவும் ஆண்டர்சன் பந்தில் 3 பவுண்டரிகளை அடித்து நல்ல ஃபார்மில் தெரிந்தார். ஆனால், மூன்றாவது நாளில் எவரிடத்திலும் அசைந்து கொடுக்காத அச்சுவரை நேற்று பிராட் வீழ்த்தினார்.

மிக சுமாரான ஓர் பந்தில் அவருக்குப் பிடித்தமான கட் ஷாட் ஆட முயல அலெக்ஸ் லீஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் அவர். சுமார் 168 பந்துகள் தாக்குப்பிடித்து புஜாரா தன் பணியை நன்கு செய்துவிட்டே திரும்பியிருந்தார். அடுத்து களமிறங்கியவர் ஷ்ரேயாஸ் ஐயர். தனக்கு விரிக்கப்பட்டது வலை எனத் தெரிந்தும் தானே போய் சிக்கிக்கொள்வதுபோல இருந்தது ஷ்ரேயாஸ் தன் விக்கெட்டை இழந்த விதம். பால்கனியில் இருந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் ஷ்ரேயாஸுக்கு ஷார்ட் பால் மட்டுமே வீசச் சொல்லி தன் பௌலர்களுக்கு சைகை காட்ட அதற்கான அனைத்தும் சரியாக அமைத்து வீசினர் இங்கிலாந்து பௌலர்கள். ‘நீங்கள் போட்ட பிளான் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என பாட்ஸ் வீசிய ஷார்ட் பாலை நேர ஆண்டர்சன் கைகளுக்கு அடித்து திரும்பினார் ஷ்ரேயாஸ் ஐயர்.

லீச்சை பவுண்டரி அடித்து வரவேற்ற பண்ட் சிறிது நேரத்தில் அரைசதமும் கடந்தார். ஆனால் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீம் ஆட முயன்று லீச் பந்திலேயே விக்கெட்டை இழந்தார் அவர். அடுத்த வந்த ஷர்துல் தாக்கூரும் ஷார்ட் பால் இரையாக, ஷமி - ஜடேஜா ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. இரண்டு பவுண்டரிகள் அடித்து ஷமி கேட்சாக எதிர்பாராதவிதமாக ஜடேஜாவும் போல்டானார். கடைசி விக்கெட்டாக சிக்ஸர் அடித்த கையோடு பும்ராவும் அவுட்டாக 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து இங்கிலாந்திற்கு டார்கெட்டாக 378 ரன்களை செட் செய்தது இந்தியா.

Bairstow - Root
Bairstow - Root

முதல் இன்னிங்ஸை போல அல்லாமல் 4-வது இன்னிங்ஸிற்கான மிக சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர் இங்கிலாந்து ஓப்பனர்கள். விக்கெட் இழப்பின்றி வெறும் 20 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது அந்த அணி. வேகப்பந்துவீச்சு அவர்களிடத்தில் சுத்தமாக எடுபடாமல் போகவே ஜடேஜாவை அழைத்தார் பும்ரா. ஆனால், அலெக்ஸ் லீஸோ ஸ்லாக் ஸ்விம், ரிவர்ஸ் ஸ்வீம் என இரண்டு பவுண்டரிகள் அடித்து ஜடேஜாவை வரவேற்றார். ஒருவழியாக க்ராவ்லி தவறாக கணித்து செய்த வெல்-லெப்ட் பும்ராவின் அற்புத பந்தில் ஸ்டம்புகளை தகர்த்த இந்திய அணிக்கு முதல் பிரேக் த்ரூ கிடைத்தது. அது இந்திய அணிக்கு மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் பெற்று தந்தது. ஆலி போப் மற்றும் லீஸ் விரைவாக ஆட்டமிழக்க 107/0 என்றிருந்த இங்கிலாந்து 109/3 என்றானது. இந்திய அணியும் ஆட்டத்திற்குள் வந்தது.

ஆனால் அதன்பிறகு சேர்ந்த ரூட்- பேர்ஸ்டோ இணையை பிரிக்க இந்திய பௌலர்களால் எதுவுமே செய்ய இயலவில்லை. இருவரும் அரைசம் கடக்க இங்கிலாந்தின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருக்கிறது இங்கிலாந்து அணி. ரூட் 76 ரன்களுடனும், பேர்ஸ்டோ 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

‘Cricket is a funny game’ என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. சுமார் 7 செஷன் இங்கிலாந்து அணியை மொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. ஆனால் நேற்றைய தினத்தின் இரண்டு செஷன் போட்டியை தலைகீழாக மாற்றியுள்ளது. 7 விக்கெட்டுகள் இருப்பில் இருக்கும் இங்கிலாந்திற்கு வெறும் 119 ரன்கள் மட்டுமே தேவை. டார்கெட்டை இங்கிலாந்து அணி சேஸ் செய்தால் அல்லது இருக்கும் 119 ரன்களுக்குள் இந்திய அணி டிஃண்ட் செய்தால் என எது நடந்தாலும் அது அந்தந்த அணிகளுக்கு புதிய வரலாறு தான்!