Published:Updated:

`ஒண்ணுமே இல்லை... பார்த்துக்கோங்க!' - இங்கிலாந்து ரசிகர்களுக்கு வார்னரின் `மெசேஜ்'

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்திருக்கிறது.

Warner
Warner ( Twitter )

இங்கிலாந்து சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்துவருகிறது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 284 ரன்களும் இங்கிலாந்து அணி 374 ரன்களும் எடுத்தன.

Tim paine
Tim paine
Twitter

இதையடுத்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடங்கியது. வார்னர், பான்கிராப்ட் என தொடக்க வீரர்கள் இருவரையும் முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலியா இழந்தது. வார்னர் 8 ரன்களிலும் பான்கிராப்ட் 7 ரன்களிலும் வெளியேறினர். இதனால், அந்த அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து, மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோத்த உஸ்மான் கவாஜா - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. கவாஜா 40 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெட், ஸ்மித்துடன் சேர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

Steve Smith
Steve Smith
Twitter
``இது மோட்டிவேஷன் லெவல் இன்னிங்ஸ்!” - ஸ்மித்தின் வெறித்தனம் #Ashes

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 46 ரன்களுடனும் ஹெட் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 34 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் குவித்து அசத்திய ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் எல்லைக்கோடு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது, இங்கிலாந்து ரசிகர்கள் வார்னர் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை நினைவுபடுத்தி கோஷமெழுப்பினர்.

Warner
Warner
Twitter

போட்டியின் முதல்நாள் முதலே பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னர், ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரை டீஸ் செய்யும் விதத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கோஷங்கள் மற்றும் போர்டுகள் வைத்திருந்தனர்.

இந்தநிலையில், வார்னரை சீண்டும் வகையில் அவர்கள் கோஷமெழுப்பவே, தனது இரண்டு பாக்கெட்டுகளையும் காட்டி அதில் ஒன்றும் இல்லை என்பது போல வார்னர் செய்துகாட்டினார். சிரித்துக்கொண்டே வார்னர் தனது பாக்கெட்டுகளில் ஒன்றும் இல்லை என்று காட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Warner
Warner
Twitter

அதேபோல், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஸ்டோக்ஸ் வீசிய 29வது ஓவரில் பந்து பவுன்ஸாகி ஸ்மித்தின் ஹெல்மெட்டைத் தாக்கியது. காதுப்பகுதிக்கு அருகில் பந்து தாக்கியதில் ஸ்மித் நிலைகுலைந்தார். இருப்பினும் அவருக்குக் காயம் ஏற்படவில்லை. அதன்பின்னர், தொடர்ந்து அவர் பேட்டிங் செய்தார்.