Published:Updated:

இந்தியாவின் ரன் அவுட் பரிதாபங்கள்... ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பும் சிட்னி டெஸ்ட்! #AUSvIND

#AUSvIND ( Rick Rycroft )

கடைசி வரையில் இந்தியாவின் கண்ணில் மண்ணைத் தூவிய இந்தக் கூட்டணி, இறுதியில் 197 ரன்கள் முன்னிலையோடு இன்றைய நாளை முடித்துள்ளது! இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, இன்றைய ஒற்றை நாள்.

இந்தியாவின் ரன் அவுட் பரிதாபங்கள்... ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பும் சிட்னி டெஸ்ட்! #AUSvIND

கடைசி வரையில் இந்தியாவின் கண்ணில் மண்ணைத் தூவிய இந்தக் கூட்டணி, இறுதியில் 197 ரன்கள் முன்னிலையோடு இன்றைய நாளை முடித்துள்ளது! இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, இன்றைய ஒற்றை நாள்.

Published:Updated:
#AUSvIND ( Rick Rycroft )
பெண்டுலம் போல இரண்டு பக்கமும் மாறிமாறிப் போய்க் கொண்டிருந்த ஆட்டத்தின் போக்கை, ஒட்டுமொத்தமாக தன்னுடையதாக்கி, மொத்தமாய் தங்கள் பக்கம் பிடித்து நிறுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.

ரன் அவுட் பரிதாபங்கள், பேட்டிங் சொதப்பல்கள், டெயில் எண்டர்களின் நிலைத்து நின்று ஆடாத தன்மை என எல்லாமே துப்பாக்கியாய் இந்தியாவுக்கு எதிராய்த் திரும்ப, தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளது இந்தியா. 197 ரன்கள் முன்னிலையில் வலிமையாய் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது ஆஸ்திரேலியா.

நேற்றைய புஜாரா - ரஹானேவின் திறன்மிக்க ஆட்டம், இன்றும் தொடர்ந்தால், போட்டியில் அது பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பதால் விரைவான விக்கெட்டுகளுக்கான வியூகங்களை வகுத்தது ஆஸ்திரேலியா. ஒன்பது ஓவர்களுக்குள்ளாகவே மூன்று பெளலிங் மாற்றங்களை முயன்று பார்த்தது.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

ஒரு கட்டத்தில், வேகப்பந்துவீச்சு வேலைக்காகாதென, முதல் ஸ்பெல்லில் ஒரு ஓவரை மட்டும் வீசியிருந்த லயானைத் திரும்பக் கொண்டு வந்தார் பெய்ன். லயான் வீசிய பந்தை ரஹானே அடிக்க, அது ஷார்ட்லெக்கில் நின்றிருந்த வேடை நோக்கி நகர்ந்தது. மிகக் கடினமான அந்த கேட்ச்சைப் பிடிக்க வேட் பின்பக்கமாய்ப் பாய, அவரை ஏமாற்றி, விரல் நுனியை மட்டும் தொட்டு, நூலிழையில் தவறி, பந்து கீழே விழுந்தது. 16 ரன்களில் ரஹானேவுக்கு மறுவாழ்வு கிடைத்தது. இழந்த தன்னம்பிக்கையை திரும்பக் கொண்டு வர, அந்த ஓவரின் கடைசிப் பந்தை சிக்ஸருக்குத் தூக்கினார், ரஹானே!

இன்னொரு சதத்தை ரஹானேவிடமிருந்து எதிர்பார்க்கலாமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்க, 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்!' என அடுத்த ஓவரில் பதில் சொன்னார், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பெளலர் கம்மின்ஸ். ஷார்ட் பால் எனும் ஆயுதத்தை வைத்து ரஹானேவைத் தாக்க, அதை டிஃபெண்ட் செய்யும் முயற்சியில் சற்றே குதித்தார் ரஹானே. ஆனால் அவருக்குத் தண்ணீர் காட்டிய பந்து, தப்பித்து ஸடெம்ப்பை தகர்த்தெறிந்தது! கவனத்தை ஒருமுகப்படுத்தி ஆடிக் கொண்டிருந்த ரஹானேவையே ஒரு நொடி அசர வைத்ததற்குப் பரிசாக, அவரது விக்கெட்டை எடுத்துக் கொண்டார் கம்மின்ஸ். போட்டியை 180 டிகிரி கோணத்தில் இது திருப்புமா என்ற பயம் எழுந்தது.

அடுத்து உள்ளே வந்த விஹாரி, தடுத்தாடும் முறையைக் கையில் எடுக்க, புஜாராவோ, முன்னிலும் திறம்பட பந்துகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார். பரிபூரணமான டெஸ்ட் பேட்ஸ்மேன்களாகத் தொடர்ந்தனர் இருவரும்! ஆனாலும் அது வெகுநேரம் நிலைக்கவில்லை.

Rahane | #AUSvIND
Rahane | #AUSvIND
Rick Rycroft

விஹாரிக்கு ஒரு கேட்ச் டிராப் வாய்ப்பை இனாமாய் அளித்தது ஆஸ்திரேலியா. எனினும் தவற்றிலிருந்து பாடம் கற்கவில்லை அவர். லயான் வீசிய பந்தை, மிட்ஆஃப்பில் அனுப்பிவிட்டு, பந்தின் போக்கைக் கவனிக்காமல் ஓடத்துவங்க, பந்தைப் பாய்ந்து பிடித்த ஹேசில்வுட் அதை ஸ்டம்ப்பை நோக்கி எறிய, விஹாரி கோட்டைத் தொடும்முன் பந்து ஸ்டெம்ப்பைப் பதம் பார்த்தது. தற்கொலைக்குச் சமமான ஒரு ரன்அவுட்டால் விஹாரி வெளியேறினார்!

அடுத்ததாக உள்ளே வந்தார் பன்ட். அவருடன் மைண்ட்கேம் ஆட விரும்பியது ஆஸ்திரேலியா. ஸ்டார்க், பெய்ன் என ஒவ்வொருவராய் தொடர்ந்து வார்த்தைப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். பன்ட்டோ காரியமே கண்ணாக, ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். அவருக்குத் தெரியும் முதல்நாளின் 'கேட்ச் டிராப் பாவக்கதைகளை' மறக்கடிக்க, உடனடித் தேவை ஒரு பெரிய இன்னிங்ஸ் என்பது. பன்ட் வந்ததும் ரன்ரேட்டும் ஏறுமுகம் காணத் தொடங்கியது. ஆக்ரோஷம்+அமைதியாக அமைந்த இந்தக் கூட்டணி, ஆஸ்திரேலியர்களுக்கு நிறையவே வேலை வைத்தது. முன்பு செய்ததற்குப் பதிலுதவியாய், பன்ட்டின் கேட்ச் இரண்டுமுறை கைவிடப்பட்டது.

பார்ட்னர்ஷிப் பில்ட் அப் ஆகத் தொடங்கியது! உணவு இடைவேளையில் இந்தியா, 158 ரன்கள் பின்தங்கியிருக்க ஆஸ்திரேலியா, முதல்செஷனில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது.

இரண்டாவது செஷன் தொடங்கியது. பன்ட், கம்மின்ஸ் வீசிய பந்தை புல் ஷாட்டாய் மாற்ற முயல, பந்து அவரது இடதுமுழங்கையைத் தாக்கியது. வலியைச் சமாளித்து, தொடர்ந்து விளையாடினார் பன்ட். பொறுப்பாக ஆடிய புஜாரா-பன்ட் பார்ட்னர்னர்ஷிப்பும், புஜாராவின் ரன்களும் அடுத்தடுத்து 50ஐ தொட்டன.

சிட்னியில் கடந்த சீசனில், புஜாராவின் 193-ம், பன்ட்டின் 159-ம் அவ்வப்போது கண்முன் வந்துபோக, இன்றும் அந்த மாயத்தை இவர்கள் இருவரும் நிகழ்த்துவார்களா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. அதனைச் சுக்குநூறாக்கி, தொடர்ந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட வலையில் விழுந்து, பன்ட் வெளியேறினார். போட்டி மொத்தமாய், ஆஸ்திரேலியாவிடம் அடைக்கலமானதும் இந்த நொடியில்தான்.

Ravindra Jadeja | #AUSvIND
Ravindra Jadeja | #AUSvIND

36 ரன்களுடன் வெளியேறிய பன்ட்டின் விக்கெட் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள், துல்லியமான பந்துவீச்சில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தி, பேரிடியை இறக்கினார் கம்மின்ஸ். இந்தத் தொடரில் இதுவரை கம்மின்ஸ் நான்குமுறை புஜாராவை ஒரேமுறையில் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். 4-வது ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி புஜாராவை வீழ்த்தி வருகிறார் கம்மின்ஸ். செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வதால், அணியைக் காப்பாற்றும் ஆபந்தாண்டவனாக புஜாரா மாறாமல் இருப்பது இந்தத் தொடரில் இந்தியாவுக்கு பெரிய தலைவலியை கொடுக்கிறது.

ஐந்து பந்துகளுக்குள், இரண்டு விக்கெட்டுகளை இழந்து அல்லாடத் தொடங்கியது இந்தியா. இதனைத் தொடர்ந்து புதிதாய்க் களத்தில் இணைந்தனர் ஜடேஜாவும், அஷ்வினும்! இந்த இரண்டு டாப்கிளாஸ் ஸ்பின்னர்களும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார்கள் என்ற ரசிகர்களின் நம்பிக்கை வெகுநேரம் நிலைக்கவில்லை. கிரீன் வீசிய பந்தை மிட்ஆஃப்பில் அனுப்பிய ஜடேஜா, ரன் ஓட அஷ்வினை அழைக்க, அஷ்வின் வேகமாக ஒடாமல் மெதுவாக ஒடி கோட்டைத் தொடும்முன் ஸ்டம்ப் தகர்க்கப்பட்டு, அஷ்வின் ஆட்டமிழந்தார். 206/7 எனத் தள்ளாடத் தொடங்கியது இந்தியா.

இதைத் தொடர்ந்து வந்த சைனியும் வெகுநேரம் நிலைக்கவில்லை. ஸ்டார்க்கின் ஷார்ட் பாலில் சைனி வெளியேற, பும்ரா உள்ளே வந்தார்.

எஞ்சியிருக்கும் இரண்டு விக்கெட்டுகளுக்காகவாவது, பொறுமையைக் கையிலெடுத்து, ஒரு கௌரவமான ஸ்கோரைப் பதிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை மொத்தமாய்ப் பொய்த்துப் போனது, பும்ராவின் ரன் அவுட்டால்! இந்த முறையும் வில்லனாக மாறி இருந்தது ஜடேஜாதான்! முந்தைய போட்டியில் ரஹானேவின் ரன்அவுட்டுக்குக் காரணமாக இருந்த ஜடேஜா இன்றைய போட்டியிலும், அஷ்வின் மற்றும் பும்ராவின் விக்கெட்டுகள் விழக் காரணமாக இருந்தார். இதற்கடுத்து சிராஜுடன் இணைந்து ஜடேஜா நடத்திய கடைசிநேரப் போராட்டங்கள், முழுதாய்க் கைகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஸ்டார்க் வீசிய பவுன்சர் ஜடேஜா கையையும் பதம் பார்த்தது. வலியுடன் தொடர்ந்து ஆடியவரால் அடுத்து பெரியதாக ஆடமுடியவில்லை.

முடிவில் 244 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.

#AUSvIND
#AUSvIND

ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு ரன்அவுட் என்பதே பெரியகுற்றம் எனும் போது, ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப்போல் ஓடி, மூன்று விக்கெட்டுகளை இந்தியா ரன்அவுட்டால் இழந்ததெல்லாம் மன்னிக்க முடியாத குற்றமே! "ரன்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், விக்கெட்தான் விலைமதிப்பில்லாதது!" என்ற டெஸ்ட் போட்டியின் மந்திரத்தை மொத்தமாய் இந்தியவீரர்கள் மறந்தனர். அதன் விலையாக, முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியாவை விட இந்தியா 94 ரன்கள் மோசமாகப் பின்தங்கியது. கடைசி 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தியது. நல்ல முன்னிலை எடுத்தது மட்டுமின்றி, ஏழு செஷன்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகவே போட்டியின் போக்கு தொடர்ந்தது.

காயம் காரணமாக, பன்ட்டுக்குப் பதிலாக சாஹா விக்கெட் கீப்பராக இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்தார். அதேபோல் ஜடேஜாவிற்கும் பேட்டிங் செய்யும் போது காயமேற்பட்டதாகச் சொல்லி, அவருக்குப் பதிலாக மயாங்க் சப்ஸ்யூட்டாகத் தொடர்ந்தார். தொடர் முழுவதும் வீரர்களின் காயங்களைக் கண்டு கலக்கம் கொண்டுள்ள இந்தியாவுக்கு இது மேலும் ஒரு தலைவலியாகி உள்ளது.

நாளைக்குள் ஜடேஜா களத்திற்குத் திரும்புவது அவரின் ஸ்கேன் முடிவுகளை பொறுத்தே உள்ளது, அவர் திரும்ப முடியாத பட்சத்தில் இந்தியாவின் பெளலிங் பலம் மேலும் குறையும். அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்யும்போதும் ஜடேஜா மற்றும் பன்ட் இல்லாமல் இருந்தால் அது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகவே இருக்கும்.
புகோவ்ஸ்கி மற்றும் வார்னர் ஓப்பனர்களாக இறங்கினர். குறைவான ஸ்கோருக்குள் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை விழ வைக்க வேண்டிய அவசியத்தை இந்திய பெளலர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். இந்தியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸுக்கான சிறப்பான தொடக்கத்தை சிராஜ் கொடுத்தார். போன இன்னிங்ஸில் அற்புதமாக ஆடி அரைச்சதம் கடந்த புகோவ்ஸ்கியை வெறும் 10 ரன்களில் வழியனுப்பினார் சிராஜ்.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

லாபுசேன் உள்ளே வந்து வார்னருடன் இணைந்தார். அடுத்ததாக வார்னரைத் தூக்கவும் அஷ்வினைப் பத்தாவது ஓவரிலேயே கொண்டு வந்தார் ரஹானே. அவரும் கொஞ்சமும் தாமதிக்காமல், வீசிய இரண்டாவது பந்திலேயே வார்னரை எல்பிடபிள்யூ ஆக்கினார். ஆஸ்திரேலியாவின் ரிவ்யூவும் இந்தியாவுக்குச் சாதகமாகவே முடிய, நடையைக் கட்டினார் வார்னர். இத்துடன் பத்து முறை வார்னரின் விக்கெட்டை அஷ்வின் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக உருவானது ஸ்மித் - லாபுசேன் கூட்டணி. ஒட்டுமொத்த போட்டியையும் இதுதான் நிர்ணயிக்கப் போகிறது என்பது ரஹானேக்குத் தெரியும் என்பதால் இதை உடைக்க இயன்ற எல்லாவற்றையும் மாற்றி மாற்றி முயன்றார். ஆனாலும் பயனில்லை. அஷ்வின் பந்தில் எல்பிடபிள்யு ஆகி 'அம்பயர்ஸ் கால்' என்னும் ராசியால் தப்பிப்பிழைத்த ஸ்மித்தையும் லாபுசேனையும் அதற்கு பின் இந்திய பெளலிங் பீரங்கிகளால் துளையிடவே முடியவில்லை. ரன்கள் ஒருபக்கம் ஏறிக் கொண்டே இருக்க, விக்கெட்டையும் எடுக்க முடியாமல் தத்தளித்தது இந்தியா. தங்களுக்குரிய குழியைத் தாங்களே வெட்டிக் கொள்வதைப் போல, தங்களால் துரத்த முடியாத இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப் போவதற்கான அடிக்கல்லை இந்தியா இன்று இட்டது!

#AUSvIND
#AUSvIND

கடைசி வரையில் இந்தியாவின் கண்ணில் மண்ணைத் தூவிய இந்தக் கூட்டணி, இறுதியில் 197 ரன்கள் முன்னிலையோடு இன்றைய நாளை முடித்துள்ளது. இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, இன்றைய ஒற்றை நாள்.

நாளை ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து, மீதமுள்ள விக்கெட்டுகளை இன்னும் ஒரு 100 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே ஒரு சிறு நம்பிக்கை பிறக்கும். ஆனால், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கிட்டத்தட்ட தன் பக்கம் கொண்டுபோயிருக்கிறது ஆஸ்திரேலியா.