வெறும் 18 நொடி என்ன செய்துவிட முடியும்! அதுவொரு நீண்ட நெடிய விவாதங்களுக்கு கிரிக்கெட் உலகைக் கூட்டிச் செல்லும் என யாருக்கு தான் தெரியும்?!
ஆம், கடந்த சில நாட்களாக கிரிக்கெட் உலகில் பரபரப்பாக விவாதிக்கப்படும் கருத்துக்கான உந்துவிசை தென்னாப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டனும் ஆல் ரவுண்டருமான டெனே வான் நீக்ரிக்.
2 கிலோமீட்டர் தூரத்தை 9 நிமிடம் 30 நொடிகளுக்குள் கடக்க வேண்டும் என்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனையை எட்ட முடியாமல் வெறும் 18 நொடிகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் டி20 உலகக்கோப்பை அணியில் தனது இடத்தை இழந்துள்ளார்.
இது குறித்து, தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ஹில்டன் மொரிங் கூறியதாவது, `உடற்தகுதி விஷயத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது.'

கேப்டனையே அணியிலிருந்து வெளியேற்றிருக்கும் இந்தப் பஞ்சாயத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பல வீரர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். டி20 உலகக்கோப்பையில் ஆடப்போகும் இங்கிலாந்தின் கேட் க்ராஸ்,
"ஆண்களை விட பெண்கள் உடல் தகுதியை பராமரிப்பது மிகவும் கடினம். நாங்கள் உடற்தகுதியை விரைந்து இழந்துவிடுவோம். அத்தகைய உடலமைப்பை தான் நாங்கள் கொண்டுள்ளோம்!" மேலும், "நான் கிரிக்கெட்டில் தான் சிறந்து விளங்குவேன், இரண்டு கி.மீ ஓடுவதில் நாங்கள் சிறந்தவர்கள் அல்ல! நான் வீசப்போகும் 10 ஓவர்களுக்கு ஏற்றவாறு உடற்பலத்துடன் இருந்தால் போதுமானது!" என்றும் கூறியுள்ளார்

கடந்த வருடம் சிசாண்டா மகாலா, லிசெல்லா லீ ஆகியோரும் இந்த தேர்வுமுறை குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இது மட்டுமில்லாமல் உலகக் கிரிக்கெட்டில் ரக்கீம் கார்ன்வால், ஆசாம் கான் உள்ளிட்ட பல வீரர்கள் உடற்பருமன் காரணமாக அவர்களுக்கு சிறந்த உடற் திறன் இல்லை என கூறி தேசிய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் நடந்தேறியது.
டெனே வான் நீக்ரிக் கடந்த 2021-ல் காலில் முறிவு ஏற்பட்டதிலிருந்து எந்தவொரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடைசியாக "the hundred" தொடரில் பங்கேற்றிருந்தார். இப்போது நடக்கும் முத்தரப்பு தொடரில் கூட அவர் இடம் பெறவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு அவர் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
ஒரு வீரருக்கு உடற்தகுதி முக்கியம் தான். ஆனால், அவரின் திறமைகளும் அதே அளவிற்கு முக்கியமான ஒன்றாகும்!