Published:Updated:

``அந்த ஒரு முடிவுதான் கோலியின் வாழ்க்கையை மாற்றியது!'' - டேவ் வாட்மோர் #VikatanExclusive

மு.பிரதீப் கிருஷ்ணா
பா.காளிமுத்து

``தன் அணிக்குத்தானே முன்மாதிரியாக இருந்து வழிநடத்துபவர் கோலி. விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வழிந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருப்பார். அவர் அப்படித்தான்."

Dav Whatmore
Dav Whatmore

டேவ் வாட்மோர் - கிரிக்கெட் உலகின் மிகமுக்கியமான பெயர். தலைசிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர். பல கிரிக்கெட் அணிகளின் முன்னேற்றத்தில் மிகமுக்கியப் பங்காற்றியவர். 1996 உலகக் கோப்பையை வென்று அதிர்வலைகள் ஏற்படுத்திய இலங்கை அணியின் பயிற்சியாளர் இவரே. விராட் கோலியின் தலைமையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளரும் இவரே.

Vikatan

2007 உலகக் கோப்பையில் இந்தியாவை வெளியேற்றிய கத்துக்குட்டி வங்கதேச அணிக்கும், இத்தனை ஆண்டுகள் ரஞ்சிக்கோப்பையில் கத்துக்குட்டியாக இருந்துவிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக காலிறுதிக்கும், அரையிறுதிக்கும் முன்னேறிய கேரளா அணியின் இப்போதைய பயிற்சியாளரும் இவரேதான்!

தான் பயிற்சியளித்த ஒவ்வோர் அணியையும் மெருகேற்றியவர் அவர். இலங்கை, இந்தியா (அண்டர் 19) அணிகள் கோப்பை வென்றிருந்தாலும், வங்கதேச அணியில் இவர் ஏற்படுத்திய மாற்றம் மிகப்பெரியது. இவரது பயிற்சிக்காலத்தில்தான் வங்கதேச அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஒவ்வொரு முன்னணி அணிக்கும் சவாலளித்தது. ஷகிப், மொர்தசா, தமீம், முஷ்ஃபிகுர் என இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் தூண்களாக இருந்தவர்களைக் கண்டெடுத்தவர் வாட்மோர். இப்போது கேரளா ரஞ்சி அணியின் தரத்தை உயர்த்திக்கொண்டிருப்பவரை, சென்னையில் நடந்த ஒரு விழாவில் சந்தித்தேன். அவரது பயிற்சி முறை, 2007 உலகக் கோப்பை, கோலி, ஷகீப் அல் ஹசன்... எனப் பல விஷயங்களைப் பற்றியும் மனம் திறந்து பேசினார்.

Dav Whatmore
Dav Whatmore

இலங்கை முதல் கேரளா வரை நீங்கள் பயிற்சியளித்த ஒவ்வோர் அணியின் தரத்தையும் உயர்த்தியிருக்கிறீர்கள். சில எதிர்பாராத முடிவுகளை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள். அது எப்படி முடிந்தது... உங்களின் ரகசிய ஆயுதம் என்ன?

ரகசிய ஆயுதம் என்றெல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் நான் வேலை செய்யும் முறையைப் பொறுத்தது. அதை எப்படிச் செய்கிறேன் என்பதைப் பொறுத்தது. அந்த வீரர்களுக்கு நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. எனக்காக, சிறப்பாக விளையாடவேண்டும் என்று வீரர்கள் நினைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு பயிற்சியாளர், முதலில் அவர்களுக்கொரு நல்ல நண்பனாக இருக்கவேண்டும். பயிற்சியாளராக, ஒரு பெற்றவனாக... அன்பானவனாக, தேவைப்படும்போது ஒழுக்கத்தை நிலைநாட்டுபவனாக, வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை நன்கு அறிந்தவனாகவும் இருக்கவேண்டும். இப்படிப் பல விஷயங்கள் சேர்ந்துதான் ஒருவரை உருவாக்குகிறது. அதுதான் நான் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், எப்போதும் அணுகக்கூடியவராகவும், பாசிட்டிவானவராகவும் இருப்பது முக்கியம்!

சமீப காலமாக இந்திய கிரிக்கெட்டில் நடந்துவரும் கேப்டன் - கோச் பிரச்னைகளைப் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா, அப்படி இருக்கவேண்டுமென்றால், அது எந்த இடத்தில் இருக்கவேண்டும்?

என்னைப் பொறுத்தவரை, பயிற்சியாளர், தேர்வுக்குழு, அணியின் மேனேஜர் என அனைவருமே கேப்டனுக்கு உதவுபவர்களாக இருக்கவேண்டும். ஒரு போர்க்களத்தில் அணியை வழிநடத்துவது கேப்டன்தான். அந்த கேப்டனுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் முழு நம்பிக்கையுடன் இல்லையென்றால், எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. அணியின் ஆலோசனைக்கூட்டங்களின்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை முன்வைப்பார்கள். பயிற்சியாளர் சொல்வதிலிருந்து கேப்டன்கள் மாறுபடலாம். சில சமயம் கேப்டன்களின் தரப்பை பயிற்சியாளர்கள் ஏற்காமல் போகலாம். ஆனால், கடைசியில் வீரர்கள் சேர்ந்துதான் பயிற்சியாளர்களை உருவாக்குகிறார்கள். இதை மற்றொரு திசையில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கேப்டன், தனக்கு இந்த அணிதான் வேண்டும், இப்படித்தான் ஆடவேண்டும் என்று சொல்லும்போது, பயிற்சியாளர்கள் அதற்கு ஒத்துழைப்பதுதான் அணிக்கு நல்லது.

Dav Whatmore
Dav Whatmore

உங்கள் அணிகளின் முடிவுகள் எப்போதுமே பேசப்படும். 96' உலகக் கோப்பையில் ஓப்பனர்களின் அதிரடி அணுகுமுறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பேசப்படுகிறது. அதேபோல், 2007-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சில முடிவுகள் மிகவும் ஆச்சர்யமளிப்பதாக இருந்தது. உலகக் கோப்பைக்கு முன்பு 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த தமீம் இக்பால் அணியில் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், சீனியர் வீரர் ஜாவேத் ஓமருக்குப் பதிலாக இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்து இந்தியாவை வீழ்த்துவதற்குக் காரணமாகவும் அமைந்தார் தமீம். அந்த முடிவைப் பற்றிச் சொல்லுங்கள்...

அப்போது அனுபவம் என்பதைவிட ஃபார்முக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். தமீம் அந்த உலகக் கோப்பைக்கு முன் நல்ல ஃபார்மில் இருந்தார். அந்த 4 சர்வதேசப் போட்டிகளை மட்டும்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், நாங்கள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் மிகச் சிறந்த முறையில் அந்தத் தொடருக்குத் தயாராகியிருந்தோம். மற்ற அணிகளுக்கு முன்பாகவே வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு முகாமிட்டோம். உள்ளூர் அணிகளுடனும், அசோசியேட் அணிகளுடனும் சிலபல போட்டிகளில் மோதினோம். அதில் தமீமின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது. துளியும் பயமில்லாத ஒரு ஓப்பனர் அப்போதும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த உலகக் கோப்பையில் இந்தியா, வங்கதேசம் மோதிய போட்டி, வங்கதேச கிரிக்கெட் வரலாற்றின் மிகமுக்கிய போட்டிகளில் ஒன்று. அதற்கு முன் மொத்தமே 40 ஒருநாள் போட்டிகளில்கூட விளையாடிராத ஷகிப், தமீம், முஷ்ஃபிகுர் ஆகியோரின் அரைசதங்களாலும், மொர்தசாவின் அசத்தல் பௌலிங்காலும் இந்தியாவை வீழ்த்தியது வங்கதேச அணி. அந்தப் போட்டிக்கென்று ஸ்பெஷலாகாத் தயாராகினீர்களா, இந்தியாவுக்கு எதிராக என்ன திட்டம் வகுத்திருந்தீர்கள்?

சில திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால், அன்றைய ஆடுகளம்தான் போட்டியின் முடிவில் முக்கிய அங்கம் வகித்தது. நான் முன்பு சொன்னதுபோல் அந்தத் தொடருக்கு முன் நன்றாக பயிற்சி பெற்றிருந்தோம். 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்யுமளவு தயாராகியிருந்தோம். ஆனால், போட்டி நடந்த டிரினிடாட் மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதாக இருந்தது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், பாதி ஓவர்களைக்கூட கடக்கமாட்டோம் என்றார்கள். அதனால் டாஸை வெல்வது முக்கியம் என்று நினைத்தோம். ஆனால், டிராவிட் டாஸ் வென்றுவிட்டார். அவருக்கு முன் மைக் போகும்வரை பதற்றமாக இருந்தது. அவர் பேட்டிங் என்று சொன்னபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. (மேலே பார்த்துக்கொண்டே Thank God என்று அப்போதிருந்த மனநிலையை அப்படியே பிரதிபலித்தார்!)

ஆடுகளத்தின் தன்மையையை அறிந்திருந்ததால், பந்தை நன்றாக மூவ் செய்தால் போதும் என்று முடிவெடுத்தும். எங்கள் பௌலர்கள் அதைச் சிறப்பாகச் செயல்படுத்தியதால் இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. உண்மையில் அன்று நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். டாஸ் தோற்றிருந்தாலும், முதலில் பந்துவீசியது எங்களின் அதிர்ஷ்டம். ஒருவேளை, இந்திய அணி எங்களைக் குறைவாக மதிப்பிட்டு பேட்டிங் தேர்வு செய்திருக்கலாம். தெரியவில்லை. ஆனால், அன்று முதலில் பேட்டிங் செய்திருந்தால், இந்தியா மட்டுமல்ல, எந்த அணியுமே தடுமாறியிருக்கும்.

ஷகிப் அல் ஹசன் - அன்று நீங்கள் பார்த்த அந்த இளைஞர் இன்று கிட்டத்தட்ட உலகக் கோப்பையின் தொடர் நாயகனாகிவிட்டார். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் முன்னேற்றத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறார். நன்கு அனுபவப்பட்டிருக்கிறார். 2003-04 காலகட்டத்திலிருந்தே உள்ளூர்ப் போட்டியில் ஆடியவரைக் கவனித்திருக்கிறேன். மிகப்பெரிய திறமைசாலி. அணிக்கு என்ன தேவைப்பட்டாலும், ஷகிப் அங்கு முன்னால் வந்து நிற்பார். சாதிக்கவேண்டும் என்ற வெறி அப்போதிருந்தே அவரிடம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். பேட்டிங், பௌலிங் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த ஃபீல்டரும்கூட! ஒல்லியான தேகம்தான்... ஆனால், மிகவும் பலமானவர். மனதளவிலும் மிகவும் பலசாலி. சில சாம்பியன் வீரர்களின் கண்களைப் பார்த்தாலே அவர்களின் தாகம் தெரிந்துவிடும். ஷகிப்பின் கண்களில், சாதிக்கவேண்டும் என்ற வெறியை நான் அப்போதே பார்த்திருக்கிறேன். தனது ஆட்டத்தில் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பார். அதனால்தான் இன்று அவரால், ஒரு முழுமையான வீரராக, உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக இருக்கமுடிகிறது.

Dav Whatmore
Dav Whatmore

விராட் கோலி...

அவரைப் பற்றி என்ன சொல்வது. அற்புதமான வீரர். மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது மிகவும் அதிக ஆர்வத்தை மைதானத்தில் வெளிப்படுத்துகிறார். அண்டர்-19 காலத்திலிருந்தே அப்படித்தான். ஆட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்துவார். மிகவும் ஆர்வத்தோடு பயிற்சி செய்வார். தன் அணிக்குத்தானே முன்மாதிரியாக இருந்து வழிநடத்துபவர். விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வழிந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருப்பார். அவர் அப்படித்தான். (சிரிக்கிறார்) பயிற்சியின்போதுகூட தன்னுடைய 100 சதவிகித உழைப்பையும் கொட்டும் ஒரு வீரர் அவர்.

அவர், உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாவார் என்று அப்போது எதிர்பார்த்தீர்களா?

அப்போது நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. முதல் தரப் போட்டிகளை மிகவும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் இன்னும் சில வீரர்கள் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது, இவர் இப்படியொரு வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அனைத்தையும் தன் முயற்சியால் மாற்றியிருக்கிறார் விராட். எப்போது ஃபிட்னஸ் முக்கியம் என்பதை உணர்ந்து, உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்தாரோ, அன்று அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அவரது வாழ்க்கையின் திருப்புமுனை அதுதான் என்று நான் நினைக்கிறேன்!

Dav Whatmore
Dav Whatmore

இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே எனப் பல நாடுகளின் கிரிக்கெட் உங்களுக்குப் பரிட்சயம். இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் ஃபார்மேட் பற்றிய உங்கள் கருத்து என்ன?

மிகவும் சிறப்பாக இருக்கிறது. மூன்று ஃபார்மட்டுக்கும் ஒரு தொடர், பல குரூப்கள் என்று போட்டி கடுமையாக இருக்கிறது. சில பலவீனமான அணிகள் இருந்தாலும், பல அணிகள் கடுமையாகப் போட்டியளிக்கின்றன. நான் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் பணியாற்றியதில்லை. மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் தரமாக இருக்கிறது. ஷெஃபீல்டு ஷீல்டு, பிளங்கட் ஷீல்டு, கவுன்டி தொடர்களின் தரத்தில் இந்திய முதல் தர கிரிக்கெட்டும் இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம். இந்திய சர்வதேச அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் இதன் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.